மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வட்டுவான் பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த 17 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த 30 வயதுடைய நபரொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள  யுவதியின் வீட்டில்  சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் தந்தையாரை தேடி ஒருவர் கூப்பிடும் சத்தம் கேட்டு வீட்டின் வெளிவாசலிற்கு சென்ற யுவதி தந்தையார் வீட்டில் இல்லை என தகவல் தெரிவித்த நிலையில், குறித்த நபர் யுவதியை திடீரென கையைப்பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகத்தற்கு முயற்சித்துள்ள நிலையில் யுவதி கத்தி கூச்சலிட்டதையடுத்து குறித்த நபர் யுவதியை விட்டுவிட்டு தப்பி ஒடியுள்ளார்.

இதையடுத்து குறித்த யுவதி பெற்றோரின் துணையுடன் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.