மலபே சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சில செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரச அலுவலகங்களுக்குள் பிரவேசிப்பதற்கும் வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்கு எதிராகவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கண்டியில் இருந்து முன்னெடுத்துள்ள 5 நாள் தொடர் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ள நிலையிலலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு தடை விதித்துள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் 5 நாள் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி கடந்த 31 ஆம் திகதி கண்டி பெராதெனிய பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியது.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கும் குறித்த பேரணி இன்று கொழும்பை வந்தடைந்து பாரிய ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை உடனடியாக மூடுமாறும், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர உட்பட ஏனைய மாணவர்களை விடுதலைசெய்ய வலியுறுத்தியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.