யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் நீதித்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த சனிக்கிழமை மாலை யாழ் நல்லூர் ஆலய பின் வீதியில் வைத்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில் அவரது மெய்பாதுகாவலர் மரணமடைந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக அதன் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று காலை தமது வாயினை கறுப்பு துணிகளால் கட்டியவாறு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் தாக்குதல் சம்பவத்திற்கு தமது கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்,

" யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வவுனியா மாவட்டத்திலும் 8 வருடங்களாக பணியாற்றியவர். அவரது துணிச்சலான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை யாவரும் அறிவர். பல சவால் மிக்க வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளபபட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும். இது தொடர்பில் பொலிஸார்  தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் விசாரணைகள் முழுமை பெறாத நிலையில் பொலிசார் இத் தாக்குதல் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்கள் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என கோருவதுடன் நீதிபதிகளின் பாதுகாப்பையும் அதிகாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்"

இந்த பணிப்புறக்கணிப்பில் வவுனியா மாவட்ட நீதிபதிகள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.