கொழும்பு மற்றும் அண்மித்த பிரதேசங்களுக்குக் கொண்டு செல்வதற்காகத் தயார் நிலையில் இருந்த சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 500 போத்தல் கசிப்புடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாராவில் மதுவரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மஹவெவ மட்டாக்கொட்டு பகுதியில் கண்டல் தாவரங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இக்கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வைக்கால, போலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மட்டாக்கொட்டு கலப்பு பிரதேசத்தில் நடாத்திச் செல்லும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தினுள் தொழிலாளர்களைக் கொண்டு கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கசிப்பு வாகனங்களின் மூலம் கொழும்பு மற்றும் அண்மித்த பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை விநியோகிக்கப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மதுவரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட கசிப்பு போத்தல்களுடன் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள மதுவரித் தினைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(மதுரங்குளி நிருபர்)