யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வன்முறைச் செயற்பாடுகளுக்கு வட மாகாணசபையும் பொறுப்பு கூற வேண்டும் என வட மாகாணசபை எதிர் கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மக்கள் வன்முறையை நோக்கி செல்கிறார்கள் என்று தெற்கில் முடக்கிவிடப்பட்டிருக்கும் பிரச்சாரத்திற்கு வடமாகண சபையும் பொறுப்பு கூற வேண்டும்.

ஏறத்தாழ ஏழு லட்சம் மக்கள் வாழுகின்ற யாழ் மாவட்டத்தில் ஒரு சிலரின் வன்முறை செயற்பாட்டை ஒட்டுமொத்த யாழ் மக்களும் வன்முறையை நோக்கி செல்கிறார்கள் என்றும் புனர்வாழ்வு பெற்ற பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு சிலரின் செயற்பாட்டை வைத்து ஒட்டுமொத்த முன்னாள் விடுதலைப்புலிகள் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று அரசு தரப்பிலிருந்து வெளியாகியுள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை. 

ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த சமூகத்தை குற்றம் சாட்டுவதானது தவறிழைக்கதாவர்களையும் வன்முறைக்கு தூண்டும் செயலாக அமைந்து விடும். 

வட மாகாணசபை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு ஆட்சி அமைத்து மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் வடக்கில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளை செய்ய வடமாகாண சபை எதுவித வேலைத்திட்டங்களையும் செய்யவில்லை. மாறாக இளைஞர்களினதும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களினதும் விரக்தியை முதலீடு செய்துள்ளது. 

இவ்வாறான நிலையில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண இளைஞர்களின் விரக்திக்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என வட மாகாண சபையின் எதிர் கட்சித்தலைவர் சி.தவராசா குற்றம் சாடியுள்ளார்.