ரசிகர்களை 'முதல் நாள் முதல் காட்சி'க்காக தயார்படுத்தும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படக் குழு

07 Oct, 2025 | 04:33 PM
image

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்ந்த விஜய்- தீவிர அரசியலில் இறங்கி, அதில் மக்கள் நல பணியை மேற்கொண்டு வருவதால்... காலியான அந்த நட்சத்திர இடத்தை தொடுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தை 'முதல் நாள் முதல் காட்சி'யில் ரசிகர்களை பட மாளிகைக்கு வரவழைப்பதற்காக படக்குழு - நூறு நாள் முன்பாகவே ரசிகர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்துகிறது. இதற்காக படக்குழுவினர் 'இன்னும் நூறு நாட்களே உள்ளன..' என்ற ரீதியில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும்' பராசக்தி' எனும் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா, அப்பாஸ், ராணா டகுபதி, ப்ருத்வி ராஜன், குரு சோமசுந்தரம், பஸில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் 1965 களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட களத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த படம் வெளியீட்டிற்கு நூறு நாள் உள்ளதால் ... அதை குறிக்கும் வகையிலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதுடன் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறாததால் அவர் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்திற்கு சர்வதேச அளவிலான திரை வணிகர்களிடம் ஆர்வம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்