காவுகொள்ளப்படும் இலங்கையின் கரையோரங்கள் : "Google earth" புலப்படுத்தும் காட்சிகள் ! 

Published By: Priyatharshan

09 Jun, 2026 | 06:08 PM
image

(வீ.பிரியதர்சன், ஏ. நிவேதா, எஸ். சுபதர்சினி )

இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பானது தீவிரமடைந்து வருவதால் பல ஏக்கர் நிலங்கள் இழக்கப்படுவதுடன் சுற்றுலாத்துறை, மீன்பிடித்துறை ஆகியன பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளன.

களுத்துறை வடக்கிலுள்ள மீன்பிடித் துறைமுகம் 75 மீன்பிடிப் படகுகளுடன் அண்ணளவாக சுமார் 200 மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்திருந்து. மீனவக் குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம்  பேரின் வாழ்வாதாரமாக இது காணப்பட்டது. எனினும் தற்போது இந்த துறைமுகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக்காக கடலில் இருந்து எடுக்கப்பட்ட மணல் காரணமாக பல இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் மற்றும் பிரதேச மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். 

எம்.எஸ்.என். சுபுன் பெரேரா

" கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொழும்புத்துறைமுக நகர கட்டுமானப் பணிகள் மற்றும் கலிடோ கடற்கரை கால்வாய் விஸ்தரிப்பு காரணமாக கடலரிப்பு அதிகரித்துள்ளது. இந்த மீன்பிடித் துறைமுகம் திடீரென அழிந்து போகும் பட்சத்தில் குறித்த மீனவக் குடும்பங்கள் அரசாங்கத்துக்கு சுமையாக வேண்டிய நிலை ஏற்படலாம். இது சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். தற்போதைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2004 ஆம் ஆண்டளவில் இங்கிருந்து சுமார் 40 முதல் 50 மீற்றர் தொலைவில் கடல் காணப்பட்டது. எனினும் தற்போது 50 மீற்றர் நிலப்பரப்பை கடல் உள்வாங்கியுள்ளது," என்கிறார் மீனவத் தொழிலில் ஈடுபடும் சம்மாட்டியான எம்.எஸ்.என். சுபுன் பெரேரா.

கலாநிதி கே. அருளானந்தன்

தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. அருளானந்தன் இது பற்றிக் கூறும் போது “ கொழும்பு துறைமுக நகர கட்டுமானப் பணிகளின் காரணமாக பருவப்பெயர்ச்சியின் போது தெற்கு நோக்கி காவிச் செல்ல வேண்டிய மண் அப்பகுதிகளில் அடைப்பட்டுள்ளதால் இவ்வாறான நிலை உருவாகியுள்ளதாகக்” கூறுகிறார். 

கடற்கரையோரங்களில் இருக்கும் கனிம வளங்கள் தொடர்ச்சியாக அகழப்படுவதாலும் கண்டல் தாவரங்களின் அழிப்பு, சனத்தொகை அதிகரிப்பு மற்றும் மனித நடவடிக்கைகளாலும் குறிப்பாக கொழும்பு துறைமுக நகர் போன்ற பாரிய அபிவிருத்தித்திட்டங்களால் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். பின்னர் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் சில ஆண்டுகாலம் தடைப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் பின்னர் 2017 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.கடலுக்குள் இருந்து மண்ணை எடுத்து கடல் பரப்பில் அந்த மண்ணை நிரப்பி 269 ஹெக்டேயர் நிலம் உருவாக்கப்பட்டு கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடம்பெற்றது. தற்போது கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 1.4 பில்லியன் அமெரிக்க டெலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

பேராசிரியர் பி.பி.டெர்னி பிரதீப்குமார

“ நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் கட்டுமானங்கள் கடலரிப்பை மேலும் மோசமடையச் செய்கின்றன. ஏனெனில் கட்டுமானங்களை முன்னெடுக்கும் போது கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.அவ்வாறு எடுக்கப்பட்டாலும் அந்த நடவடிக்கைகளின் தரம் குறித்து கேள்விகள் எழும்புகின்றன.எனவே இயற்கையான காரணிகளை விட செயற்கையான காரணிகள் கடலரிப்புக்கு அதிகமான தாக்கத்தை செலுத்துகின்றன. கொழும்பு துறைமுக நகரத்தினால் கடலரிப்பு அதிகரித்தது என்ற ஒரு காரணத்தைக்கூற முயற்சித்தாலும் அதற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக விரிவாக்க திட்டத்தின் தென்முனைய அபிவிருத்தி காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடல் நீரோட்டத்தை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள அலைத்தடுப்புச் சுவர் முற்றிலுமாக கடல்நீரோட்டத்தை மாற்றியமைத்துள்ளது” என்கிறார் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.டெர்னி பிரதீப்குமார.

"முறையான நில மற்றும் சூழல் ஆய்வுகளை மேற்கொள்ளாது மேற்கொள்ளப்படும் இவ்வாறன அபிவிருத்தி செயற்பாடுகளினால் காலப்போக்கில் நாட்டின் கரையோரப் பகுதிகளுக்கு பலத்த சேதம் ஏற்படலாம். இதனால் தெற்கில் உள்ள நிலங்கள் சுருங்கியுள்ளன அல்லது கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் கரையோர பகுதிகளில் வாழ்பவர்கள் மட்டுமன்றி மீனவர்களும் கடுமையான பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.” என அருளானந்தன் கூறுகிறார். 

கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் கற்களைக் கொண்டு பாதுகாப்பு அரண்கள் மற்றும் மணல் நிரப்பப்பட்ட பைகளை அடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அபிவிருத்தி நடவடிக்கைகளின் பின்னர் களுத்துறை, பேருவளை, மொரட்டுவை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்கள் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.அந்த இடங்களில்  பாராங்கற்களை இட்டு கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் கடலரிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

நியூட்டன் பெர்னாண்டோ

“களுத்துறை எனது சொந்த ஊர். இப்பகுதியில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்று இருந்தது. அப்போது இங்கிருந்து சுமார் 100 மீற்றருக்கு அப்பால் கடல் இருந்தது. இது சுற்றுலா பயணிகளைக் கவரும் பகுதி, இப்பகுதியில் சுமார் 100 மீனவக் குடும்பங்கள் வசித்து வந்தன. தற்போது வீட்டு அத்திபாரங்களின்  இடிபாடுகளையே இங்கு காணலாம். கலிடோ கடற்கரையென்றால் யாவரும் அறிந்த பிரபலமான பகுதி, ஆனால் இப்பகுதியும் தற்போது கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கத்தால் கல்லணைகள் போடப்பட்டுள்ள போதும் கடலரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அலைகளால் தள்ளப்படும் மணல், வீதிகளில் குவிந்துள்ளதுடன், சில வீதிகளும் சேதமடைந்துள்ளன.” என தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார் 76 வயதான ஓய்வூதியர் நியூட்டன் பெர்னாண்டோ.

“ கொழும்பு துறைமுகநகர நிர்மாணிப்பின்போது பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு மீனவர்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. ஆனால் அவை நிரந்தரமான பாதிப்புகளாக இருக்கவில்லை. மாறாக ஒரு தற்காலிக நெருக்கடியாகவே கவனத்தில் கொள்ளப்பட்டது. துறைமுக நகர கட்டுமானத்தின் போது சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசரநிலை காரணமாக அந்த மதிப்பீடுகள் ஆரம்பத்தில் உரியவகையில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலத்தில் கிழம்பிய எதிர்ப்புக்களினால் அந்த சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு முழுமைபெற்றது. சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகளின் முதலீட்டு திட்டங்களின் போது இலங்கையின் கடற்சூழல் மற்றும் இயற்கைக்கு பாதிப்பின்றி அந்த திட்டங்களை உள்வாங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் ” என கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.டெர்னி பிரதீப்குமார கூறுகின்றார்.

2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் 25 மீற்றர் நிலப்பகுதி கடலரிப்புக்குள்ளாகி வந்துள்ளது. ஆனால், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் 60 முதல் 90 மீற்றர் நிலப்பரப்பு ஒவ்வொரு ஆண்டும் கடலரிப்பினால் பறிபோகின்றமையை செய்மதி படங்கள், "Google earth" காட்சிகள் மூலம் அறிய முடிகின்றது.

கொழும்பு துறைமுகநகர் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வருட ரீதியாகவும் செய்மதி (செயற்கைக் கோள்) படங்கள், "Google earth" காட்சிகளை அவதானிக்கும்போது, கடலரிப்பின் தீவிரத்தன்மை புலப்படுகின்றது.

“2012 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் சீன அரசாங்கத்தின் நிதி உதவி மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பொதுவாக கடல்சார் அபிவிருத்திப் பணிகளின் போது சூழல் மதிப்பீடுகளை செய்வது அவசியம். இதன்மூலம் இயற்கையின் சமநிலையை எம்மால் பேணக் கூடியதாக இருக்கும். துறைமுக நகரம் தொடர்பில் மொரட்டுவை பல்கலைக்கழகம் சூழல் மதிப்பீடுகளை மேற்கொண்டது. துறைமுக நகரம் உருவாக்கப்படுவதற்கு முன்னர், கொழும்பு துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த பழைய துறைமுகம் இயற்கைக்கும் பருவப்பெயர்ச்சிக்கும் எவ்வித தடையையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருந்தது.” என்கிறார் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. அருளானந்தன். 

கொழும்பு துறைமுகநகர் அபிவிருத்தித் திட்டம் போன்றே, அம்பாறை மாவட்டத்தின் கரையோரைப் பிரதேசங்களில் கடலரிப்பு தீவிரமடைய, ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பும் காரணம் என கூறப்படுகின்றது. ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையிலான பகுதிகளில் கடலரிப்பின் காரணமாக, 400 மீற்றர் வரையிலான நிலப்பகுதிகள் கடலுக்குள் மறைந்துள்ளன. 

“இயற்கைக்கு எதிரான மனித செயற்பாடுகள் காலப்போக்கில் மனித இனத்திற்கே பெரும் கேடு விளைவிப்பதாக அமையலாம். ஒலுவில் துறைமுகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் கடல் நீரோட்டம் தடைப்பட்டு குறுகிய காலப்பகுதியில் ஒலுவில் துறைமுகத்தின் தென்பகுதியில் மண் அடைப்புகள் ஏற்பட்டமையால், அத்துறைமுக கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இவ்வாறான கட்டுமானப் பணிகளால் வட பகுதியில்  உள்ள தெங்கு பயிர்ச்செய்கை மற்றும் வயல் நிலங்களும் அழிவடையக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.” என தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. அருளானந்தன் கூறினார். 

துறைமுக நகரத் திட்டம் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்த கவலைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துறைமுக நகர அபிவிருத்திக்காக கடலில் இருந்து எடுக்கப்பட்ட மணல் காரணமாக பல இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் மற்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

“ தவறான சூழல் தாக்க மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே ஒலுவில் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.  இதன் தாக்கம் அந்த துறைமுகத்தை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்க முடியாமல் போனது, கடல் மணல் துறைமுகத்திற்குள் நிரம்பும் சூழல் ஏற்பட்டது. இதற்கு பிரதான காரணம் உரிய சூழல் தாக்க மதிப்பீடின்றி முன்னெடுக்கப்பட்டதாகும். இது அரசியல் தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையென்பதே உண்மையாகும். இதனால் பெருந்தொகையான நிதி வீண்விரயமாகியுள்ளது. அது மாத்திரமின்றி இயற்கை வளங்களும் வீணடிக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்வரும் காலங்களில் அரசியல் நோக்கங்களுக்கு அல்லாது உண்மையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட தீர்மானங்கள் எடுக்கப்படும். ஒலுவில் துறைமுக கட்டுமானங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகள் மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த  தடையாகியுள்ளதாக” கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.டெர்னி பிரதீப்குமார கூறினார்.

பெ. இந்திராணி

“நாங்கள் வசிக்கும் இப்பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் இது அதிகரித்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் அதிகளவானவர்கள் சுற்றுலாக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இதனால் அவர்கள் நட்டமடைந்து உள்ளனர். ஹோட்டல்களுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. 100 மீற்றர் வரை கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. நாம் இங்கு வந்து 40 வருடங்களாகின்றன. கடந்த 5 வருட காலப்பகுதியிலேயே கடல் அதிகமாக உள்வாங்கப்பட்டுள்ளது.” என களுத்துறைப் பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட  ஹோட்டலொன்றின் உரிமையாளரான பெ. இந்திராணி கவலையுடன் தெரிவித்தார். 

எந்தவொரு அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது அதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அதனை பொறுப்பான திணைக்களம் பார்வையிட வேண்டும் என்றும் அதனை 30 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கருத்துக்களை பெற வேண்டும் என்றும் அதன் பின்னர் அபிவிருத்தித்திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே நடைமுறையாகும். சூழல் தாக்க மதிப்பீட்டை முறையாக செய்திருந்தால் விளைவுகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்க முடியும். தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. கடலரிப்பை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தாலும் அது பலனளிக்கவில்லை.

ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாகவோ அல்லது கடற்படை நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்தக்கூடியக் சூழல் இல்லை. நீர் விளையாட்டுக்கள் மற்றும் அரியவகை மீன்கள் வளர்ப்பு போன்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய திட்டங்களை ஒலுவில் துறைமுக பகுதியில் ஆரம்பிப்பதன் ஊடாக பலனடைய முடியும். அரசியலை முன்னிலைப்படுத்தி தீர்மானங்கள் எடுக்கும் போது இவ்வாறான அழிவுகளே ஏற்படும். கடன்திட்டத்தின் கீழ் ஒலுவில் துறைமுக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் அந்த கடன்தொகை நாம் மீள செலுத்த வேண்டும். அது உதவித் திட்டமாக இருந்தால் அந்த நிதியை நாம் செலுத்த வேண்டிய தேவையில்லை” என்கிறார் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.டெர்னி பிரதீப்குமார.

 

வாழ்நிலை பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம்

“அபிவிருத்திகள் செய்யப்படும் போது அவை சுற்றுச்சூழல் தாக்க சட்டத்தின் கீழ் (environmental impact act ) கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அடிப்படையானது. நாட்டின் எந்தப்பகுதியிலும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது அங்கு எந்தவகையான சுற்றுச்சூழல் அமைப்புகள் காணப்படுகின்றன. அங்கு எந்த விதமான பாதிப்புகள் ஏற்படலாம். அவ்வாறான பாதிப்புக்களை எந்தவிதத்தில் குறைக்க முடியும் போன்ற சூழல் தாக்க மதிப்பீடுகளை எழுத வேண்டும் என்பதே சட்டம். கரையோரப் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்திற்குள்ளது” என்கிறார் வாழ்நிலை பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம்.

துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நிர்மாணப் பணிகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் 2018 ஆம் ஆண்டு சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு தகவலறியும் உரிமை ஊடாக விண்ணப்பம் செய்தது. அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் இரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்பதால் உரிய தகவல்களை வழங்க முடியாது என குறிப்பிட்டு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு குறித்த விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது. 

ஹேமந்த விதானகே

தகவலறியும் உரிமை சட்டம் ஊடாக விண்ணப்பப்பித்த சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் அதிகாரி ஹேமந்த விதானகே கூறுகையில், நாம் துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நிர்மாணப் பணிகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக 2018 ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்தும் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், நாம் தகவல் அறியும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மூலம் வழக்குத்தொடுத்தோம், அந்த வழக்கு 4 வருடங்களாக தொடர்ந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் உரிதரப்பினர்களை எமக்கு தகவல்களை வழங்குமாறு உத்தரவு வழங்கப்பட்டது. ஆனாலும் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்திற்கும், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கும் எதிராக சீன துறைமுக கூட்டுத்தாபனம் ( China Harbour Engineering Company ) நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு தற்போதும் இடம்பெற்று வருகின்றது.” என்றார்.

“கொழும்பு துறைமுக நகரம் போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளான கொள்ளுப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையான கடற்பரப்பு கல்லணைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் களனி கங்கையின் வடக்கு நோக்கி அமைந்துள்ள திக்கோவிட்ட பகுதியிலிருந்து ஏனைய பகுதிகளுக்கான நீரோட்டமும் முற்று முழுதாக தடைப்பட்டுள்ளது. இதனால் மேற்பகுதியிலிருந்து வட பகுதிவரையான கரையோரங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.” என தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. அருளானந்தன் கூறுகின்றார்.

சர்வதேச முதலீடுகளின்றி நாம் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது. ஆனால் அந்த முதலீடுகள் எமது நாட்டின் சட்டங்களுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். நாட்டுக்கு எது தேவை ? எது தேவையில்லை ? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நாட்டுக்கு ஏற்புடையதற்ற திட்டங்களை முதலீடுகளாக கொண்டுவரும் போது, அது மக்களுக்கு எதிராக செய்யும் துரோகமாகும். நாட்டின் நலன்கருதி சர்வதேச முதலீடுகளை உள்வாங்க முழு அளவில் அர்ப்பணிப்புடன் தீர்மானங்களை எடுப்போம் என்று கூறுகிறார் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.டெர்னி பிரதீப்குமார.

எனவே, கரையோர சூழலியலின் நிலையை மேம்படுத்துதல், கரையோரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் முகாமைப்படுத்துதல், கரையோரத்தில் வாழ்கின்ற சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், கரையோர வளங்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார அபிவிருத்தியை வசதிப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பான நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளமை முக்கியமாகும்.

கட்டுரையினை காணொளி ஊடாக பார்வையிட QR குறியீட்டை ஸ்கான் செய்யுங்கள் !

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி

2026-08-16 16:39:51
news-image

மாகா­ண­சபை தேர்­தல்கள் ; தமிழ்பேசும் கட்­சிகள்...

2026-08-16 16:33:05
news-image

'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...

2026-08-11 16:38:58
news-image

வடக்கில் காணிகளை  விடுவிக்க, மலையகத்தில் காணி...

2026-08-11 16:35:11
news-image

திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்

2026-08-09 11:28:34
news-image

மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...

2026-08-09 09:22:35
news-image

தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...

2026-08-04 16:53:13
news-image

வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தின் இன்­றைய நிலை என்ன?...

2026-08-03 11:19:12
news-image

பயணத்துக்கு முன்னரான வியூகங்கள்

2026-08-02 15:53:15
news-image

செம்மணி விவகாரம்...! பொறியில்  சிக்குவார்களா கடந்த...

2026-07-31 10:49:16
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் முன் தீக்குளித்த...

2026-07-28 11:51:00
news-image

தமிழ் பேசும் கட்சிகளின் இணைவை பேரினவாதமாக்கும் ...

2026-07-26 12:51:20