சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூந்தாவரமொன்றை வளரச் செய்து அங்கு தங்கியுள்ள அமெரிக்க விண்வெளிவீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மேற்படி நிறவாதவப் பூந்தாவரத்தில் 13 இதழ்களைக் கொண்ட பூ பூத்துள்ளதை வெளிப்படுத்தும் புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க விண்வெளிவீரரான ஸ்கொட் கெல்லி புகைப்படமெடுத்துள்ளார்.
இது விண்வெளியில் பூச்சிய புவியீர்ப்பு நிலைமையில் முதன் முதலாக வளரச் செய்யப்பட்டு பூப்பூத்த தாவரம் என்ற பெயரைப் பெறுகிறது.
ஆரம்பத்தில் இந்தத் தாவரம் வளர்வதற்கு பெரும் சிரமத்தை எதிர் கொண்ட போதும் இறுதியில் வெற்றிகரமாக பூப்பூத்துள்ளது.
இந்த பரிசோதனையின் ஆரம்பத்தில் தாவர விதைகளைக் கொண்ட கொள்கலங்களில் நீர்க் கசிவு ஏற்பட்டதுடன் வேர் நீரில் மூழ்கியிருக்கும் நிலைமையும் ஏற்பட்டதாக நாசா விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தத் தாவரத்தில் பூத்துள்ள அந்தப் பூ உதிர்ந்த பின் பரிசோதனைக்காக பூமிக்கு எடுத்து வரப்படவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.