ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பொறுப்புக்கூறலின் அவசியமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசரமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்த விடயங்களை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேக்குக்கு, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
இதேபோன்றே வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர்.
இந்தக் கடிதங்களில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேர்க், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு பதில் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
இத்தகைய நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது சில தினங்களுக்கு முன்னர் வோல்கர் டேர்க்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றது. அந்தக் கடிதத்தில் பொறுப்புக்கூறல் அவசியம் தொடர்பிலும் இலங்கை தமிழர்களுக்கான இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
வடக்கு, கிழக்கில் விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்துமாறும், உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தாமதமும் இன்றி நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கோரியுள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், ரோம் சாசனத்தில் கையொப்பமிடுவதற்கு அழுத்தம் கொடுக்குமாறும், வடக்கு-கிழக்கின் விரிவான அதிகாரப் பகிர்வுடன் புதிய சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், தமிழரசுக் கட்சியானது தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இலங்கை, பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றை தவிர இனப்படுகொலை, இனப்படுகொலைக்கான நோக்கம் ஆகியவற்றினைக் குறிக்கும் ஆதாரங்களை குறிப்பாக சேகரிக்க வேண்டும். இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தில் இந்த ஆதார சேகரிப்பு முக்கியமான விடயமாகும். இந்தச் செயற்றிட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கடந்த 16 வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
2011ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இன்னமும் நீதியை வழங்குவதற்கான பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு அன்றைய வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர இணை அனுசரணை வழங்கியிருந்தார்.
இந்தப் பிரேரணையில் சர்வதேச நீதிபதிகள் பங்கேற்கும் ஒரு கலப்பு நீதிமன்றம் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை வழங்கியிருந்தது.
இதனைவிட 2022ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான செயற்பாடு ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஆதாரங்களைத் திரட்டும் படிமுறையின் கீழ் இதுவரை 34,000 ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. அதனைத்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தனது கடிதத்தில் தற்போது வலியுறுத்தியிருக்கின்றது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இம்முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணையில் இடம்பெற வேண்டிய விடயங்களையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அதேபோன்றே ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விடயங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேர்க் தனது அறிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார். எதிர்வரும் 08ஆம் திகதி வெளியிடவுள்ள தனது அறிக்கையை அரசாங்கத்தின் பதிலை பெறுவதற்காக அனுப்பியிருக்கின்றார்.
அந்த அறிக்கையில் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும் நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும் சகல சமூக மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இந்தவேளையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதனூடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று வோல்கர் டேர்க் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டு வரும் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையினூடாக 34,000 தரவுகள் மற்றும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பிலும் விசாரணைகளின் நியாயத்தன்மையின் அவசியம் குறித்தும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த கொள்கையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பின்பற்றி வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் பொறுப்பாக நடந்து கொள்ளும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனால்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றில் அந்தக் கட்சிக்கு தமிழ் மக்கள் பேராதரவினை வழங்கியிருந்தனர்.
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியே பெரும்பான்மையை உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.
இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது.
ஆனால், புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையிலும், இன்னமும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விவகாரத்திலோ உரிய அக்கறையினை இந்த அரசாங்கம் செலுத்தியிருக்கவில்லை.
கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. உரிமை ஆணைக்குழுவில் 2022ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போது அதனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கு எதிராக அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.
இதேநிலைப்பாட்டில்தான் தற்போது வரை அரசாங்கம் இருந்து வருகின்றது. இதனால்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்படுகின்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கூட, ரோம் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. எனவே, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய மக்கள் அரசாங்கமானது இனியாவது செயற்பட வேண்டும். பொறுப்புக்கூறல் விடயத்திலும் அரசியல் தீர்வு விவகாரத்திலும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM