இலங்கையில் இருந்து வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக பெங்களுக்கு  கொண்டு செல்ல முயன்ற இந்தியப் பிரஜையொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் இந்தியாவின் பெங்களூர் செல்வதற்காக நேற்று மாலை விமானநிலையம் வந்த போது நபரின் கைப்பையை சோதனையிட்ட வேளை சட்டவிரோதமாக கொண்டுசெல்வதற்காக மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 33 வயதுடைய இந்தியப் பிரஜையெனவும் அவரிடமிருந்து அமெரிக்க டொலர், யூரோ மற்றும் கொங்கொங் டொலர் ஆகிய வெளிநாட்டு நாணயத்தாள்களை மீட்கப்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 35 இலட்சம் ரூபாவெனத் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.