தணல் - திரைப்பட விமர்சனம்

13 Sep, 2025 | 05:34 PM
image

தயாரிப்பு : அன்னை பிலிம் புரொடக்ஷன்

நடிகர்கள் : அதர்வா முரளி, லாவண்யா திரிபாதி, அஸ்வின் காக்கமனு, லட்சுமி பிரியா சந்திர மௌலி, போஸ் வெங்கட், ஷா ரா, பரணி, அழகம் பெருமாள், சர்வா மற்றும் பலர்.

இயக்கம் : ரவீந்திர மாதவா

மதிப்பீடு : 2/5

அதர்வா நடிப்பில் பல தடைகளை எதிர்கொண்டு திட்டமிட்ட திகதியில் நீதிமன்ற உத்தரவின் படி சற்று தாமதமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் 'தணல்'.  பட வெளியீட்டிற்கு முன் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகள்- ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பிரத்யேக நிகழ்வுகள்- என  எதுவும் இல்லாமல் பட மாளிகையில் வெளியாகி இருக்கிறது. இந்த  திரைப்படத்தை காண பட மாளிகைக்குச் சென்ற அதர்வாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததா? இல்லையா? என்பதைத் தொடர்ந்து காண்போம்.

கடை நிலை காவலராக பணிக்கு சேர ஆவலுடன் காவல் நிலையத்திற்கு செல்கிறார் நாயகன் அதர்வா. அவருடன் புதிதாக பணிக்கு சேர ஐந்து இளைஞர்களும் அங்கு வருகை தந்திருக்கிறார்கள். புதிதாக பணிக்கு சேர இருப்பதால் இந்த ஆறு பேரும் நட்புக் கொள்கிறார்கள். பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் இவர்களை அந்த காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் காவல்துறை அதிகாரி அலை கழிக்கிறார். இரவு வரை காத்திருந்து பிறகு மற்றொரு உயர் அதிகாரியின் ஆணைக்கு இணங்க இரவு ரோந்து பணிக்காக ஆறு காவலர்களும் செல்கிறார்கள். இவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது.. நடைபாதையில் பதியமிடப்பட்டிருக்கும் கழிவுநீர் மூடியை திறந்து கொண்டு உரிய பாதுகாப்பு கவசம் இன்றி ஒரு நபர் வெளியே செல்கிறார். அவர் மீது சந்தேகம் கொண்டு காவலர்கள்.. அவரை விசாரிக்க செல்வதற்கு தயாராகும் போது, அந்த நபர் காவல் துறையினரை கண்டதும் ஓடத் தொடங்குகிறார். ஆறு காவலர்களும் அவரை பின்தொடர்ந்து ஓட.. அந்த நபர் அரசால் கைவிடப்பட்ட சேரி பகுதிக்குள் தப்பி சென்று மறைந்து விடுகிறார். அங்கு தலைவன் என்று ஒருவன் இருக்கிறான். அவன் காவலர்களில் ஒருவரை தலையை துண்டித்து கொலை செய்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் அதர்வா உள்ளிட்ட காவலர்கள்.. செய்வது அறியாது திகைத்து நிற்கிறார்கள். அங்கிருந்து காவல்துறைக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவலையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அங்கிருந்து அதர்வாவும் அவருடைய காவல்துறை நண்பர்களும் தப்பித்தார்களா? இல்லையா ? அந்த சேரியில் இருக்கும் தலைவன் யார்? அவனது திட்டம் என்ன? வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் தன் தாயாரின் சிகிச்சைக்காக வங்கியில் சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் தொகையை இந்த குழு கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருக்கிறது. அதை அதர்வா தடுத்தாரா? இல்லையா? இப்படி பல வினாக்களை எழுப்பி.. அதற்கு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பதில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதனை தெளிவாக சொல்லாமல் அவர்களும் குழம்பி, பார்வையாளர்களையும் குழப்பி இருக்கிறார்கள்.

அதர்வா கதையின் நாயகனாக அவருடைய வழக்கமான இயல்பான நடிப்பால் உணர்வுபூர்வமான நடிப்பால் அதிரடியான எக்சன் சண்டைக் காட்சிகளால் ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு நடிகை லாவண்யா திரிபாதி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். வழக்கமான எக்சன் பட டெம்ப்ளேட் நாயகியாக வருகிறார்.‌முகத்தில் இளமையும் மிஸ்ஸிங். நடிப்பில் அனுபவமும் மிஸ்ஸிங்.

அஸ்வின் காக்கமனு - கதையின் நாயகர்களில் ஒருவரா? அல்லது வில்லனா? என துல்லியமாக அவதானிக்க இயலாத அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவது இந்த கதாபாத்திரம் தான்.  இது தொடர்பாக இயக்குநர் என்ன சொல்ல நினைத்தாரோ...! அதனை துல்லியமாக ரசிகர்களுக்கு கடத்தவில்லை என்பதுதான் ஒப்புக்கொள்ள வேண்டிய மறுக்க முடியாத உண்மை.

அதர்வாவும் அவனுடைய காவல்துறை நண்பர்களும் ஆள் அரவமற்ற அந்த சேரி பகுதிக்குள் இரவு நேரத்திற்கு செல்வது முதல் பரபரக்கும் திரைக்கதை... முதல் பாதி நிறைவடையும் வரை விர்ரென்று செல்கிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் அஸ்வின் காக்கமனுவின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் விரிவடையும் போது.. தெளிவான விவரணங்கள் காட்சி மொழியாக ... கருத்தியல் ரீதியாக ... உரையாடல் ரீதியாக ... விவரிக்கப்படாததால் குழப்பம் ஏற்படுகிறது. இருந்தாலும் இயக்குநர் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும், கொர்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றியும் சொல்ல முயற்சித்திருப்பது... ?! அதிலும் மாணவர்கள் வங்கிகளை கொள்ளையடிப்பது - அவர்களிடம் துப்பாக்கி ஆயுத புழக்கம் - விவசாயிகளுக்கு தங்களது வாழ்வாதாரத்தை அழித்ததுடன் மட்டுமல்லாமல் கடனாளியாகவும் மாறி தற்கொலை செய்து கொண்டதற்கு கொர்ப்பரேட்  நிறுவனங்களின் கைக்கூலிகளான காவலர்கள் தான் முதல் எதிரி என பல விடயங்களை  பட்டியலிடுகிறார். இதனை ஏற்றுக் கொள்ளவோ.. ஜீரணித்து கொள்ளவோ.. பார்வையாளர்களால் முடியாததால் கதை - படைப்பு-  பார்வையாளர்களிடமிருந்து வெகு தூரத்திற்கு விலகி செல்கிறது.

இருந்தாலும் சக்தி சரவணனின் ஒளிப்பதிவு - ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை - எக்சன் காட்சிகள் - படத்தை காப்பாற்றுகிறது.

தணல் - பயனற்ற சுரங்கம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right