வரவேற்பு நாடான இந்தியாவை அதிரவைத்து 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது தென் ஆபிரிக்கா

Published By: Vishnu

10 Oct, 2025 | 03:37 AM
image

(நெவில் அன்தனி)

விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால்  அபார வெற்றியீட்டியது.

இப் போட்டியில் தோல்வி அடைந்ததால் வரவேற்பு நாடான இந்தியா பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது.

இந்தியா சார்பாக ரிச்சா கோஷ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் லோரா வுல்வார்ட், நாடியா டி கிளார்க் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் அதனை விஞ்சியதுடன் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கும் வழிவகுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதிலும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் வீழ்ந்ததால் (102 - 6 விக்.) அவ்வணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால். ரிச்சா கோஷ், ஸ்நேஹ் ராணா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

ஆனால், அவர்களது முயற்சி இறுதியில் வீண் போயிற்று.

ப்ராத்திக்கா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.

ஸ்ம்ரித்தி மந்தனா 23 ஓட்டங்களையும் ஹார்லீன் டியோல் 13 ஓட்டங்டங்களையும் பெற்றனர். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ப்ராத்திகா ராவல் 37 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 3ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (9), ஜெமிமா ரொட்றிகஸ் (0), தீப்தி ஷர்மா (4), அமன்ஜோத் கோர் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறினர். (153 - 7 விக்.)

இந் நிலையில் ரிச்சா கோஷ், ஸ்நேஹ் ராணா ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 88 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (251 - 9 விக்.)

ஸ்நேஹ் ராணா 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 94 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் க்ளோ ட்ரையொன் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நொன்குலுலேக்கோ மிலபா 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 48.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

தஸ்மின் ப்றிட்ஸ் (0), சுனே லுஸ் (5) ஆகிய இருவரும் முதல் 6 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (18 - 2 விக்.)

தொடர்ந்து மாரிஸ்ஆன் கெப் (20), ஆன்எக் பொஷ் (1), சினாலோ ஜஃப்டா (14) ஆகிய மூவரும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (81 - 5 விக்.)

எனினும் ஒரு புறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீராங்கனை லோரா வுல்வார்டும் மத்திய வரிசை வீராங்கனை க்ளோ ட்ரையொனும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

லோரா வுல்வார்ட் 111 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் உரமூட்டினர்.

க்ளோ ட்ரையொன் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து நாடின் டி க்ளார்க், அயாபொங்கா காக்கா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்த இணைப்பாட்டத்தில் அயாபொங்கா காக்காவின் பங்களிப்பு வெறும் ஒரு ஓட்டமாகும்.

மறுமுனையில் மிகத் திறமையாக அதிரடியைப் பிரயோகித்த நாடின் டி க்ளார்க் 54 பந்துகளில் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்தி கௌத் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: நாடின் டி க்ளார்க்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35
news-image

லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட...

2025-11-08 04:10:15
news-image

ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை...

2025-11-08 04:05:24
news-image

இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக...

2025-11-08 03:59:56
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-07 23:23:32
news-image

ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும்...

2025-11-06 19:26:24
news-image

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில்...

2025-11-06 17:30:20
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-06 13:46:09
news-image

மகளிர் பிறீமியர் லீக் 2026 :...

2025-11-06 13:26:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 15:39:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 13:59:12