மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக  ஆற்று மணல் ஏற்றியவர்கள்  மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  ஆற்றில் பாய்ந்து தப்பிக்க முயன்றவர்  உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து ஒன்று கூடிய பிரதேச மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மக்கள் மீது பொல்லுகள் மற்றும் தடியப் பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதியில் போராட்டம்  தீவிரமடைந்து பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் வானை நோக்கித்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் பொதுமக்களும் பொலிஸார் மீது பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகதாகவும் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலையுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது இணையத்தள செய்தியாளர் தெரிவிக்கின்றார்.