இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருக்கும் நிலையில், அவர் விசாரணை செயன்முறைகளில் உள்வாங்கப்படுவாரா என்று, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையாளர்கள், இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29ஆவது கூட்டம் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி கடந்த 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.
கடந்த 26ஆம் திகதி இந்தக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அவ்வலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னகோன், ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்துகொண்டதுடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து நிகழ்நிலை முறையில் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தின் போது வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவில் அங்கம் வகிக்கும் அறிக்கையாளர் ஒருவர் ‘‘இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக் ஷ அறிவித்திருக்கின்றார். விசாரணை செயன்முறைகளில் அவர் உள்வாங்கப்படுவாரா” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் சோமரத்ன ராஜபக் ஷவை சந்தித்து அவசியமான தகவல்களைப் பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பதிலளித்திருந்த பொலிஸ் திணைக்கள அதிகாரியொருவர், சோமரத்ன ராஜபக் ஷவின் வெளிப்படுத்தல்கள் இலங்கையின் குற்றவியல் நீதிக் கட்டமைப்பின் சுயாதீனத்துவம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநிலைமை என்பவற்றுக்கான நிரூபனமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின்போது சோமரத்ன ராஜபக் ஷவினால் செம்மணி புதைகுழி தொடர்பில் முதன்முதலாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கமளித்த அந்த அதிகாரி, சோமரத்ன ராஜபக் ஷ அடையாளம் காட்டிய பகுதியில் அகழ்வின் ஊடாக 15 எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டதாகவும் அவற்றில் நான்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெறும் நிலையில் அங்கு இதுவரையில் 104க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது இந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும்பட்சத்தில் மேலும் எலும்புக் கூடுகள் மீட்கப்படும் சூழ்நிலை காணப்படுகிறது.
1995, 1996ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்ப்பாணம் படையினரால் மீளவும் கைப்பற்றப்பட்டிருந்தது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட பகுதியில் பெருமளவானோர் படைத்தரப்பினரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல், சோமரத்ன ராஜபக் ஷவும் செம்மணிப் பகுதியில் 300 தொடக்கம் 400 பேர் வரையிலானோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக 1997ஆம் ஆண்டு சாட்சியமளித்திருந்தார்.
சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் அவருக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியதையடுத்தே இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதன் பின்னர் செம்மணிப் பகுதியில் சில இடங்களை அவர் அடையாளம் காட்டினார். அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது 15 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்த புதைகுழி விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் கொழும்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. அத்துடன் விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
தற்போது செம்மணி சிந்துபாத்தி பகுதியில் மயானத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதையடுத்தே செம்மணி புதைகுழியை தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த வேளையில்தான் கிருஷாந்தி குமாரசுவாமியின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ்கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ, செம்மணி பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டால் அதில் சாட்சியமளிக்க தயார் என்று தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்தின் பிரதிநிதிகள் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
செம்மணிப் பகுதியில் அன்றைய காலப் பகுதியில் பெருமளவானோர் விசாரணைகளுக்கென முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். இந்த விடயங்கள் தொடர்பிலும் இதற்கு காரணமான அதிகாரிகள் குறித்தும் தான் வெளிக்கொணர முடியும் என்று அந்தக் கடிதத்தில் சோமரத்ன ராஜபக் ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.
செம்மணிப் புதைகுழியிலிருந்து தோண்டத் தோண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், சோமரத்ன ராஜபக் ஷவின் இந்த கருத்தானது உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமானது எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
சோமரத்ன ராஜபக் ஷ மனைவி மூலமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பிய விடயத்தினை கேசரி வெளிப்படுத்தியிருந்தது. சோமரத்ன ராஜபக் ஷவின் நிலைப்பாடு குறித்தும் தெட்டத்தெளிவாக குறிப்பிட்டிருந்தது.
ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சோமரத்ன ராஜபக் ஷவின் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் ஜனாதிபதிக்கு அந்தக் கடிதம் கிடைத்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் சாட்சியமளிக்க தயார் என்று சோமரத்ன ராஜபக் ஷ குறிப்பிட்டிருக்கின்றார். அவர் செம்மணிப் பகுதியில் 300 தொடக்கம் 400 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக அன்று தெரிவித்திருந்தார். அந்த விடயம் தற்போது நிரூபணமாகி வருகின்றது. தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் அப்பகுதியில் மீட்கப்பட்டு வருகின்றன.
சோமரத்ன ராஜபக் ஷ அன்று கூறிய விடயம் தற்போது நிரூபிக்கப்பட்டு வருவதனால் அவரிடம் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நடத்தப்படுவதன் மூலம் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் யார்? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்ற விடயத்தை கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் ஐ.நா.வின் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அதற்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒழுங்கான பதிலை வழங்கவில்லை. மாறாக, காணாமல் போனோர் அலுவலகம் பிரதிநிதிகள் சோமரத்ன ராஜபக் ஷவை சந்தித்து தகவல்களைப் பெற்றுள்ளதாக மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றார்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் சோமரத்ன ராஜபக் ஷவை சந்தித்திருந்தனர். அத்துடன் வேறு சில சட்டத்தரணிகளும் அவரை அணுகியிருக்கின்றனர்.
உண்மையிலேயே காணாமல்போனோரது பிரச்சினைக்கு அரசாங்கமானது இன்னமும் தீர்வைக் காணவில்லை. அந்த மக்கள் தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர். செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களும் காணாமலாக்கப்பட்டவர்களுக்குள்ளே அடங்குகின்றனர்.
எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணையின் போது சாட்சியமளிக்க தயார் என்று சோமரத்ன ராஜபக் ஷ கூறியிருக்கின்றார். அவரை உரிய விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் யாழ். குடாநாட்டில் காணாமலாக்கப்படல்களால், அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும். இனியும் காலம் தாமதிக்காது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM