பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மாவா போதைப்பொருள் (புகையிலைதூள்) 65 கிலோ கிராம் தலவாக்கலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள மாவா போதைப்பொருள் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விற்பனை செய்ய வைத்திருந்தபோதிலேயே இன்று பகல் தலவாக்கலை நகர வர்த்தக நிலையமொன்றிலிருந்து  கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்தார்.

மாவா போன்ற போதைப்பொருள் பாவனையால் புற்றுநோய்  ஏற்படுகின்ற நிலையில் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள மாவா போதைப்பொருள் மலையகத்தின் பல பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட 65 கிலோ கிராம் மாவா போதைப்பொருளையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.