மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்கபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தமை முஸ்லிகள் மீதான அடிப்படை உரிமை மீறல் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாடுகளை அறுப்பதற்கு தாம் தடை விதிக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டிருந்தார் இந்த விடயம் முஸ்லிகள் மீதான அடிப்படை உரிமை மீறல் என்ற கோணத்தில் பார்க்கப்பட வேண்டும்.

ஏனெனில் புனித குர்ஆனிலும் நபி முஹம்மத் ஸல் அவர்களின் ஹதீஸிலும் இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உழ்ஹியா, அகீகர் போன்றவைகளை நிறைவேற்றுமாறு முஸ்லிம்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டில் அந்நியர்கள் ஆட்சி காலம் முதல் இன்று வரையில் ஆட்சி புரிந்தவர்கள் அனைவரும் முஸ்லிமகளின் அடிப்படை உரிமை மீறல் செயற்பாடுகளை புரியவில்லை.

எனவே இது குறித்து ஜனாதிபதிக்கு முற்று முழுவதுமாக விளக்கி சொல்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையின் கீழ் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.

இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விடயம் என்பதுடன் கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் மாடுகளை ஏற்றிச்செல்வதற்கு முட்டுக்கடை இடப்பட் சம்பவங்கள் பதிவாகியிருந்தன அதனை அதன் போது முன்னாள் அமைச்சர் பஷில் தலைமயில் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடி குறித்த விவகாரம் தொடர்பாக தீர்க்கமாக அலோசித்தனர்.

அதன் போது முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ அனுமதி பத்திரம் உள்ளவர்கள் மாடுகளை ஏற்றிச் செல்ல முடியும் என்ற சுற்று நிருபத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த அரசாங்கம் செய்தவையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான செயல் என்றால் தற்போதைய அரசாங்கமும் அதனையே செய்கின்றது.இதனால் மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போலாகிவிட்டது இந்நாட்டு முஸ்லிமகளின் நிலமை.

இந்த நிலை நீடிக்காதிருக்க அதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.