(எம்.மனோசித்ரா)
முந்தைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட காணி அபகரிப்பு திட்டத்தை தற்போதைய அரசாங்கம் அங்கீகரித்து, திருகோணமலை முத்துநகர் விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. மாகாணசபைத் தேர்தலை இப்போதே நடத்துங்கள். அதில் மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவத்தார்.
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் கிராம விவசாயிகளின் காணிப் பிரச்சினைகளை ஆராயும் நோக்குடன் அப்பகுதிக்கு விஜயம் செய்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை மாவட்டத்தின் தகரவேட்டவொன், மத்தியவெளி, முத்துநகர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 350 குடும்பங்கள், 1972ஆம் ஆண்டு முதல் 53 ஆண்டுகளாக 800 ஏக்கர் நிலத்தில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி, 2025 பெப்ரவரி மாதம் முதல் விவசாய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டு வந்த இந்த நிலம் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானது என உரிமை கோரப்பட்டு, 200 ஏக்கர் நிலம் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தியை ஊக்குவிப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், 350 குடும்பங்களை இலக்கு வைத்து, அவர்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஒதுக்குவது ஒரு கடுமையான அநீதி. இது அவர்களது காணி உரிமை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
இந்த நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமானவை. முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நிலங்களைச் சூறையாடி, இதனை சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஒதுக்கி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது ஒரு மோசமான செயல்.
இந்த நிலங்களை வழங்கிய முந்தைய அரசாங்கத்துடன் சேர்ந்து, தற்போதைய ஆளும் தரப்பினரும் நிலத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த தேர்தல் காலத்தில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் தரப்பு எம்.பி.க்கள் விவசாய நிலங்களை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தனர்.
ஆனால், இன்று முந்தைய அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் காணி அபகரிப்புக்கு இடம் கொடுத்துள்ளது. முத்துநகர் குளமும் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மற்ற குளங்களையும் தரைமட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமது செல்வத்தையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி காணிகளை இவ்வாறு கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைந்தால் இந்த காணிகளை மீட்டுத் தருவோம்.
பயிரிடப்படாத தரிசு நிலங்களில் சூரிய மின்சக்தி திட்டத்தை முன்னெடுக்கலாம். பயிரிடப்பட்ட விவசாய நிலங்களை இத்தகைய நோக்கத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.
குறைந்தபட்சம், நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய மாற்று நிலங்களை அரசாங்கம் அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் இதனை செய்யவில்லை. வழக்குகளை பதிவு செய்து, பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி விவசாயிகளை மிரட்டி வருகின்றனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராவதாக கூறுகிறார்கள். தேர்தலை நடத்துமாறு நாங்களும் கூறுகிறோம். மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள். திருகோணமலை மக்கள் மட்டுமல்ல, முழு நாட்டு மக்களும் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர்.
அரசாங்கத்துக்கு பதிலளிக்க நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். எனவே உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்' என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பிரச்சினை குறித்து மக்களிடமிருந்து தகவல்களைப் பெற்று களத்தில் இறங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்கள், நாடாளுமன்றம் மற்றும் பொதுவெளியில் பலமுறை பேசியுள்ளதாகவும், இந்த காணி உரிமைக்காக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டு உரிமையை வென்றெடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM