அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தங்கள் உறவினர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.

நாட்டில் சிறைகளில் அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தங்கள் உறவினர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன்  மகஜர் ஒன்றினையும் வழங்கியிருக்கின்றனர்.

வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சிவயோகம் தலமையில் காலை 10.30 மணிக்கு மேற்படி சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இச் சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக வழக்குகள் தாக்கல் செய்யப்படாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

இதனை தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அது ஏற்றுகொள்ளக் கூடிய விடயமாகும். இன்றைய தினம் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறையில் உள்ள தங்கள் உறவினர்கள் தொடர்பான போதிய விபரங்களை என்னிடம் வழங்கவில்லை.

இந்நிலையில் அந்த விபரங்களை அவர்களுடைய சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொண்டு பெறுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அதேபோல் சிறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக மிக விரைவில் சட்டமா அதிபருடன் பேசுவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். இதனடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அதிககவனத்தை தொடர்ந்தும் செலுத்துவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.