பாராளுமன்ற இன்றைய அமர்வின் போது இடம்பெற்ற சர்ச்சை மற்றும் கூச்சல் குழப்பங்களின் மத்தியிலும் 7 நிதிச் சட்டமூலங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தொடர்பில் பிரதமர் விடுத்த அறிவிப்பையடுத்து இடம்பெற்ற குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமான நிலையில், தொடர்ந்தும் அந்த அறிவிப்பு குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, டினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, நளின் பண்டார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கிடையில் முரண்பாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் சபையில் பெரும் கூச்சல் குழப்பங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் அரசாங்கம் அவசரஅவசரமாக 7 நிதிச் சட்டமூலங்களை சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெற்றோலிய ஊழியர்களை இராணுவத்தினரை கொண்டு அடக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என என தினேஸ் குணவர்தன தெரிவிக்க அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உங்களுடைய ஆட்சியில் இடம்பெற்ற வெலிவேரிய சம்பவம் போன்றது அல்ல இது கொலன்னாவ என பதிலளித்துள்ளார்.

இதேவவேளை, பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு  வந்த 21 நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் அரசாங்கம் இது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சபையில் இருத் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட சபை நடவடிக்கைகளை நாளை வரை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.