வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன் ? - சிறீதரன் சபையில் கேள்வி

10 Sep, 2025 | 03:59 PM
image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் போர் முடிவடைந்து  16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தை அண்மித்துள்ள நிலையில்,  வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது  நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் 13 கிராம அலுவலர் பிரிவுகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள், பலாலி இராணுவ முகாம் இராணுவத்தினரின் வருகை மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 1990.06.15ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்தார்கள். 

இந்த இடப்பெயர்வு நிகழ்ந்து 35 வருடங்கள் கடந்தும். நாட்டில் போர் முடிவடைந்து 16 வருடங்கள் நிரம்பிய பின்னரும் இன்றுவரை மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ள அந்த மக்கள், இந்த நாட்டுக்குள்ளேயே இடைத்தங்கல் முகாம்களிலும்,உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் ஏதிலிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 2700 ஏக்கருக்கும் அதிக விஸ்தீரணமுடைய காணிகளைக் கொண்ட மயிலிட்டி, பலாலி, வசாவிளான்,கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், தையிட்டி, ஊறணி,தோலகட்டி உள்ளிட்ட பல பேரூர்களைச் சேர்ந்த மக்கள், தமது சொந்தக் காணிகளில் குடியேறும் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே இன்றும் வாழ்கிறார்கள்,ஆட்சி மாற்றங்கள்,அரசு மாற்றங்களின் பின்னும் அவர்களது மீள்குடியேற்றம் சாத்தியப்படுத்தப்படாமை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரதும், அவர்களது பிள்ளைகளினதும்,  அடுத்த தலைமுறையினதும் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள  13 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் கடந்த 36 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, இன்றுவரை சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாது இந்த நாட்டுக்குள்ளேயே ஏதிலிகளாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் எத்தனை என்பதை அமைச்சர் அறிவாரா?

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், இந்த மக்களுக்குச் சொந்தமான எத்தனை ஏக்கர் காணிகள் இன்றளவும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், குறித்த காணிகள் ஏன் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இந்த நாட்டில் போர் முடிவுற்று 10 ஆண்டுகளின் பின்னரும் வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன் என்பதையும்? இதனால் சொந்த மண்ணில் குடியேறி வாழ முடியாதவர்களாக அந்த மக்கள் படும் அவலங்கள் எத்தகையவை என்பதையும் அமைச்சரால் இச்சபைக்கு அறிவிக்க முடியுமா?

 புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தை அண்மித்துள்ள நிலையில், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இதுவிடயமாக,தங்கள் அமைச்சினால் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது சாத்தியமாகும் என்பதை இச்சபையில் பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா? அத்தகைய நடவடிக்கைகள் எவையேனும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனின் மேற்குறித்த மீள்குடியேற்ற விடயம் காலதாமதமாவதற்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? எனக்கேள்விகளை எழுப்பினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10