வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறுவோர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரகசிய கமெரா பொருத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு நகரை அடிப்படையாகக் கொண்டு முதலில் மேல் மாகாணத்தில் குறித்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் அதிகளவான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டங்கள் அதிகளவில் மீறப்படுகின்றன. மேலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போதைக்கு அமுலில் உள்ள சட்டங்களை கடுமையாக்குமாறும் போக்குவரத்து பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாகனங்களின் வேக அளவீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.