(நெவில் அன்தனி)
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை மின்னொளியில் நடைபெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த கால்பந்தாட்டப் போட்டியில் ஸாஹிரா கல்லூரியை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி, அங்குரார்ப்பண ஹெரிடேஜ் டார்பி கிண்ணத்தை சுவீகரித்தது.
ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியின் 140 வருட பூர்த்தி விழாவை முன்னிட்டு ஹெரிடேஜ் டார்பி கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்த அக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் முன்வந்தது. இதனைத் தொடர்ந்து ஸாஹிரா கல்லூரி நிரூவாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் இப் போட்டியை வருடாந்தம் நடத்த தீர்மானித்தனர். இதற்கு அமைய அடுத்த வருடம் ஸாஹிரா கல்லூரியினால் இப் போட்டி ஒழுங்கு செய்யப்படும்.
அங்குரார்ப்பண ஹெரிடேஜ் டார்பி கிண்ண இரண்டு அணியினரும் சிறந்த வியூகங்களுடன் விளையாடிய போதிலும் ஹமீத் அல் ஹுசெய்னி வீரர்களின் வேகத்திற்கும் விவேகத்திற்கும் ஸாஹிரா வீரர்கள் ஈடுகொடுப்பதில் சிரமங்கனை எதிர்கொண்டனர்.
போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணியினரும் சிறப்பான பந்து பரிமாற்றங்களுடன் இரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்திய வண்ணம் இருந்தனர்.
போட்டியின் 32ஆவது நிமிடத்தில் சுமார் 25 யார் தூரத்திலிருந்து ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் பசுல்தீன் அப்துல்லா பலமாக உதைத்த பந்து ஸாஹிரா கோல் காப்பாளர் எம்.எவ். முஹம்மதுவை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் கோலினுள் புகுந்தது.
இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது மொஹமத் முர்ஷித் உதைத்த பந்தை ஸாஹிரா கோல்காப்பாளர் முறையாக தடுக்கத் தவறினார். அப்போது எகிறிவந்த பந்தை ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் மொஹமத் மஸியாத் வேகமாக செயற்பட்டு கோலினுள் புகுத்தினார்.
இடைவேளையின்போது ஹமீத் அல் ஹுசெய்னி 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர் அப்துல் அஸீஸ் இடதுபுறத்தில் இருந்து தாழ்வாக உதைத்த பிறீ கிக் பந்தை ஹமீத் அல் ஹுசெய்னி கோல்காப்பாளர் முறையாக தடுக்கத் தவறினார். அப்போது எம்.எம். ஷுஹெய்ப் பந்தை கோலினுள் புகுத்தி ஸாஹிரா அணிக்கு உற்சாத்தைக் கொடுத்தார்.
அதன் பின்னர் போட்டியில் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஸாஹிரா வீரர்கள் அவ்வப்போது முரணாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக 70ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி அணிக்கு பெனல்டி ஒன்று கிடைத்தது. ஆனால் ரிஸ்வி ஆத்திக் உதைத்த பெனல்டியை ஸாஹிரா கோல்காப்பாளர் எம். ஆர். முஹம்மத் இடப்புறமாகத் தாவி மிக அருமையாக தடுத்தார்.
போட்டி உபாதை ஈடு நேரத்திற்குள் புகுந்தபோது ஹமீத் அல் ஹுசெய்னி 3ஆவது கோலைப் போட்டது. மாற்று வீரர் எம். பஸான் இடப்புறத்திலிருந்து கோலை நோக்கி தனி ஒருவராக பந்தை நகர்த்திச்சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.
அதனைத் தொடர்ந்து சில வீரர்கள் முரட்டுத்தனமாக விளையாடியதுடன் சச்சரவில் ஈடுபடவும் முயற்சித்தனர். ஆனால், மத்தியஸ்தரும் பயிற்றுநர்களும் தலையிட்டு நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எவ்வாறாயினும் மைதான எல்லைக்கோட்டுக்கு வெளியே இரண்டு வீரர்கள் முஷ்டியால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் முர்ஷித் தாக்கியதை மாத்திரம் மத்தியஸ்தர் அவதானித்தால் அந்த வீரருக்கு சிவப்பு அட்டை காட்டினார். ஸாஹிரா வீரருக்கு மஞ்சள் அட்டை காட்டினார்.
அடுத்த சில நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வர, ஹமீத் அல் ஹுசெய்னி வீரர்களும் இரசிகர்களும் பரவசத்தில் மூழ்கினர்.
இப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் பஸுல்தீன் அப்துல்லா வென்றெடுத்தார்.
ஹமீத் அல் ஹுசெய்னி கால்பந்தாட்ட அணியின் பயிற்றுநராக எம்.எவ். ரஹுமான் செயற்பட்டார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM