(ப.பன்னீர்செல்வம்)

மலையகத்திலிருந்து ஆட்களை ஏமாற்றி மேற்கொள்ளப்பட்டு வந்த "சிறுநீரக வியாபாரம்" தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்  சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டாக்டர். ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அந்தவகையில்  வெ ளிநாட்டவர்களுக்கு இலங்கை தனியார் மருத்துவ மனைகளில்  சிறுநீரக மாற்றுச் சிகிச்கை செய்வதை தடைசெய்து அரசு சுற்றுநிருபம் வெ ளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

அமைச்சரவை தீர்மானங்களை  அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இத் தகவல்களை வெ ளியிட்டார். 

அமைச்சர் இது தொடர்பாக மேலும் உரையாற்றுகையில், 

இலங்கையில் சிறுநீரக வியாபாரம் நடைபெற்றதாகவும், இதில் எமது நாட்டு டாக்டர்களுக்கும் தொடர்பு பட்டிருப்பதாகவும் இந்தியாவின் பத்திரிகைகளில் செய்திகள் வெ ளியாகியிருக்கின்றன. இவ் விடயம் தொடர்பில் பூரணமான விபரங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டு இலங்கை டாக்டர்கள் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது வைத்தியர் பட்டம் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் அவர்கள் டாக்டர் தொழிலில் ஈடுபட முடியாது தடை செய்யப்படும். 

  மலையகத்திலிருந்து ஆட்களை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுநீரக வியாபாரம் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படும். இவ் வியாபாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். 

அதேவேளை வெ ளிநாட்டவர்கள் இங்கு வந்து தனியார் மருத்துவமனைகளில் சிறுநீர் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான சுற்றறிக்கையை அரசு வெ ளியிட்டுள்ளது என்றார்.