பதுளை, பிபிலை பகுதியில் நேற்றிலிருந்து பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 15 இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விகாரைகள் என்பன பாரிய சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காற்றுடன் கூடிய தொடர் மழையின் காரணமாக சுமார் 15 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு பௌத்த விகாரை ஒன்றும் சேதமடைந்துள்ளது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்ததினாலேயே இச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

முறிந்தும் சாய்ந்தும் விழுந்த மரங்கள் மின் கம்பங்களிலும் தொலைபேசி கம்பங்களிலும் விழுந்துள்ளமையால் குறித்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளமையால் மக்கள்  சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இது வரை உயிர் சேதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மழையும் பலத்த காற்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளமையால் பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு அபாயம் மற்றும் எச்சரிக்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.