செம்மணி புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என பலதரப்பட்டவர்களதும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமையானது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டு வருகின்றமைக்கு நல்லதொரு உதாரணமாக செம்மணி புதைகுழியானது தற்போது அமைந்திருக்கின்றது.
இந்த புதைகுழி தொடர்பான விசாரணை சர்வதேச மட்டத்தில் இடம்பெற வேண்டும் என்று தற்போது பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேர்க், செம்மணி பகுதிக்கும் விஜயம் செய்து புதைகுழி தோண்டும் நடவடிக்கைகளை பார்வையிட்டிருந்தார். அவரது விஜயத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை மீறி அவர் செம்மணி புதைகுழி தோண்டும் பகுதியை பார்வையிட்டதுடன் நீதி நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சில மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளே மீட்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அங்கு 150 மனித எலும்புக்கூடுகள் வரையில் மீட்கப்பட்டு விட்டன. தோண்டத் தோண்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் வந்தவண்ணமே உள்ளன.
இந்த நிலையில் தான் சர்வதேச மேற்பார்வையோடு இந்த படுகொலை தொடர்பான விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேர்க்குக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கடந்த வாரம் அனுப்பி வைத்த கடிதத்திலும் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையை முன்மொழிய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும் அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப் பணிகளின் போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனித புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவதற்கும் முறையாக கண்காணிப்பை உறுதி செய்வதற்கான சர்வதேச பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
செம்மணி மனித புதைகுழியைப் பொறுத்தவரையில் அதற்கு இரண்டரை தசாப்தங்களுக்கு முன்னைய வரலாறு காணப்படுகின்றது. 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி மாணவி படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ உட்பட ஆறு பேருக்கு கொழும்பு ட்ரயல் அட்பார் மேல் நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பு 1999ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்ட போது கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ செம்மணி பகுதியில் 300 முதல் 400 வரையிலான தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த அறிவிப்பானது யாழ். குடாநாட்டில் பெருமளவு மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதோ என்ற சந்தேகத்தை அன்று ஏற்படுத்தியிருந்தது. சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியத்தையடுத்து அவர் அடையாளப்படுத்திய இடத்தில் புதைகுழி தோண்டும் பணி அன்று இடம்பெற்றது. நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இந்தப் புதைகுழி தோண்டப்பட்டது. அப்போது அதிலிருந்து 15 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் தொடர்பான வழக்கு யாழ். நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அது பின்னர் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து கொழும்புக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டிருந்தது. சோமரத்ன ராஜபக் ஷவின் வாக்குமூலத்துக்கு இணங்க இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கும் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது.
தற்போது செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் அபிவிருத்திப் பணிக்காக அகழ்வு இடம்பெற்ற போது எலும்புக் கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதையடுத்தே தற்போது யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக் ஷ, யாழ். செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு தயாராக உள்ளதாக அறிவித்திருக்கின்றார். இந்த விடயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
அன்று செம்மணி பகுதியில் 300 தொடக்கம் 400 வரையான தமிழர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கூற்று உண்மையானது என்பது தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தோண்டத் தோண்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகள் வெளிவருவதானது சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்தின் உண்மைத்தன்மையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றது.
செம்மணி பகுதியில் கைது செய்யப்படுபவர்கள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு எவ்வாறு படுகொலைகள் செய்யப்பட்டனர்? அவர்கள் எவ்வாறு புதைக்கப்பட்டனர்? என்பவை தொடர்பில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷ வெளிப்படுத்த தயார் என்று கூறியிருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம, தனது கணவர் தெரிவித்த விடயங்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். அதன் பிரதிகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் தீர்ப்பின் போது அவர் வெளிப்படுத்தியதையடுத்தே செம்மணி புதைகுழி தோண்டப்பட்டிருக்கின்றது. தற்போது மீண்டும் அகழப்படும் நிலையில் அந்த விடயம் தொடர்பான உண்மைகளை சர்வதேச விசாரணையில் தெரிவிப்பதற்கு தாம் தயார் என்று சோமரத்ன ராஜபக் ஷ கூறியிருப்பது முக்கியமானதொரு விடயமாக அமைந்திருக்கின்றது.
செம்மணிப் பகுதியில் படுகொலைகளை அரங்கேற்றியவர்கள் யார்? அதற்கான உத்தரவை பிறப்பித்தவர் யார்? அதனை மேற்கொண்டவர்கள் யார்? என்ற விடயங்களுக்கு சோமரத்ன ராஜபக்ஷவிடம் பதில் இருப்பதாகவே தெரிகின்றது. அதனால்தான் அவரது மனைவி மூலம் ஜனாதிபதிக்கு இத்தகைய கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றார்.
அவரது இந்த கூற்றானது சர்வதேச விசாரணையின் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவிடம் செம்மணி விவகாரம் தொடர்பில் சாட்சியம் பெற வேண்டும் என்றும் அவரது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பப்பட்டிருக்கின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், சோமரத்ன ராஜபக்ஷவின் செய்தியை வெளியிட்டிருந்த வீரகேசரி வார வெளியீட்டு பத்திரிகையின் பிரதியை சான்றுப்படுத்தி சர்வதேச நீதி விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ஷவை தயார்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
சர்வதேச விசாரணையில் சோமரத்ன ராஜபக்ஷ சாட்சியளிப்பதன் மூலம் உண்மைகள் வெளியே வரட்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேபோன்று ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் சோமரத்ன ராஜபக்ஷவின் கூற்று உண்மையானால் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.
தற்போது செம்மணி புதைகுழி விவகாரம் பெறும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றது. அங்கு மனித படுகொலைகள் இடம்பெற்றமை நிருபணமாகி வருகின்றது. அதற்கு சான்றுபகிர்வதாக சோமரத்ன ராஜபக் ஷ தெரிவித்துள்ளமை முக்கிய திருப்புமுனையாக அமைந்திருக்கின்றது. எனவே, சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியத்தை பெறுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM