அர­சாங்கம் துணிந்து முடி­வு­களை எடுத்து ஆட்­சியை முன்­னெ­டுக்க வேண்­டு­மென எதிர்­க்கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் சபை யில் வலி­யு­றுத்­தி­ய­தோடு ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான தொழிற்­சங்க நட­வ­டிக்­கைகள் ஊடாக அர­சாங்­கத்­தினை கவிழ்க்க முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளாக பெற்­றோ­லிய உற்­பத்­திகள், திரவ எரி­வாயு, உட்­பட அனைத்து எரி­பொருள் தொடர்பில் ஜனா­தி­ப­தியால் பிர­சு­ரிக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி பத்­தி­ரி­கை­யினை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

நாங்கள் இன்று ஜனா­தி­ப­தியின் பிர­க­ட­னத்­தினைப் பற்றி இங்கு விவாத்­தித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். இந்த விடயம் சம்­பந்­த­மாக நானும் சில கருத்­துக்­களை முன்­வைக்க விரும்­பு­கின்றேன். இந்த நாட்டில் நீண்­ட­கா­ல­மாக தொழிற்­சங்கள் இருக்­கின்­ற­மையை அவ­தா­னித்­தி­ருக்­கின்றோம். ஜன­நா­யக சமூ­கத்­திற்கு தொழிற்­சங்கள் முக்­கி­ய­மா­னவை. 

தொழி­லா­ளர்­களின் உரி­மை­களும் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். தொழிற்­சங்­களை கௌர­வப்­ப­டுத்­து­கின்றோம். எமது ஆத­ர­வு­க­ளையும் வழங்­கி­யி­ருக்­கின்றோம். சில சம­யங்­களில் தொழிற்­சங்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற போது தமது கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்கள். 

குறிப்­பாக உத்­தேச கருத்­திட்­டங்­க­ளுக்கு எதிர்ப்­புக்­களை வெளிப்­ப­டுத்தி போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். தொழிற்­சங்க செயற்­பா­டுகள் நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு அவ­சி­ய­மா­ன­தாக இருந்­தாலும், ஜன­நா­யக விரோ­த­மான தொழிற்­சங்கப் போராட்­டங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பாரா­ளு­மன்­றத்தில் எனக்கு முன்னர் உரை­யாற்­றி­யி­ருந்த தினேஷ் குண­வர்த்­தன, பல விட­யங்­களில் தோல்­வி­ய­டைந்­துள்ள அர­சாங்கம் விரைவில் தேர்­தலை நடத்த வேண்டும் எனக் கோரி­யி­ருந்தார். உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளையோ அல்­லது மாகா­ண­சபைத் தேர்­தல்­க­ளையோ அவர் கோர­வில்லை.

பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்றே கூறினார். அர­சாங்­கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்­பதே அவர்­களின் தொடர்ச்­சி­யான நோக்­க­மாக இருக்­கி­றது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வி­ய­டைந்தார். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்கள் ஆணை வழங்­கி­னார்கள். மக்கள் வழங்­கிய தீர்ப்­புக்கு  முதலில் மதிப்­ப­ளிக்க வேண்டும். 

அதன் பின்னர் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அவரை பிர­தமர் வேட்­பா­ள­ராகக் கொண்டு போட்­டி­யிட்­டனர். இருந்­த­போதும் மக்கள் அவரை பிர­தமர் ஆவ­தற்குக் கூட அனு­மதி வழங்­க­வில்லை. ஆட்­சி­செய்­வ­தற்கு இந்த அர­சாங்­கத்­துக்கு கால­மொன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு முன்னர் அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தாயின் அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­ட­தாக அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்து அதில் வெற்­றி­பெ­று­வதன் ஊடா­கவே கவிழ்க்க முடியும்.

மக்­களின் தீர்ப்பு காணப்­ப­டு­கின்­றது. மக்­களின் தீர்ப்பு மாறாக என்­னி­டத்­தி­லி­ருந்து என்ன ஆத­ரவை எதிர்­பார்க்­கின்­றீர்கள். அத்­தி­யா­வ­சிய சேவை­களை முடக்கும் வகை­யி­லான தொழிற்­சங்கப் போராட்­டங்­களை நடத்தி அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சி­களை ஏற்க முடி­யாது. 

ஜன­நா­யக ரீதி­யாக இல்­லாத விட­யங்­களை வைத்து உரி­மைகள் வேண்­டு­மென போராட முடி­யாது. இந்த நாட்டில் பல்­வேறு முட்­டுக்­கட்­டைகள் அர­சாங்­கத்­திற்கு இருக்க வேண்டும் என்றே பல செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. நாட்டின் பொரு­ளா­தாரம் ஸ்திர­ம­டை­ய­வில்லை. 

ஆகவே அர­சாங்கம் துணி­க­ர­மான தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற வேண்டும். அர­சாங்கம் வினைத்­தி­ற­னுடன் இருக்க வேண்­டு­மாக விருந்தால் துணிந்து தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும்.  அந்த தீர்­மா­னங்­களை தைரி­ய­மாக நடை­மு­றைப்­ப­டுத்தி அர­சாங்கம் தனது ஆளு­கையை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

காணாமல் போன­வர்­க­ளுக்­கான அலு­வ­லகம் அமைக்கும் விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்­தி­னரை காட்டிக் கொடுப்­ப­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கூறி வரு­கின்­றனர். பிராந்­தி­யத்தின் சிறந்த இரா­ணுவத் தள­பதி என பாராட்­டப்­பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட பின்னர் நடத்­தப்­பட்ட முறையை பார்த்தோம். 

எவ்­வ­ளவு தூரம் நிந்­தித்து நடத்­தப்­பட்டார். அவ­ரு­டைய பதவி கூட பறிக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்­தினர் மீது அவர்கள் கொண்டிருக்கும் கரிசனை தொடர்பில் சந்தேகம் ஏற்படுகின்றது. நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்.

இனவாதத்தினை ஊக்குவித்து மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தினால்  எதனையும் சாதிக்க முடியாது. நல்லிணக்கத்தின் மூலமாக தான் சுபீட்சமான சிறந்த காலத்திற்கு செல்ல முடியும். ஆகவே ஆட்சியை செய்வதற்கு இடமளித்து மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.