நடிகர் வ. கௌதமன் நடிக்கும் ' படையாண்ட மாவீரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

09 Sep, 2025 | 03:46 PM
image

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'படையாண்ட மாவீரா' எனும் திரைப்படம் - தமிழகத்தின் வட பகுதியில் மக்களின் தலைவராக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் வாழ்க்கை வரலாறு வரலாறாக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' எனும் திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.  கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நிர்மல் சரவணனராஜ் - எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 19ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் இயக்குநர் வ.கௌதமன் பேசுகையில், '' தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை இந்த தமிழ் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கிற மக்களுக்காக - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட-  அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது. இது மிகப்பெரிய கூட்டு முயற்சி.

சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரு தலைவரை - அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராக திகழ்ந்தவரின் வாழ்க்கை வரலாறு மக்களிடத்தில் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான். வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான்... இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் 'படையாண்ட மாவீரா'.

இந்தப் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்த கலைஞர்களுக்கு படத்தின் உச்சகட்ட காட்சியை திரையிட்டு காண்பித்தேன். அவர்கள் அனைவரும் கண்ணீருடன் எம்மை கட்டி அணைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right