(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை உள்ளக பொறிமுறையிலேயே பலப்படுத்துவோம். விசாரணைகளுக்கு வெளிநாட்டு தலையீடுகள் அவசியமில்லை. தேசிய மட்டத்தில் அந்த செயற்பாடுகளை பலப்படுத்தியுள்ளதால் அது அவசியமில்லை. நீதித்துறைக் கட்டமைப்பு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் எவ்வித தலையீடுகளும் கிடையாது. இதனாலேயே பல வருடங்களாக எடுக்கப்படாத வழக்குகள் அண்மைக் காலங்களில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அத்துடன் பொலிஸ் திணைக்களத்திலும் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. தவறுகளை சரி செய்து நாங்கள் பொலிஸ் திணைக்களத்திலும் சுயாதீனத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பொறிமுறையை பலமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். ஒட்டுமொத்த மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு என்று வெளிவிவகாரத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்குரிய தேவையான திருத்தங்களை மேற்கொண்டு இந்த மாத இறுதியில் அதனை நிறைவு செய்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூல வரைபை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்போம். வெகுவிரைவில் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு இந்த சட்டம் செயற்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார மறுசீரமைப்பு
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டை பெறுப்பேற்றோம். வங்குரோத்து அடைந்து பொருளாதாரம் ரீதியில் வீழ்ந்திருந்தஇ கடனை மீளச் செலுத்த முடியாத நாட்டையே பொறுப்பேற்றோம். இதனால் புதிய அரசாங்கத்திற்கு இந்த பொருளாதார பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது தொடர்பிலேயே அதிகளவான அவதானத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்தது. இதன்படி நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டு வறுமை ஒழிக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கடன் மறுசீரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்தோம். 90 வீதம் இருதரப்பு கடன் மறுசீரமைப்பை செய்துள்ளோம்.
இதேவேளை நாட்டை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு நாட்டின் இன ஒற்றுமை முக்கியமானது. சகல இனத்தவர்களும் இந்த நாட்டின் மக்களே. நாங்கள் ஒரு தாய் பிள்ளைகளே. எங்களிடம் இனபேதம், மத பேதம் எதுவும் இல்லை. நாங்கள் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும். இதனால் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்படுகின்றது. சகல இலங்கையர்களும் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்து பயணிக்கவே விரும்புகின்றனர். இதனாலேயே வடக்கு, கிழக்கு மலையகம் என சகல பிரதேசங்களிலும் விசேட மக்கள் ஆணை வழங்கப்பட்டது. இதனை புரிந்துகொண்டு நாங்கள் செயற்பட வேண்டும். வரலாற்றில் நாம் பெற்ற அனுபவங்கள் உள்ளன. அந்த அனுபவங்கள் ஊடாக பாடம் கற்றுக்கொண்ட பாடங்கள் உள்ளன. அவற்றை புரிந்துகொண்டு அந்த அனுபவங்களுடன் பயணிக்க வேண்டும்.
அரசாங்கத்தை பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எங்களால் வழங்கக்கூடிய நிவராணங்களை வழங்கியுள்ளோம். முதல் வேலைத்திட்டமாக வறுமையை இல்லாமல் செய்தல் அடுத்ததாக நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.மக்களின் பொருளாதார ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தாத காரணத்தினாலேயே அநீதி காரணமாகவே சிவில் யுத்த நிலைமையும் உருவாகியது. இதனை நாங்கள் நன்றாக அடையாளம் கண்டுள்ளோம். இதற்கு பதில் தேடாமல் எதனையும் செய்ய முடியாது. இதனாலேயே சகல மக்களினதும் பொருளாதார உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
அரசியலமைப்பு உறுதிப்பாடு - இனப்பிரச்சினை
இதேவேளை நாங்கள் அரசியலமைப்புக்கு அமையவே செயற்படுவோம். நாங்கள் எமது இறையாண்மை, ஆட்புல அதிகாரம் ஆகியவற்றை பாதுகாத்தே தீர்மானங்களை எடுக்கின்றோம். எவ்வித வெளியார் அதிகாரங்களுக்கு அடிபணிந்து தீர்மானங்களை எடுப்பதில்லை. அரசியலமைப்பில் மாகாண சபைகள் முறைமை உள்ளது. அந்த முறைமையால் எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. அன்றும் நாங்கள் இந்த மாகாண சபைகள் முறைமையால் தேசியப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று கூறினோம். அது செயற்பாட்டு ரீதியில் உறுதியாகியுள்ளது. எனினும் அது அரசியலமைப்பில் உள்ள விடயமே.
இதன்படி மாகாண சபைகள் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அந்தத் தேர்தலை நடத்துவதில் சட்ட ரீதியான இடையூறுகள் உள்ளன. இந்த பாராளுமன்றத்தில் புதியதேர்தல் முறை தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி எல்லை நிர்ணயம் நடந்தாலும் அந்த எல்லை நிர்ணய அறிக்கை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படவில்லை. இதனால் புதிய சட்ட மறுசீரமைப்புடன் தீர்மானத்தை நிறைவேற்றி அந்தத் தேர்தலுக்கான சட்ட ரீதியிலான வழியை ஏற்படுத்தலாம். இதற்காக குறிப்பிட்ட காலம் எடுக்கும். தற்போதைய கால அளவுகளை பார்த்தால் இதனை விரைவாக செய்ய முடியாது. இதனை நிச்சயமாக நடத்துவோம். அரசியலமைப்புக்கமைய அந்தத் தேர்தலை நாங்கள் நிச்சயமாக நடத்துவோம். அந்த ஜனநாயக உரிமையை பாதுகாக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கடப்பட்டுள்ளோம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம்
அத்துடன் தேசிய பிரச்சினைக்கு நிரந்த தீர்வை பெற்றுக்கொள்வதற்காக புதிய அரசியலமைப்புக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனை நாங்கள் எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்களின் யோசனைகளை பெற்று சர்வஜன வாக்கெடுப்புக்கு உள்ளாகும் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பை நாங்கள் செய்வோம். இதுவரையிலான அரசியலமைப்பு எதுவும் மக்களால் அனுமதிக்கப்படவில்லை. பலவந்தமாகவே திணிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அந்த சம்பிரதாயத்தை மாற்றி மக்களின் அனுமதியுடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம். இது அவசரமாக செய்ய வேண்டியதில்லை. நாடென்ற ரீதியில் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு முதலில் முகம்கொடுத்து அதனை தோற்கடித்தே புதிய அரசியலமைப்புக்கு செல்வோம்.
தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபித்தல்
பொறுப்புக்கூறல் செயற்பாடு, தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடு மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நாங்கள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த விடயத்தில் எங்களுக்கு எவ்வித அரசியல் தேவையும் கிடையாது. நாட்டில் இருந்த நிலைமைகளுக்கு அமைய ஒரு சில சம்பவங்கள் நடக்கலாம். அவை அரசாங்கத்தால் திட்டமிட்டு செய்யப்படுபவை அல்ல. எவ்வாறியினும் நாட்டின் சகல பிரஜைகளின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டுமாயின் அதனையும் முன்னெடுக்கும்.
அதேபோன்று தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஐந்து வருட திட்டங்களும் அரசாங்கத்திற்கு உள்ளன. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என சகல பிரதேசங்களிலும் வாழும் மக்கள் தொடர்பான தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐநா அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளின் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளும் இதற்காக கிடைக்கின்றன. இதன்படி அந்த திட்டங்களில் ஒவ்வொன்றாக செய்து நாங்கள் முன்னால் செல்வோம்.
பொறுப்புக்கூறல் வகிபாகம்
பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை உள்ளக செயற்பாட்டிலேயே பலப்படுத்துவோம். அதற்கு வெளிநாட்டு தலையீடுகள் அவசியமில்லை. தேசிய மட்டத்தில் அந்த செயற்பாடுகளை பலப்படுத்தியுள்ளதால் அது அவசியமில்லை. நீதித்துறைக் கூட்டமைப்பு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் எவ்வித தலையீடுகளும் கிடையாது. இதனாலேயே பல வருடங்களாக எடுக்கப்படாத வழக்குகள் அண்மைக் காலங்களில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அத்துடன் பொலிஸ் திணைக்களத்திலும் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. தவறுகளை சரி செய்து நாங்கள் பொலிஸ் திணைக்களத்திலும் சுயாதீனத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக தேசிய பொறிமுறையை பலமாக முன்னெடுத்துச செல்ல முடியும்.
முன்னர் இருந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளின் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவே பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்கு வெளியார் தலையீடுகள் அவசியமாகும் என்று அன்று சர்வதேச நாடுகள் கூறின. ஆனால் நாங்கள் அந்த நிலைமையை மாற்றியமைத்து நம்பிக்கையூடாக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். நாங்கள் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
பயங்கரவாத தடைச்சட்டம்
பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது ஐநா மனித உரிமைகள் பேரவையோ கூறும் வரையில் காத்திருக்கவில்லை. எமது கொள்கைப் பிரகடனத்தில் அந்த சட்டத்தை நீக்குவோம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அது தொடர்பில் ஏற்கனவே நாங்கள் குழுவொன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழுவினர் பல சந்தர்ப்பங்களில் கூடியுள்ளனர். அதன்படி தேவையான திருத்தங்களை மேற்கொண்டு இந்த மாத இறுதியில் அதனை நிறைவு செய்து எதிர்வரும் செப்டம்பர் ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கும் சட்ட மூல வரைபை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்போம். வெகுவிரைவில் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
அதேபோன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஒரு பகுதி தற்போதும் பயன்படுத்தப்படுகின்றது. அது இனங்கள் மற்றும் மதப் பிரிவினரை இலக்ககக் கொண்டு பயன்படுத்தப்படவில்லை. திட்டமிட்ட பாதாள குழுக்கள் மற்றும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்,முஸ்லிம்கள் மட்டும் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கூற முடியாது. இதில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் அதிகமானவர்கள் சிங்களவர்களே. அவர்கள் பல்வேறு குற்றங்களுடன் தொடர்படையவர்களே. எவ்வாறாயினும் இந்த சட்டத்தை நீக்குவோம். எனினும் திட்டமிட்ட பாதாள குழுக்கள், போதைப் பொருள்வியாபரங்களை நிறுத்துவதற்காக பலமான சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
உண்மைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் நாங்கள் 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்தே கூறுகின்றோம். எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதனை செயற்படுத்துவோம். இப்போது காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்துடன் பிரச்சினைகள் உள்ளன. அதில் குறைபாடுகள் தொடர்பில் பேசி அவற்றை திருத்தி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் பலவீனப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் எமது கொள்கைக்கு அமைய அவற்றை பலப்படுத்துவோம். அதற்கு தேவையான நிதி மற்றும் மனித வளங்களை வழங்குவோம். இதேவேளை மனித புதைகுழிகள் தொடர்பில் கதைக்கப்படுகின்றன. செம்மணி உள்ளிட்ட மனித எலும்புகூடுகள் மீட்கப்படும் புதைகுழிகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் நாங்கள் எவ்வித தலையீடுகளும் செய்வதில்லை. பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் நடக்கின்றன. ஐ. நா ஆணையாளர் வந்திருந்த போது அவற்றை பார்வையிட வசதிகளை ஏற்படுத்தியிருந்தோம். உறவினர்கள் அடையாளம் காணும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
நினைவேந்தல்
தமது தாய், தந்தை, பிள்ளை அல்லது உறவினர்கள் இறந்த பின்னர் அவர்களை நினைவுகூரும் உரிமை எமது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. வடக்கை போன்று தெற்கில் வெள்ளளவத்தையிலும் நினைவுகூரல் இடம்பெற்றது. அதில் சகல இனத்தவர்ககளும் கலந்துகொண்டனர். இந்த உரிமையை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் பிரிவினைவாத அமைப்புகளின் சின்னங்கள்இ அவர்களை ஊக்கப்படுத்தும் வசனங்கள் பயன்படுத்த முடியாது. இனவாதத்திற்குள் மீண்டும் தள்ளாதவாறு நினைவுகூரும் உரிமை வழங்கப்படுகின்றது. இவை அனைத்தும் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும்.
காணி விடுவிப்பு
நாங்கள் வடக்கில் பல பிரதேசங்களில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்புக்கு தேவையான இராணுவ முகாம்களை நடத்தி மற்றைய வேறு தேவைகளுக்காக காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை அடையாளம் கண்டு விடுவிப்போம். முயைறாக அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதற்படியே அண்மையில் காணி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. அந்த காணிகளன் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு கூறினோம். அதனை தவறாக புரிந்துகொண்டனர். எனினும் அது தொடர்பான கால அவகாச பிரச்சினை தொடர்பில் கருத்திற்கொண்டு அந்த வர்த்தமானியை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளோம்.
அரசாங்கம் என்ற வகையில் இந்த குறுகிய காலத்தில் எமது பொறுப்புக்கூறல் செயற்பாடு,மனித உரிமைகளை பாதுகாத்தல் செயற்பாடு அலற்றுக்கு தேவையான சட்ட மாற்றங்கள் ஆகியவற்றை கட்டம் கட்டமாக செய்து நாங்கள் முன்னெடுத்து செல்வோம். இதனை நாங்கள் மனித உரிமைககள் ஆணைக்குழு கூறுவதால் செய்யவில்லை. இது எங்களின் பொறுப்பாகும். நாங்கள் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது வடக்கை கைவிட்டு செல்ல முடியாது. இப்போதே வடக்கு மாகாணத்தில் 3 முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க காங்கேசன்துறை, மாங்குளம் மற்றும் பரந்தன் உள்ளிட்ட இடங்களில் இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கு தேவையான சட்ட விடயங்களை நிறைவு செய்து அதனை அமைப்போம்.பொதுவாக இலங்கையர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது எங்களின் பொறுப்பாகும். நாங்கள் சுயாதீன நாட்டில் ஆட்புல எல்லையை பாதுகாக்கும் அரசாங்கமாகும். இதனால் வெளி அழுத்தங்களுக்கு அடிபணிந்து தீர்மானங்களை எடுப்பதில்லை. நேர்மையாக எடுக்கும் தீர்மானங்களாகும் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM