சுவிஸ் நாடகப்பள்ளியின் 25வது ஆண்டு விழாவில் மெய்வெளி அரங்க இயக்கத்தினால் அரங்கேற்றப்பட்ட ஓர் உன்னதமான நவீன மேடை நாடகம் “கனவுத் தேசம்”.
சாம் பிரதீபனின் நெறியாள்கையில், இலங்கைத் தமிழரின் சமகால சமூக பொருளாதார மாற்றங்களும் அதனோடு இணைந்ததான சர்வதேச புலப் பெயர்வு பாதிப்புகளும் என்ற அடிப்படையில் வெளிப்பட்டது இந்த நாடகம்.
இலங்கைத் தமிழ் சமூகத்தில் அதன் இடப் பெயர்வு நோக்கியதான கற்பனை தளம் மிக அச்சமூட்டுவதாய் இருக்கின்றது. எமது சமூகம் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தன் பயணப் பரிமாணப் பரிவர்த்தனைகளில், நிரந்தர நியாயமான நிம்மதியான வாழ்வைத் தராத போக்கே காணப்படுகின்றது. விளக்கை நோக்கி வரும் விட்டில் பூச்சிகளாய், ஆறறிவு இருந்தும் அதை அடகு வைத்த கதையாய் எம் சமூகத்தின் நகர்வு இருக்கின்றது. இந்தப் பின்னணியில், எதிர்கால சந்ததியின் நிலை என்னாகும் என்ற பயத்தை ஏற்படுத்தும் ஓர் சமூக விழிப்புணர்ச்சிக் காவியமாக சாம் பிரதீபனும் ரஜிதா பிரதீபனும் இணைந்து அவர்களது மெய்வெளி அரங்க இயக்கத்தினூடாக இந்த அளிக்கையினைத் தந்திருந்தார்கள்.
அவர்கள் மட்டுமல்ல பல வயது கொண்ட இருபால் நடிகர்களை பக்குவமாகக் கையாண்டிருந்தது கனவுத் தேசம். புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்த போதும் வசன உச்சரிப்பில் பிசிறல் இன்றி சுத்தமான பேச்சுத்தமிழில் காத்திரமான கருக் கொண்ட கதையை மணி மணியாய் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் இயக்கி எடுத்திருந்தது மெய்வெளி அரங்க இயக்கம்.

பாடல், வசனம், அபிநயம், மற்றும் கருவிகள் துணயுடன் நவீன நாடக கலையில் மேலைநாட்டு நவீன மேடை நாடக இயக்குனர்களின் தரத்துக்கு குறைவில்லாமல், எமது கதையை உருவகப்படுத்தி பாத்திரங்களை உருவாக்கியிருந்தார்கள் நெறியாளர்கள். சாம் மற்றும் ரஜிதா தம்பதியினரின் இந்த கலை வாழ்வு பயணத்தின் மேலுமொரு மைல் கல்லாக “கனவுத் தேசம்” மேடை நாடகம் கலையுலகில் அவர்களை மேலும் மெருகூட்டி தொடர வழி செய்தது எனலாம்.
நவீன மேடை நாடகங்கங்களை எம் சமூகம் ரசிக்க மறந்து மறுத்து நாலாம் தர சமூக சீரழிவு தரும் கருக் கதை கொண்ட ஆரோக்கியமற்ற இந்திய தமிழ் சினிமாவையும் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களையும் அறியாமை கொண்டு அதை ரசித்து அடிமைப்பட்டு பல தசாப்தங்கள் கடந்து வந்திருக்கிறது. அதிலிருந்து இப்போது கூட மக்களை மீட்டு மாற்று ரசனையை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையை இந்த நாடகம் தருகிறது. நாடகம் தொடங்கி முடியும் அந்த வினாடி வரை என்னால் வேறு எதையும் நினைக்க கூட முடியவில்லை. அத்தனை கவனமாக அதன் அலை மாற்றங்கள் மிக அற்புதமாக அலட்டல் இல்லாமல் அக்கறையுடன் அமைக்கப்பட்டது வியப்பிற்குரியது.
மேடை நாடகத்தில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கான பாத்திரங்கள், உறவுகள், சூழ்நிலை, குரல், இயக்கம், கவனம், பதற்றமின்மை, இடம், நேரம், மொழி, சின்னம், பார்வையாளர் மனநிலை, சூழல் போன்ற மேடை நாடகத்திற்கு அத்தியாவசியமான விடயங்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டு கையாளப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
மேலும் நாடகத்தின் முக்கிய ஆறு கூறுகளான கதைக்களம்,கதாபாத்திரம், சிந்தனை, வசனம், காட்சி, பாடல் என்பனவற்றை மிக தெளிந்த தேர்வுடன் ஆற்றுகைப்படுத்தி அதன் வகைக்கேற்ற பாங்கில் நடிகர்களை வளைத்தும் அசைத்தும் வனைந்தும் புடம் போட்டிருப்பது பார்ப்போர்க்கு ஓர் அற்புதமே!

நாடக தயாரிப்பின் போது அல்லது இயக்கும் போது மேலைத் தேச மேடை நாடகங்களில் கடைப்பிடிக்கும் 5W & H என்ற கேள்விகளுக்கு ஏற்ற பதில் தரும் வகையில் இந்நாடகம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது அபாரம். அதாவது Who was involved?, What happened?, When did it happen? Where did it happen? Why did it happen? And How did it happen?
அதாவது யார்? என்ன? எப்பொழுது? எங்கே? ஏன்? எப்படி? என்பனவற்றின் விடைகளைத் தளமாக்கி ஓர் பூரணத்துமான சிந்தனைக்கும் ரசனைக்கும் சமூக மாற்ற விழிப்புணர்சிக்கும் வழி செய்யும் வகையில் அடங்குவது பாராட்டுக்குரியது.
அதனோடு இணைந்ததாக சோகம், நகைச்சுவை, தீவிரம் மற்றும் மெலோடி ஆகிய நால்வகை நாடக வகைகள் ஒன்றாய் கூட்டிணைக்கப்பட்ட கலவையாக பரிணமித்தது பார்வையாளர்களை கட்ட வைத்தது எனலாம். அது மட்டுமன்றி கதையை நகர்திய பாங்கு, வடிவங்கள், கருப்பொருள் மற்றும் செயல்பாடுகளின் பன்முகத்தன்மைகளான நாடக வடிவங்களும் இதில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது மிகவும் தரமானதாகும்.

கீழைத்தேச பாரம்பரிய மேடை நாடக போக்கான ஆன்மீக அறிவொளிப் பாரம்பரிய தன்மையினின்று மாறுபட்டு, கீழைத்தேச கதையை மேலைத் தேச நாடக யதார்த்தவாத நவீனத் தன்மைக்குள் ஊடுகடத்தி கதாபாத்திரமும் கதையமைப்பும் வெளிப்பட்டிருந்தது கனவுத் தேசத்தில். அத்துடன் புறக் கருவி பயன்பாடு சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஓடம், இலங்கை இலச்சினை என்பனவும் குறியீட்டு வடிவான உடையமைப்புகள் மிக்க சிறப்பு.
நாடகம் ஒட்டுமொத்தத்தில் நிறைவாக இருந்த போதும் சிறு சிறு குறைகள் இல்லாமல் இல்லை. அதை இங்கே குறிப்பிட்டால் இது போன்ற கதைக்களத்தை கையாளும் போது அதை தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என்பதே நோக்கம். அதாவது இலங்கையில் வாழும் துயரப்படும் தமிழர்களின் கதைக் கருவில் மலையகத் தமிழர்களின் அங்கத்துவம் இங்கு குறிப்பிடாததும் மற்றும் இன்னும் ஒரு சில நிமிடங்கள் எடுத்து கதையில் வெளிநாட்டுக்கு வந்து கொண்டிரந்தவர்கள் இங்கு வந்த பின் படும் துயரங்களையும் குறியீட்டளவிலாவது குறிப்பிட்டிருந்தால் இது பூரணத்துவம் பெற்றிருக்கும். அது ஒரு பெரிய தவறாக கொள்ளமுடியாவிட்டாலும் அதைச் செய்திருந்தால் நாடகம் மேலும் மெருகடைந்திருக்கும்.
மொத்தத்தில் காலத்துக்கும் சமூகத்துக்கும் தேவைக்கும் ஏற்ற ஒரு திறமையான படைப்பு. சிறந்த பாடல். இசை, கரு , அபிநங்கள். அந்த வகையில் அத்தனை நடிகர்களும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். புலம் நிலம் சார் தமிழ் சமூகம் சார்பாகவும் என் சார்பாகவும் சாம் , ரஜிதா தம்பதிகளுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் தயாரிப்பில் அனுசரணையாக இருந்த அனைவர்க்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்!
- சங்கரப்பிள்ளை முருகையா M.A
முன்னாள் விரிவுரையாளர்
யாழ். பல்கலைக்கழகம்






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM