நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நோர்வே நாட்டில் தாதியர் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடிசெய்து வந்த பெண்ணாருவர் தளவத்துகொட பிரதேசத்தில் வைத்து பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் நேற்று  கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஆரம்ப கட்டணமாக  60 ஆயிரம் ரூபா என்றடிப்படையில் 35பேரிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த பெண்ணிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு அங்கிகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர் நிறுவனத்துக்குரிய அனுமதிப்பத்திரம் இல்லாதநிலையில் தனது வீட்டில் இருந்தவாறு பணம் சேகரித்துள்ளார். இந்த மோசடியில் மாட்டிக்கொண்ட ஒருவரினால் இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு செய்த முறைப்பாட்டுக்கமைய, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணியகத்தின் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் மாறு வேடத்தில் குறித்த பெண்ணுடன் தொடர்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, நபர் ஒருவரை ஆரம்ப கட்டணமாக 60 ஆயிரம் ரூபாவை செலுத்த  தந்திரமான முறையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றவேளை, அவரை கைதுசெய்ய முடிந்துள்ளது. சந்தேக நபரான குறித்த பெண் நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து 21 இலட்சம் ரூபாவுக்கும்  அதிக பணத்தை இவ்வாறு சேகரித்துக்கொண்டுள்ளதாக அவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சந்தேக நபரான பெண்ணை கைதுசெய்யும்போது, அவரிடமிருந்து கடவுச்சீட்டுக்களின் பிரதிகள், தொழில் விண்ணப்பங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்ணை கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்குமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.