“தமிழ் சமூகமோ முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல் அவற்றை உறுதிசெய்வதாக அமைய வேண்டும்” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ‘‘தோப்பாகிய தனி மரம்’ எனும் தொனிப்பொருளில் நிந்தவூரில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் அதிதியாகக் கலந்துகொண்டு நினைவுப் பேருரை நிகழ்த்துகையிலேயே சுமந்திரன் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியிருந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், “தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். தமிழ் – முஸ்லிம் என்ற இரு சமூகங்களை சேர்த்துக் கணக்கிட்டாலும் பெரும்பான்மை சமூகத்தவர் எம்மை விட எண்ணிக்கையில் மூன்று மடங்கானவர்கள். அப்படியானதொரு சூழ்நிலையில் நாம் கூடியவரை சேர்ந்து இயங்குவதுதான் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களுக்கும் பாதுகாப்பானது. அப்படி நாம் சேர்ந்து இயங்கும் போது எமக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் மதித்து அவற்றையும் எமது தனியான அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டு செயற்பட முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்த நாட்டின் ஆட்சிமுறை சமஷ்டியாக மாற்றப்பட வேண்டும் என்று கோரி தனிக் கட்சியாக உருவெடுத்த போதே ‘‘ஒரு சுயாட்சி தமிழரசும், ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவ வேண்டும் என்று இரண்டு அலகுகளாக எமது கட்சியாப்பில் நோக்கம்” என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழ் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் சுமந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தலைவர் அஷ்ரப்பின் 25ஆவது நினைவு தின நிகழ்வில் சுமந்திரன் தெரிவித்த இந்த விடயங்கள் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத விடயங்களாகவே உள்ளன.
ஏனெனில், சிறுபான்மையின மக்களான தமிழ், முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் திட்டமிட்ட வகையில் பிளவுபடுத்தப்பட்டனர். யுத்த காலத்தின்போது இத்தகைய செயற்பாடுகள் சிங்கள, பெளத்த தேசியவாத சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டன.
வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் அந்நியோன்யமாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால், யுத்தகாலத்தில் இத்தகைய அந்நியோன்யத்தில் பெரும் விரிசல் நிலை ஏற்பட்டிருந்தது. 1980களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது, அதில் முஸ்லிம் இளைஞர்களும் அந்தக் காலப்பகுதியில் பங்காளர்களாக இருந்திருக்கின்றனர்.
அன்று பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் 1977ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேடைகளில் அன்றைய கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்துடன் ஒன்றாகப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
அன்றைய பிரசாரக் கூட்டங்களில் “அண்ணன் அமிர்தலிங்கம், தமிழீழத்தை பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் அதனைப் பெற்றுத் தருவார்” என்று அன்று அஷ்ரப் கூறியிருந்தார். இந்த விடயத்தை தனது நினைவுப் பேருரையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு தமிழ், முஸ்லிம் தலைவர்களாகட்டும், மக்களாகட்டும் மிகவும் அந்நியோன்யமாகவே அன்று செயற்பட்டிருந்தனர். ஆனால், அந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு யுத்த காலத்தில் திட்டமிட்ட வகையில் பிளவுபடுத்தப்பட்டது.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போன்றே வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுத்தி பிளவுகளை ஏற்படுத்துவதற்கு அன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், இரு சமூகங்களுக்கு இடையேயும் சந்தேகப் பார்வை மேலொழுந்ததுடன் அவை முரண்பாடுகளையும் வலுப்படுத்தியிருந்தன.
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் முற்றாக வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்த விடயமும் இரு சமூகங்களுக்கும் இடையில் பெரும் விரிசலை ஏற்படுத்துவதற்கு மிகப் பிரதான காரணமாக அமைந்திருந்தது.
அன்று முஸ்லிம் மக்கள் உடுத்த உடையுடன் வடக்கிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறு வெளியேறிய முஸ்லிம் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்திருந்தனர். இன்றுவரை அந்த மக்கள் சொல்லொணா துயரங்களையே அனுபவித்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்திலும் யுத்த காலத்தின் போது இரு சமூகங்களுக்கிடையேயும் முரண்பாடுகள் உச்சம் கண்டிருந்தன. பல்வேறு வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றன.
இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான உறவு பெரும் பாதிப்பை சந்தித்திருந்தது. இந்த இரு சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிங்கள, பெளத்த பேரினவாத சக்திகள், மேலும் முரண்பாடுகளுக்குத் தூபம் அமைத்து வந்தனர்.
ஆனாலும் யுத்த காலத்திலும் தமிழ் மிதவாத தலைவர்கள் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியே வந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி உட்பட்டவர்கள் முஸ்லிம் மக்களுடனான உறவை வலியுறுத்தியே வந்தனர்.
இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வின் போது தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் போது முஸ்லிம்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டியதன் அவசியத்தை தமிழ் தலைவர்கள் வலியுறுத்தியே வந்திருக்கின்றனர்.
இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டியை உள்ளடக்கிய அரசியல் தீர்வின் அவசியத்தை தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தற்போது கோரி வருகின்றனர். அன்று தமிழ் மிதவாத தலைவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் போது முஸ்லிம்களுக்கும் உரிய தீர்வின் அவசியத்தை சுட்டிக்காட்டியே வந்தனர்.
தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள, பெளத்த பேரினவாத சக்திகளினால் எவ்வாறு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ அதேபோன்றே முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் இடம்பெற்றன.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதையடுத்து முஸ்லிம் மக்கள் சகலரும் பயங்கரவாதிகளாகவே சிங்கள பெளத்த பேரினவாத சக்தியினரால் பார்க்கப்பட்டனர். முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதேபோன்றே கொரோனா தொற்று காலத்தில் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் பழிவாங்கப்பட்டனர். கொரோனாவில் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் எரியூட்டப்பட்டன. இவ்வாறு சிறுபான்மையின மக்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டமையே வரலாறாக உள்ளது.
இரு சமூகங்களுகிடையேயும் பிரிவினையையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி, சிங்கள பேரினவாத சக்திகள் இதுவரை குளிர்காய்ந்தமையே வரலாறாக உள்ளது.
இதனால்தான் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து உரிமைகளைப் பெற்று வாழ வேண்டுமானால் இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.
இதனைத்தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே தற்போது ஒற்றுமை மேலோங்கி வருகின்றது. ஆனாலும், சில பகுதிகளில் காணி பிணக்குகள் போன்ற சில விடயங்களில் முரண்பாடுகள் காணப்பட்டு வருகின்றன.
இன்னமும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளும் நிலைமை முற்றுமுழுதாக நீங்கி விடவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. அதேபோன்றே வேறு சில விவகாரங்களும் இன்னமும் தீர்க்கப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்திலும் இரு சமூகங்களுக்கிடையேயும் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்திலும் முரண்பாடுகள் நிலவுகின்றன.
இத்தகைய முரண்பாடுகள் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்கக் கூடாது. இரு தரப்பு மிதவாத அரசியல் தலைவர்கள் இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் ஓர் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். இரு சமூகங்களும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் சுபீட்சமாக்குவதற்கு என்ன வழி என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM