க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஷ்மி காந்தன் 2016 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 70 மில்லியன் ரூபாயும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 75 மில்லியன் ரூபாயும் கொடுத்தார். என்னிடம் அதிகமாகவே பணப்புழக்கம் இருக்கும். வழமையாக நிதிக்கூற்று அறிக்கையோ பற்றுச்சீட்டுக்களையோ நான் பேணுவதில்லை ஆகவே இந்த பணத்துக்கும் பற்றுச்சீட்டுக்கள் எவையும் பேணப்படவில்லை என க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளர் வி. ஜே சின்னையா தெரிவித்தார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வசித்ததாக கூறப்படும் மொனார்க் ரெசிடன்சி மனைத்தொகுதிக்கு குறித்த 145 மில்லியன் ரூபாயே பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஏற்கனவே சாட்சியமளித்த அவ்வீட்டின் உரிமையாளர் வினோதினி விஜேசூரிய தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் 145 மில்லியன் ரூபா பணம் என்னிடமே இருந்ததாகவும் பற்றுச்சீட்டுக்கள் எவையும் பராமரிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை எனவும் வி. ஜே சின்னையா சாட்சியமளித்தமை பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நகைப்புக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது.

குறித்த மனைத்தொகுதியை அர்ஜூன் அலோசியஸ் தானாகவே முன்வந்து அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு  பெற்றுக்கொடுத்ததாக ஏற்கனவே சாட்சியமளித்த  வினோதினி  விஜேசூரிய மனைத்தொகுதி கொள்வனவுக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நேரடி தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த பணம் பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவர் தன்னிடம் கொடுத்ததாக வி. ஜே சின்னையா சாட்சியமளித்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அனைவரையும் முட்டளாக கருதி சிறுபிள்ளை போல் நடந்துகொள்வதும் அரசியலமைப்பின் மேல் கைவைத்து உண்மையை கூறுவதாக சத்தியம் செய்துவிட்டு இவ்வாறு சாட்சியமளிப்பது வியப்பாக உள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் பி.எஸ் ஜெயவர்தன தெரிவித்தார்.

நேற்று காலை 10.30 க்கு ஆரம்பமாகிய பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளர் வி. ஜே சின்னையாவின் சாட்சிப்பதிவுகளோடு ஆரம்பமாகியது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தின் முக்கிய காலகட்டமாக கருதப்படும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி  முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி கருதப்படுகின்றது. குறித்த காலப்பகுதிக்கு பின்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கொள்வனவு செய்யப்பட்ட வீடு தொடர்பில் ஆராயும் நோக்கில் அமைச்சர் ரவி கருணாநாணாயக்கவின் கம்பனியான க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளராக கடமையாற்றிய வி. ஜே சின்னையா விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை அணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

கொழும்பு - புதுக்கடையில் உள்ள நீதியமைச்சின் கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி விசாரணை ஆணைக் குழுவின் விசாரணை அறையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்து முதலில்மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் நிஹால் பெர்னான்டோவின் நெறிப்படுத்தலுடன் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.

கேள்வி: உங்களது பெயர் என்ன?

பதில்: வி. ஜே சின்னையா

கேள்வி: வயது என்ன?

பதில்: 63

கேள்வி: தற்போது என்ன தொழில் செய்கின்றீர்கள்?

பதில்: க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளராக கடமையாற்றுகின்றேன். 

கேள்வி: ஏதேனும் வங்கியில் பணிப்புரிந்தீர்களா?

பதில்: ஆம். இலங்கை வங்கியில் ஆலோசகராக செயற்பட்டு வந்தேன்

கேள்வி: எப்போதிலிருந்து கடமையாற்றினீர்கள்? 

பதில்: 2015 ஆரம்பத்திலிருந்து 2016 கடைசிப்பகுதி வரையிலும்

கேள்வி: க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தில் எப்போது இணைந்துக்கொண்டீர்கள்?

பதில்: 2013 நவம்பர் முதலாம் திகதியிலிருந்து

கேள்வி: சிரேஸ்ட நிதி முகாமையாளராக யாருக்கு அறிக்கையை சமர்ப்பீர்கள்?

பதில்: அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு 

கேள்வி: க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் நிர்வாகிகள் யார்?

பதில்: அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா கருணாநாயக்க, அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவி மேலா கருணாநாயக்க, டி.வி லக்ஷ்மிகாந்தன், லக்ஷ்மி சங்கர் (டி.வி லக்ஷ்மிகாந்தனின் மகன்)

கேள்வி: அமைச்சர் ரவி கருணாநாயக்க க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் கம்பனியிலிருந்து எப்போது விலகினார்?

பதில்: 2015 ஜனவரி எட்டாம் திகதி அவர் நிதியமைச்சராக பதவியேற்றதன் பின்னர் அந்த கம்பனியிலிருந்து பதவி விலகினார்.

கேள்வி: மொனார்க் ரெசிடன்சி மனைத்தொகுதியை வாங்குவதற்கு: யார் முடிவெடுத்தார்கள்?

பதில்: க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் நிர்வாகிகள்

கேள்வி: ஏன் அந்த மனைத்தொகுதியை வாங்க முடிவெடுத்தீர்கள்?

பதில்: வெளிநாட்டு வர்த்தகர்கள் இங்கு தங்குவதற்கும் எங்களது கம்பனி சார்பானவர்கள் இந்த மனையில் தங்கினால் எமக்கு சேமிப்பாக இருக்குமென கருதினோம்.

கேள்வி: மனைத்தொகுதியை வாங்க நீங்கள் யாருடனும் இணக்கப்பாடு செய்தீர்களா?

பதில்: குறித்த மனையை பெறுவதற்கு இலங்கை வங்கியில் கடனைப்பெற நான் விண்ணப்பித்திருந்தேன்.

கேள்வி: அந்த மனைத்தொகுதியில் அமைச்சர் ரவி கரணாநாயக்க குடும்பம்தான் தங்கியிரந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

பதில்: தெரியாது

கேள்வி: வங்கியில் கடன் எவ்வாறு பெறப்பட்டது

பதில்: நேரயாக நாம் 72 மில்லியன் ரூபாவை வங்கியிடமிருந்து கோரியிருந்தோம். அதன்பின்னர் சீதுவை மனைத்தொகுதியை கொண்டு 78 மில்லியன் ரூபாவை வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொண்டோம்.

கேள்வி: அதன்பின்னர் என்ன சமரசத்துக்கு வந்தீர்கள்?

பதில்: நான் சமரசம் செய்யவில்லை. அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குடும்பத்தினர்தான் சமரசம் செய்தார்கள்.

கேள்வி: மனைத்தொகுதியை வாங்க யார் உங்களுக்கு பணம் கொடுத்தார்கள்?

பதில்: க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் நிர்வாகிகள்

கேள்வி: உங்களிடம் லக்ஷ்மி காந்தன் எவ்வளவு பணம் கொடுத்தார்?

பதில்: அவர் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இலங்கைக்கு வருவார். முன்பெல்லாம் அடிக்கடி வருவார். அப்போது அவ்வாறில்லை. 2016 அம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் இலங்கைக்கு வரும் போது என்னிடம் 70 மில்லியன் கொடுத்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்இலங்கைக்கு வரும் போது 75 மில்லியன் ரூபாய் கொடுத்தார்.

கேள்வி: அந்த பணத்தை அவர் டொலராக கொடுத்தாரா? அல்லது இலங்கை பணமா?

பதில்:இலங்கை பணம் 5000 ரூபாய் தாள்கள்

கேள்வி: எத்தனை பெட்டியில் கொடுத்தார்? 

பதில்:இரண்டு பெட்டிகளில் கொடுத்தார்

கேள்வி: லக்ஷ்மி காந்தன் உண்மையாலும் ஒரு வர்த்தகரா?

பதில்: ஆம்

கேள்வி: அப்போது ஏன் அவ்வளவு அனுபவம் இருக்கும் ஒருவர் அவ்வளவு பெரிய பணத்தொகையை எவ்வித பாதுகாப்புமின்றி பெட்டிகளில் போட்டுக்கொடுத்தார்.

பதில்: அது எனக்கு தெரியாது

கேள்வி:பணத்தை எப்படி கொண்டு வந்தீர்கள் 

பதில்: காரில்தான்

கேள்வி: அவ்வளவு பெரிய பணத்தொகையை பெற்றுக்கொண்டமைக்கு ஏதேனும் பற்றுச்சீட்டு இருக்கின்றதா?

பதில்:இல்லை 

கேள்வி: ஏன்?

பதில்: நான் அவ்வாறான பற்றுச்சீட்டுக்களை வழமையாக பராமரிப்பதில்லை. இப்போது கூட என்னிடம் 50 மில்லியன் ரூபா உள்ளது. நான் அப்படித்தான்.

கேள்வி: ஒரு மிகப்பெரிய கம்பனிக்கு நிதி ஆலோசகராகவும் பொறுப்புமிக்க பதிவியில் உள்ள நீங்கள் இவ்வாறு பொறுப்பற்ற பதில் கூறுகின்றீர்களே?

பதில்:இல்லை நான் உண்மையைதான் கூறுகின்றேன். லக்ஷ்மி காந்தன் என்னிடம் கொடுத்த பணத்துக:கு என்னிடம் பற்றுச்சீட்டுக்களும் இல்லை

கேள்வி: நீங்கள் குறிப்பிடுவதுபடியே மற்றவருடைய பணத்தை உங்களிடம் கொடுக்கும் போது அது எங்கிருந்து வந்தது அல்லது அவ்வளவு பெரிய தொகையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பயமாக இருந்ததா?

பதில்:இல்லை. என்னிடம் உள்ள பணம் அனைத்தும் பாதுகாப்பத்தான் உள்ளது.

கேள்வி: பணச்சலவை சட்டத்தின்படி நீங்கள் செய்தது குற்றமென்பபது உங்களுக்கு தெரியுமா?

பதில்: நான் குற்றம் செய்யவில்லை

கேள்வி: அந்த பணத்தை பின்னர் என்ன செய்தீரகள்? 

பதில்: அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவி இலங்கை வங்கியில் கொடுத்த கடனுக்காக செலுத்திவிட்டு வர சொன்னார்.

கேள்வி: அப்போது உங்களது கம்பனியின் வருடாந்த நிதிக்கூற்று அறிவிப்பில் தவறு ஏற்பட்டிருக்குமல்லவா?

பதில்:இல்லை. இந்த பணத்தை வரவாகத்தான் சேர்த்தேன். அத்தோடு கம்பனி நிர்வாகத்தின் ஆலோசகனாக மட்டுமே நான் செயற்பட்டேன்.