பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தலவாக்கலை, வட்டகொட பகுதிகளிலுள்ள சில வீடுகளில் தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைத் தேடும் வேட்டையில் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டு வந்தனர். 

அந்த வகையில்  திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர்  திருட்டில் ஈடுபடும்போது கையும் மெய்யுமாக தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் பகுதியில் வசித்துவரும் 23 வயதுடைய நபரே குறித்த களவுகளுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நிலையில் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.