“அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னி ரெண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”
முருகப் பெருமான் ஈழமணித்திருநாட்டின் பல்வேறு இடங்களில் கோயில் கொண்டெழுந்தருளி அருள்மழை பொழிந்து வருகின்றார். முருகப் பெருமான் ஆலயங்களுள் முதன்மை பெற்றுத் திகழும் நல்லைக் கந்தன் ஆலயம் அமைந்திருக்கும் நல்லையம்பதி வரலாற்றுச் சிறப்பும், ஆன்மீகச் சிறப்பும் உடையது. நல்லையம்பதி என்னும் அழகிய திருப்பதியிலே அருட்கோல நாயகனாக வீற்றிருந்து அகிலமெல்லாம் அருள் சுமந்து கொண்டிருப்பவர் நல்லைக்கந்தன், அலங்காரக் கந்தன் என அனைவராலும் அழைக்கப்படும் அழகுக் கோலம் நல்லைக் கந்தனின் சிறப்பாகும். முத்தமிழால் வையகத்தாரையும் வாழ வைக்கும் முருகப்பெருமான் அருட்சக்திகளான தெய்வயானையம்மையும், வள்ளியம்மையும் அருகே வீற்றிருக்க ஷண்முகப் பெருமானாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். அழகன் முருகன் அலங்காரக் கந்தனாக வீற்றிருக்கும் அற்புதத் திருத்தலம் நல்லூர். முருகன் என்றால் அழகு என்று பொருளாகும். முருகப் பெருமான் என்றும் அழகுடன் திகழ்வதால் “கந்தன்” என்றும் இளமையுடன் திகழ்வதால், “குமரன்” என்றும் அழைக்கப்படுகின்றான். அழகன் முருகன் நல்லையம்பதியில் வீற்றிருந்து எல்லோரையும் வாழ வைக்கின்றான். உலகமெல்லாம் பரந்து வாழும் சைவ நன் மக்கள் எல்லாரும் கரங்குவித்து, வரம்வேண்டி நிற்கும் அற்புதமான தெய்வம் நல்லூர்க் கந்தப் பெருமானாகும். சங்கபோதி புவனேக பாகுவால் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசாமி கோயில் யாழ்ப்பாணத்தில் ஓர் அருள்மிக்க அற்புத ஆலயமாகக் காட்சியளிக்கின்றது. கருணைக் கடலாக வீற்றிருந்து அருள் மழை பொழியும் நல்லூர்க்கந்தனை வழிபடும் அடியார்களுடைய துன்ப துயரங்கள் இன்னல்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகுகின்றது என்பது அடியார்களுடைய நம்பிக்கையாகும். உதய சூரியனின் வெண்பொற் கதிர்கள் முருகப் பெருமானின் அழகிய கோபுரங்களின் மீது படர்ந்து ‘பளிச்’ என ஒளி வீச மணிக்கோபுரத்தின் மணியோசை ஆலயத்தின் நாலா பக்கத்திலும் ஒலிக்க அடியார்களைத் தன்வசப்படுத்தி அருளாட்சி செய்கின்றார் கந்தப் பெருமான். “ஒம் முருகா” என்ற அருட்கோபுரம் பல்லாயிரக் கணக்கான அடியார்களை வரவேற்கின்றது. ஆறுமுகப் பெருமான் அடியவர்கள் வருந்தியழைக்கும் போதெல்லாம் வேலோடும், மயிலோடும் தோன்றி அருள் புரிவான். “சுற்றி நில்லாதே பகையே துள்ளிவருகுது வேல்” என்ற கருத்துக்கு இன்றும் தனிப்பெருந்தெய்வமாக நிற்கின்றான் முருகப் பெருமான். நல்லூரில் இருந்து ஒலிக்கும் மணியோசை இந்து மக்கள் எல்லோருக்கும் குறிப்பாக யாழ்.குடா நாட்டு மக்கள் அனைவருக்கும் எந்நேரமும் இறைசிந்தனையைத் தோற்றுவிக்கின்றது. அடியார்கள் முருகப்பெருமானை நினைந்து “காதலாகிக் கசிந்து” கண்ணீர் மல்கி துதிக்கின்றார்கள்.
“வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை”
இப்பாடலிலிருந்து வேலின் பெருமைகளை அறிந்து கொள்ளலாம். வேலின் பெருமை எத்தகையது என்பதையும் அடியார்கள் உணர்ந்து கொள்ளலாம். நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கலியுக வரதனாம் முருகப் பெருமான் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் இருப்பது வெற்றிவேலாகும். இந்த வேல் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த வேலுக்குத் தெய்வீகமான ஈர்ப்புச்சக்தி உண்டு. இதனால்த்தான் அடியார்கள் வெள்ளம் நல்லையம்பதியில் கரைபுரண்டு ஓடுகின்றது. உற்சவ காலங்களில் மட்டுமல்லாது நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் முருகனைப் பாடிப், பரவி, பணிந்து வழிபடுகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தின் சிறப்புகள் அற்புதமானது. தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இக்கோயில் பெருங்கோயிலாக விளங்கி வந்திருக்கின்றது. சங்கிலி மன்னன் நல்லூரை இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கின்றான். அந்நியர் வருகையால் இக்கோயில் பாதிப்படைந்து பின்னர் பெருங்கோயிலாகக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இக்கோயிலைக் கட்டியவனாக சரித்திர வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவன் “புவனேகபாகு” என்பவனாவான். பரராஜசேகரன், செகராஜசேகரன் என்னும் அரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். இவற்றைப் பார்க்கும் போது இவ்வாலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதனைச் சரித்திர வரலாறுகள் நிரூபிக்கின்றன.
நல்லூர் கந்தசாமி கோயிலின் அமைப்பு மிகவும் அழகானது. பிரதான கோயில் கிழக்கு வாயிலைக் கொண்டுள்ளது. கோயிலின் உள்வீதியைச் சுற்றி உயர்ந்த மதில் கட்டப்பட்டுள்ளது. தேரோடும் அழகிய வீதி நாற்புறமும் உண்டு. சிறந்த சிற்ப வேலைப்பாடமைந்த அழகிய ஐந்தடுக்குக்கோபுரமும் அதன் இரு மருங்கிலும் அழகிய மணிக்கோபுரங்களும் கீழை வாயிலை அலங்கரிக்கின்றன. கந்தன் திருவிளையாடல்கள் சிற்ப வடிவில் அமைந்து காணப்படுகின்றன. வானளாவிய கோபுர உச்சியில் திருவிழாக் காலங்களில் சேவற்கொடி பட்டொளி வீசிப்பறக்கும். இவ்வழகிய கோபுரத்திலே அமைந்துள்ள மணிக்கூடு கால்மணிக்கொரு தடவை அடித்து காலத்தின் அருமையை நினைவூட்டும். கீழைக் கோபுர வாசலின் உச்சியில் “ஓம்” என்ற எழுத்தின் நடுவில் வேலின் வடிவமும், அதன் கீழ் “முருகா” என்ற எழுத்தும் பகலில் மாத்திரமன்றி இரவிலும் நன்கு தெரியக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரத்தில் கீழைக்கோபுர வாசல் வழியாக உள்ளே செல்லும் போது மண்டப வாயிலில் “சிவ சிவ” என்ற எழுத்துக்கள் யாவருக்கும் புலப்படக்கூடியதாகத் தென்படுகிறது. கருவறையிலே கந்தனின் கைவேல் நிறுவப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தனுடைய ஏவிளம்பி வருட மகோற்சவம் வெகு சிறப்பாக இன்று (28.07.2017) வெள்ளிக்கிழமை கொடியேற்ற விழாவுடன் ஆரம்பமாகின்றது. ஆடிமாதம் பிறந்துவிட்டால் அகிலமெல்லாம் முருகனின் பேரொளி வீசத் தொடங்கிவிடும். நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் கொடியேறிவிட்டால் நாடே புனிதம் பெற்றுவிடும். விரத அனுட்டானங்களுடனும், பயபக்தியுடனும் பக்தர் கூட்டம் நல்லூரை நாடிவரும். ஆடி அமாவாசை தினத்திலிருந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் ஆரம்பித்து, இருபத்து நான்காம் நாள் தேர் உற்சவமும், இருபத்தைந்தாம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெற்று மறுநாள் பூங்காவனத்துடன் முடிவடைகின்றது.
கொடியேற்றம், மஞ்சத்திருவிழா, கார்த்திகை உற்சவம், சந்தான கோபாலர் உற்சவம், கைலாசவாகன உற்சவம், கஜவல்லி, மகாவல்லி உற்சவம், வேல் உற்சவம் தெண்டாயுதபாணி உற்சவம், சப்பறம், தேர், தீர்த்தம் போன்ற சிறப்பான உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ் உற்சவங்கள் அடியார்களின் மனதைப் பரவசப்படுத்தி, முருகப் பெருமானின் சிறப்புகளை அடியார்கள் உணர்ந்து கொள்ளக் கூடியதாக அமைகின்றன.
திருவிழா நாட்கள் தோறும் விடியற்காலையிலிருந்தே நான்கு திசைகளிலிருந்தும் பக்தர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயத்தை நோக்கி வந்து சேருவார்கள். அடியார்கள் பலர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு விடியற்காலையிலேயே வெளிவீதி எங்கணும் அங்கப்பிரதட்சணம் செய்து முருகனை வழிபடுவார்கள். பஜனைக் கோஷ்டிகள் ஒருபுறம், காவடிகள் எடுப் போர் ஒருபுறம், தூக்குக் காவடி எடுப்போர் ஒருபுறம், கற்பூரச் சட்டிகள் ஏந்தும் பெண் கள் ஒருபுறம், அங்கப் பிரதட்சணம் செய் யும் அடியார்கள் ஒருபுறம், விழுந்து விழுந்து கும்பிட்டுக் கொண்டே வழிபடும் பெண்கள் ஒருபுறம். இப்படியாக அடியார்கள் பக்திக் கோலத்துடன் முருகப் பெருமானை வழிபடும் காட்சிகள் எல்லாம் உள்ளத்தைத் தொடவல்லது, மெய்சிலிர்க்க வைப்பதாகும்.
மெய்தான் அரும்பி விதிர் விதித்து, கைதாள் தலைமேல் வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி கந்தப்பெருமானை வழிபடுகின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சிகளாகும்.
நல்லூர்க் கந்தன் ஆலய வீதிகளில் எத்தனையோ சித்தர்களும் மகான்களும் ஞானியர்களும் பக்தர்களும் பண்ணோடு இசைபாடி, அவர்களுடைய பொற்பாதங்கள் எல்லாம் பதிந்த பெருமையுடையது. முரு கப் பெருமானை வலம் வந்து வீதிகளில் அடியார்கள் உருண்டும் பிரண்டும் ஆடியும் பாடியும் வழிபட்டு வருகின்றார்கள். இப்படியாக முருகப் பெருமானை வலம் வந்துவழிபட்டால் நமது பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்ற நம்பிக்கை அடியார்கள் மத்தியில் காணப்படுகின்றது. அடியார்களும் பண்ணோடு திருமுறைகளைப்பாடி வலம் வருகின்றார்கள்.
மற்றைய இடங்களுக்கு இல்லாத சிறப்பு நல்லூர் தேரடிக்குண்டு. முத்தர்களும் சித்தர்களும் ஞானிகளும் ஆடிப்பாடி நிற்பது நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு சிறப்பாக அமைகின்றது. இவ்வாலயத்தில் முருகப் பெருமானை தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் முதலியோர் வழிபட்டு இவ்வாலய வீதிகளில் உலாவி வந்திருப்பது இவ்வாலயத்திற்கும் இங் குள்ள சைவ நன்மக்களுக்கும் பெருமை சேர்க்கின்றது. செல்லப்பா சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் நல்லூர்த் தேரடியில் வாழ்ந்தவர்கள். நல்லூர்த் தேரடிக்கு மாத் திரம் எவ்வாறு சிறப்புகள் வந்தது என்பதை நாம் நோக்குவோமேயானால் இவர்கள் இருவரும் நல்லூர்த் தேரடியில் வாழ்ந்தமை தான் காரணமாகும். அடியார்கள் இவற்றை அறிந்து பக்திப் பரவசமடைகின்றனர்.
“நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி” என் பது யோகர் சுவாமிகளின் பாடலாகும்.
“நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப் போய் நல்ல மனத்தோடு நாம் பணிந்தால் நல்ல மயில் ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில் முருகன் தேறிவிடும் சிந்தை தெளி” மண்ணில் நல்ல வண்ணம் வாழ நல்லூர்க் கந்தன் அருள்புரிவாராக.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM