வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள்  விடுதி முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பிற்கபல் 2.45 மணியளவில் நான்கு நபர் சென்று தங்குவதற்கு அறை வேணுமென கோரியுள்ளனர். 

எனினும் முகாமையாளர் அறை இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் முகாமையாளரை தாக்கி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டதையடுத்து விருந்தினர் விடுதியின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்த போது முகாமையாளர் தலையில் காயத்துடன் கத்திய வண்ணம் இருந்தார். காயமடைந்த குமார் என்னும் 48 வயதுடைய முகாமையாளரை உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக காயமடைந்த முகாமையாளரை  தொடர்பு கொண்டு வினாவிய போது, மதியம் நான்கு நபர்கள் மது போதையில் வந்தார்கள் . அவர்கள் என்னிடம் அறை வேணுமென கோரினார்கள். நான் இல்லை என தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் என் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றார்கள் என தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.