ஒருவேளை கெஹல்பத்ர சிக்காமல் இருந்திருந்தால் இலங்கைக்கு இதுவே நடந்திருக்கும்! - Video 

01 Oct, 2025 | 12:10 PM
image

எம்.டி. லூசியஸ்

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரங்கேறி வரும் சம்பவங்களை அவதானிக்கும் போது, இன்னும் 10 வருடங்களில் இலங்கையே சுடுகாடாக மாறியிருக்குமோ.. என்ற அச்சம், ஒவ்வொரு குடிமகன் மனதிலும் கட்டாயம் எழுந்திருக்கக்கூடும்...

அந்தளவுக்கு இந்த நாட்டை பாதாள உலக நாசக்கார கும்பலும், அவர்களுடன் இணைந்த அரக்க குணம் கொண்ட அரசியல்வாதிகளும், சீரழித்து சின்னா பின்னமாக்கியுள்ளனர் என்பது நிதர்சனமாகியுள்ளது.

நாட்டுக்காக பாடுபட்டு உழைக்கும் உன்னத தலைவர்கள், அரசியல்வாதிகள் சிலர் இருந்தாலும் கூட, பணப் பேராசை கொண்ட பேய்கள், எதிர்கால சந்ததியை அழிக்க சூழ்ச்சி செய்துள்ளனர் என்பது, இப்போது வெளிவந்துக்கொண்டிருக்கும் செய்திகள் மூலம் திண்ணமாகின்றன.

இந்த நேரத்திலாவது இந்த பாதாள குழு கும்பல் கைது செய்யப்பட்டதே என்று, ஒவ்வொரு இலங்கையரும் பெருமூச்சு விடும் அளவுக்கு தற்போது அரங்கேறும் சம்பவங்கள் சான்று பகிர்கின்றன.

ஆனால் பிணம் திண்ணி கழுகுகளாக இருக்கும் சில அரசியல்வாதிகளுக்கும், பாதாள உலக குழு கும்பல்களுக்கும், இந்த அரசாங்கத்தின் தீர்மானமிக்க செயற்பாடுகள் பேரிடியாக மாறியிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினர் அண்மைக்காலமாக பல அதிரடி நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்களின் பணத்தை சூரையாடியவர்கள், அரச பணத்தில் குடும்பமாக உல்லாசம் அனுபவித்தவர்கள், ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்கள், குடு விற்றவர்கள், பாதாள குழுக்களுடன் சேர்ந்து கொலை செய்தவர்கள், ஐஸ் உற்பத்தி செய்தவர்கள், பாதாள குழுக்களிடம் இருந்து அனைத்து சுகபோக நன்மைகளையும் பெற்றவர்கள், திட்டமிட்ட குற்ற குழுவினருக்கு உதவி ஒத்தாசை வழங்கியவர்கள் என ஒவ்வொருவராக இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி, ஏமாற்றி, ஏழை மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த சிலர், கதாநாயகர்களாக எம் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த அரசாங்கம், அவர்களின் போலி முகத்திரைகளை கிழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு கதாநாயகனும்... பண வெறி கொண்ட கயவன்களே என்ற உண்மை.. சாதாரண மக்களுக்கு தற்போது புலப்படத் தொடங்கியுள்ளது.

கடந்த கால ஆட்சியில் மக்களுக்கு நன்மைகள் பல செய்த அரசியல்வாதிகள் இருந்தாலும் கூட, அவர்களுடன் இருந்த சிலர், முன்னெடுத்திருந்த சமூக விரோத செயற்பாடுள் அதிர்ச்சிகரமானவையாக உள்ளன.

இவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் இன்னொரு தலைமுறையினர், இலங்கையை ஒரு சுடுகாடாக மாத்திரமே பார்த்திருப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆட்சிக்கு வரும் போது சொப்பின் பையுடன் வந்தவர்கள்.. சொகுசு காரில், சொர்க்க வாழ்க்கை அனுபவிப்பது என்பது, ஒரே இரவில்.. மந்திரம், தந்திரத்தால் ஆகிவிட முடியாது.

ஆனால் இந்த பிணம் திண்ணி கழுகுகள் போன்ற அரசியல்வாதிகளும், பாதாள குழுக்களின் சமூக விரோதிகளும், இலங்கையை போதையின் இராஜ்ஜியமாக மாற்ற முன்னெடுத்த செயற்பாடுகளை சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது. மன்னிக்கவும் இயலாது.

அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் நன்கு கல்வி கற்று நிம்மதியாக வாழ... இந்நாட்டு மக்கள் போதைக்கு அடிமையாகி, வாழ்க்கை தொலைத்து, மண்ணோடு மண்ணாக வேண்டும். இதுவே இவர்களின் நப்பாசை... பணத்துக்காக இவர்கள் எதையும் செய்வார்கள்.

பூச்சி, புழுக்கள் மீது பாசம் காட்டும் இவர்கள்.. தமது சொந்த சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பலிகடா ஆக்கியுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் ஐஸ் தொழிற்சாலை நிர்மாணிக்கும் அளவுக்கு போதைப்பொருள் நாட்டுக்குள் கடத்தப்பட்டுள்ளது என்றால் அரசியல்வாதிகள், அரச ஊழியர்களின் ஆசிர்வாதம் இல்லாமல் நடந்திருக்க முடியாது.

இந்த பின்னணியில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது பொலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பாதாள குழுக்களிடம் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த முக்கிய அரசியல் புள்ளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். மக்கள் மத்தியில் உத்தம தலைவர்களாக காட்டிக்கொண்ட இவர்களின் உண்மை முகத்தை புடைபோட்டு காட்ட வேண்டும்... அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுத்து பாடம் புகட்ட  வேண்டும்... இதுவே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையை பார்த்து, அடுத்து ஆட்சிக்கு வரும் நபர்களுக்கு.. கனவில் கூட, சமூக விரோத எண்ணங்கள் தோன்றக் கூடாது.

தெற்கில் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் மீட்கப்படும் போதைப் பொருட்கள் தொடர்பான விசாரணைகளில் இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரும் தொடர்புபட்டுள்ளனர்.

இவர்கள் பசும்தோல் போர்த்திய புலிகளாகவே சமூகத்தில் வலம்; வந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்காமலிருக்க அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இது சாதாரண விடயமல்ல. இந்த வலையமைப்பு ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்துள்ளது. அதாவது பாதுகாப்பு தரப்பினர், அரசியல் பொறிமுறை என்பனவும் தொடர்புபட்டுள்ளன. இவை விசாரணைகளில் மூலம் வெளிவருகின்றன.

மொட்டு கட்சியின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரியை கைது செய்த பின்னர் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. அவரின் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி அரசியல் தொடர்புகள் முறையாக எதிர்காலத்தில் வெளிவரும்.. இன்னும் பல கைதுகள் விசாரணைகளின் மூலம் நடக்கும்.

இந்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியதை தொடர்  பலர் என்ன செய்வது என்று அறியாமல் ஊடகங்களின் முன்பாக பிதற்ற தொடங்கியுள்ளனர்.

இதேநேரம் இந்த துணிகர செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஜனாதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மாறுவேடத்தில் கொலையாளி ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே ஜனாதிபதியின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த வருடத்தில் இதுவரையில்மொத்தமாக 1243 கிலோ ஹெரோயின் மீட்கப் பட்டுள்ளதுடன், 1845 கிலோ ஐஸ், 29 கிலோ கொக்கெயின், 14057 கிலோ கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்காலையில் மீட்கப்பட்ட ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளின் பெறுமதி மாத்திரம் 988 கோடி ரூபா பெறுமதியாகும்.

இந்த பாரியளவு போதைப்பொருள் தொகையை தரையிறக்க எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரின் சகோதரர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டலில் பணி புரியும் நபரொருவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாதாரண நபர் ஒருவர் ஒருவேளை உணவுக்கே அல்லல்படும் நேரத்தில் இவர்கள் கோடிகளில் புரள்கின்றனர்.

எனவே இந்த நாட்டின் சமூக விரோதிகள் வெகு சீக்கிரத்தில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுவே சாதாரண இலங்கை குடிமகனின் ஆதங்கமும் எதிர்ப்பார்ப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி அநுரவின் காலத்தில் அமைச்சு மாற்றங்கள்...

2026-08-11 18:55:27
news-image

வியட்நாமின் பொருளாதார சீர்த்திருத்தக்கொள்கை இலங்கைக்கு ஓர்...

2026-08-11 15:47:46
news-image

இந்தியாவின் வளர்ச்சிப் பாய்ச்சலை இலங்கை எப்படி...

2026-08-11 13:15:30
news-image

கர்தினால் ரஞ்சித் மற்றும் சமநீதிக்கான கேள்வி...

2026-08-11 12:05:18
news-image

 இந்தியா, சீனா போன்ற பிராந்திய பொருளாதார ...

2026-08-10 20:25:32
news-image

சீனாவின் இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றச்...

2026-08-10 16:09:11
news-image

பொருளாதாரத்தை திறந்தாலும் இலங்கை தவறவிட்டது எங்கே?...

2026-08-10 14:41:21
news-image

தூக்குமேடைகளின் நிழலில் தற்காலிகச் சிறை: போகம்பரையின்...

2026-08-10 09:12:43
news-image

லயனல் போபகேயின் தொடர்ச்சியான நிலைப்பாடும் தமிழர்களின்...

2026-08-09 20:15:43
news-image

'மாஸ்' திரை நிழலில் கரையும் கண்­ணிய...

2026-08-09 15:59:35
news-image

என்.பி.பி. அரசாங்கத்துக்கு அமிலச் சோதனை

2026-08-09 15:53:04
news-image

இலங்கையின் கடன் தரவரிசை: பாராட்டுக்குரிய முன்னேற்றம்,...

2026-08-09 15:39:15