ஒரு குழந்தையின் தாயைக் கடத்திய நபரை மூன்று பொலிஸ் நிலையங்களின் விசேட நடவடிக்கையின் மூலம் கிரியுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வீரபொக்குண பிங்கிரியவைச் சேர்ந்தவர், கடத்தப்பட்ட பெண் கந்தளைப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாய் ஆவார்.

சந்தேக நபர் குறித்த பெண்ணைக் கடத்தி பல நாட்களாக காரில் வைத்திருந்ததாகவும் அப் பெண்ணை வாரியபொல, ஹெட்டிபொல ஊடாக வேறொரு இடத்துக்கு பலவந்தமாக அழைத்துச்செல்லும் போது குறித்த பெண் கார் யன்னலூடாக தலையை வெளியே நீட்டி உதவிக்காக சத்தம் போட்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய ஹெட்டிப்பொல நாரம்மல மற்றும் குளியாபிட்டிய பொலிஸார் இணைந்து நாரம்மலை நகரத்தை கடந்து சென்ற குறித்த காரை மடக்கிப் பிடிப்பதற்காக கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதெியொன்றில் திடீரென ஒரு லொறியை நிறுத்தினர் வேகமாக வந்த கார் லொறியில் மோதிய போது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ததுடன் குறித்த பெண்னையும் காப்பாற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை விசாரணையின் பிறகு நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் காப்பாற்றப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காகவும் வைத்திய பரிசோதனைக்காகவும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.