2022 ஆம் ஆண்டில் தென்னிந்திய பகுதியான கர்நாடக மாநிலத்தின் சிறு தெய்வ வழிபாட்டை மையப்படுத்திய 'காந்தாரா' எனும் திரைப்படம்- வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அதன் முன் கதையாக 'காந்தாரா சாப்டர் 1' எனும் பெயரில் வெளியாகி இருக்கும் இந்தத் திரைப்படம்- ஏற்கனவே வெளியான 'காந்தாரா' படத்தை போல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வியக்க வைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அடர்ந்த வனப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களை பின்னணியாக கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காந்தாரா என அழைக்கப்படும் அந்த பழங்குடியின மக்கள் இயற்கையை கடவுளாக வணங்குகிறார்கள். அங்கிருக்கும் வளங்களை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக எல்லா வழிமுறைகளையும் கண்டறிகிறார்கள். ஆனால் காந்தாராவில் உள்ள பழங்குடியினர் தங்களது எல்லையை கடந்து சென்றால் பேய் போன்ற ஒரு அமானுஷ்ய சக்தியால் தண்டிக்கப்படுவார்கள் என்பதால்.. தங்கள் எல்லையை மீறி செல்வதில்லை. அத்துடன் அருகே உள்ள பாங்க்ரா எனும் பிரதேசத்தில் வாழும் மக்கள் விட்ட சாபத்தால்.. தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதாலும் அவர்கள் எல்லையை கடந்து செல்ல துணிவதில்லை.
இந்நிலையில் காந்தாராவில் வாழும் பெர்மே ( ரிஷப் ஷெட்டி) எனும் இளைஞர் தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த விதிமுறையை மீறி பாங்க்ரா எனும் ராஜ்யத்திற்குள் நுழைகிறார். அங்கு நடைபெறும் துறைமுக வணிகத்தையும் அவதானிக்கிறார். இவரின் வருகையை பாங்க்ரா தேசத்து அரசனான ராஜசேகர்( ஜெயராம் ) மற்றும் அவரது வாரிசான குலசேகரா ( குல்சன் தேவய்யா) ஆகியோர் விரும்பவில்லை. ஆனால் அந்த தேசத்து இளவரசியான கனகவதி( ருக்மணி வசந்த்)- பெர்மேவின் திறமையை பார்த்து வியக்கிறார். கனகவதி- பெர்மே இடையேயான உறவு தொடர.. இளவரசனான குலசேகரா காந்தாரா தேசத்திற்குள் நுழைய தீர்மானிக்கிறார். அவரால் காந்தாரா தேசத்திற்குள் நுழைய முடிந்ததா? இல்லையா? அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் என்ன? என்பதனை விறுவிறுப்பான மற்றும் சுவாரசியமான திருப்பங்களுடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
கதையும், களமும் ஏற்கனவே பார்வையாளர்களுக்கு தெரிந்ததுதான் என்றாலும் திரைக்கதையில் பரபர வேகம் காட்டாமல் மிக மெதுவாகவே முதல் பகுதி திரைக்கதை நகர்கிறது. அத்துடன் பார்வையாளர்களால் எளிதில் யூகிக்கக்கூடிய காட்சிகளாகவும் பயணிப்பதால் வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகளை தவிர்த்து படம் எந்த ஈர்ப்பையும் உண்டாக்கவில்லை.
இரண்டாம் பாதியில் சிக்கலை விவரிக்கும் தருணத்தில் ரசிகர்களுக்கு தெளிவை விட குழப்பமே மிஞ்சுகிறது. குறிப்பாக 'குலிகா' தொடர்பான காட்சிகள் வலிமையாகவும் , பலவீனமாகவும் உள்ளன.
இயக்குநரான ரிஷப் ஷெட்டி பழங்குடியின மக்களின் மரபுகள் - சடங்குகள்- சம்பிரதாயங்களை - காட்சிப்படுத்துவதில் காட்டிய விரிவான விவரணங்கள் ...ஒரு புள்ளிக்கு மேல் திகட்டான தித்திப்பாகிறது.
பல காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருப்பதால்.. பார்வையாளர்கள் இருக்கையில் நெளிய தொடங்குகிறார்கள். குறிப்பாக படத்தின் நீளம் கவலை அளிப்பதாக உள்ளது. இந்த திரைப்படத்தின் காட்சிகளை 20 முதல் 25 நிமிடங்களை குறைத்தால்.. ரசிகர்களால் எளிதாக ரசிக்க முடியும்.
படத்தில் ரசிகர்களுக்கு வியப்பை தருபவர்கள் வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்களும், பின்னணி இசையமைப்பாளரும் தான். இந்தப் படைப்பிற்காக அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டு தெரிவிக்கலாம். அதிலும் இரண்டு பக்தி பாடல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காந்தாராவின் காட்டுப்பகுதிகளையும், இயற்கை காட்சிகளையும் வசீகரிக்கும் அளவில் காட்சி படுத்தி... ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறார் ஒளிப்பதிவாளர். இவரையும் பாராட்டலாம். இதனைக் கடந்து எக்சன் காட்சிகளும் ரசிகர்களை பல இடங்களில் கவர்கிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி- திரை தோற்றத்தில் தான் ஒரு ஆற்றல் வாய்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.
கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ருக்மணி வசந்த்தின் தோற்றமும், ஆடை அலங்காரமும், நடிப்பும் சிறப்பு.
ஜெயராம் வழக்கம் போல் சிறப்பாக நடித்து தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
காந்தாரா சாப்டர் 1 - வி எஃப் எக்ஸ் மேஜிக்
காந்தாரா சாப்டர் 1 - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஹொம்பாலே பிலிம்ஸ்
நடிகர்கள் : ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவய்யா மற்றும் பலர்
இயக்கம் : ரிஷப் ஷெட்டி
மதிப்பீடு : 2.5 / 5














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM