திருமண நிகழ்விற்கு மறு நாள் நடந்த வாகன விபத்திற்கு முகம்கொடுத்த புது மணத்தம்பதிகள் வதுபிடிவல மாவட்ட ஆரம்ப வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசரப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் இதிபரபே இம்புலத்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 27ஆம் திகதி புது மணத்தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பஸ்யால கிரிஉள்ள வீதியில் இதிபரப்பே பிரதேசத்தில் வாகன நெரிசலை முந்திக்கொண்டு தவறான பக்கத்தில் வந்த கார் மோதியதில் காயமடைந்த குறித்த தம்பதிகள் வதுபிடிவல மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மணமகனின் ஆபத்தான நிலையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனவும் மணமகளின் காலில் இரண்டு விரல்கள் வெட்டப்பட்டிருப்பதாகவும் வதுபிடிவல வைத்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த காரை அப்பிரதேச வாசியினர் மடக்கிப்பிடித்ததோடு, கார் சாரதியையும் காரையும் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லேவெல பொலிஸார் கார் சாரதியையும் மற்றொரு நபரையும் கைது செய்துள்ளதோடு, பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.