1948 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டில் நடைபெறும் விளையாட்டுத்துறை அமைச்சின் பொன் விழாவுடன் இணைந்ததாக இந்த நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய 41 வீர, வீராங்கனைகள் ஜனாதிபதிகளிடமிருந்து தங்க பதக்கங்களை பெற்றுக் கொண்டார்கள். தேசத்தின் புகழையும் கௌரவத்தையும் உலகுக்கு கொண்டு சென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளை பாராட்டுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், எந்தவொரு துறையிலும் திறமைசாலிகளையும் சிறந்தவர்களையும் பாராட்டுவது அவர்களுக்கு செய்யும் கௌரவமாவதுடன் நாட்டு நலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும் எனவும் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

தாய் நாட்டின் புகழை உலகுக்கு எடுத்துச்சென்ற எமது விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறமை, ஆற்றல், அறிவு மற்றும் அனுபவங்களை சமூகத்துக்கு வழங்கி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய பரந்த செயற்பாட்டின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அந்த அனைவரினதும் நலன்களுக்காக அரசாங்கம் என்ற வகையில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய எழுபது விளையாட்டு வீர, வீராங்கனைகள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்துக்கு 50 இலட்சம் ரூபா அன்பளிப்பு ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத் தலைவர் ஸ்ரீயானி குலவங்ஸ இதற்கு முன்னர் இவ்வாறான வாய்ப்பு இலங்கை ஒலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, மாகாண விளையாட்டு அமைச்சர்கள், விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.திஸாநாயக்கா, இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீயானி குலவங்ஸ, செயலாளர் தமயந்தி தர்ஷா, சுகத் திலகரத்ன உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.