தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்றும் கடந்த தேர்தல் காலங்களில் நீங்கள் உறுதி வழங்கியிருந்தீர்கள். பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கின்றீர்கள். எனவே, அந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்குமாறு இந்தக் கடிதத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இந்தக் கடிதத்தில் கோரப்பட்டிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அக்கறை காட்டாத நிலைமை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியிருந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்படும். நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கான செயற்பாட்டினை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து, அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மாகாண சபை முறைமை அமுலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியுள்ள போதிலும் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலும் இன்னமும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது புதிய அரசியல் யாப்புக்கான செயற்பாடு குறித்தோ எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பில் தற்போதும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கண்ட பின்னர் புதிய அரசியலமைப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட அரசாங்க தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஏனெனில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதை அடுத்து தேர்தல் முறை மாற்றம், அரசியல் தீர்வு என்பனவற்றை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடு இடம்பெற்றிருந்தது.
அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு, பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு, இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அன்று எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த இரா. சம்பந்தன், அரசியல் தீர்வு குறித்த முயற்சியில் தீவிர ஈடுபாடு காட்டி வந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
அரசியல் தீர்வு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த தீர்வு விடயத்தில் அன்றைய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பல்வேறு விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு செயற்பட்டிருந்தார். எப்படியாவது அரசியல் தீர்வை கண்டுவிட வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் அவர் செயற்பட்டிருந்தார்.
இந்தக் கலந்துரையாடல்களின் போது ஒருமித்த நாட்டுக்குள் மாகாணங்களுக்கு மீளப் பெறப்பட முடியாத அதிகாரங்களை வழங்கும் வகையிலான அரசியல்தீர்வு குறித்து ஆராயப்பட்டிருந்தது. இந்த விடயங்களை உள்ளடக்கி புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையை அடுத்து மேலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும், அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை மேலும் முன்கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
அன்று விட்ட இடத்திலிருந்து புதிய அரசியல் யாப்புக்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதியாக இருக்கின்றது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது.
தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை வழங்குமாறு கோரி நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து போராடி வருகின்றனர். அன்று தமிழ் மிதவாத தலைவர்கள் அஹிம்சா வழியில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். ஆனால், அந்த அஹிம்சைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதையடுத்து தமிழ் இளைஞர்கள் ஆயுதம் வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறு ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள், மூன்று தசாப்த காலமாக யுத்தத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதனால் நாட்டில் பேரழிவுகள் ஏற்பட்டிருந்தன. இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து அன்றைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கவில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணத் தயார் என்று அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உறுதியளித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இந்தநிலையில் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அன்று வலியுறுத்தியிருந்தது. இத்தகைய அழுத்தங்களையடுத்து 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனாலும், இறுதியில் பேச்சுவார்த்தையிலிருந்து அரசாங்கத் தரப்பு விலகிக் கொண்டது.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இத்தகைய பேச்சுவார்த்தையில் அன்றைய அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவும் தார்மீகப் பொறுப்பைக் கொண்டிருக்கின்றது.
தற்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியா தீவிர அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது தமிழ்த் தரப்பினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், 13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பிலும் அதிகாரப் பகிர்வு குறித்தும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
அண்மையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி, இலங்கையில் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்தி அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய வலியுறுத்தல்களை இந்தியா விடுத்து வருகின்றது. கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசியிருந்தனர். இதன்போது, மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் அரசியல் தீர்வின் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெற வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அரசியல் தீர்வு குறித்து வாக்குறுதி அளித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்க வேண்டும். இந்த அரசியல் தீர்வு விவகாரத்தில் இந்தியாவும் தனது அக்கறையினை செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM