இந்தியா எந்த நாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட வேண்டும் என்பதை அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ தீர்மானிக்க முடியாது

08 Aug, 2025 | 10:42 AM
image

பல மாதங்களாக கணிசமானளவு பொறுமையைக் கடைப்பிடித்த பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சு இந்தியாவை இலக்கு வைப்பதற்காக அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கடந்த திங்கட்கிழமை (4/8)  கொடுத்திருக்கும் பதிலடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து விற்பனை செய்கின்றமைக்காக ஒரு அபராத வரியாக மேலும் ' கணிசமானளவு '  வரியை விதிக்கப்  போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து இரு மணித்தியாலங்களில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையை வெளியிட்டது. 

ஏற்கெனவே இந்தியா மீதான  25 சதவீத வரிக்கு மேலதிகமாக 25 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த ' அபராத வரி ' விதிக்கப்படுவதற்கு முதல்நாள் ட்ரம்பின் சிரேஷ்ட உதவியாளர்  உக்ரெயினில் ரஷ்யாவின் போருக்கு ' நிதியுதவி செய்வதாக ' இந்தியா மீது குற்றம் சுமத்தினார்.

அத்துடன் ஜூூல 18 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் வடினார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ( பகுதியளவு ரஷ்யாவுக்கு சொந்தமானது) மீது தடைகளை விதித்தது. இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பாதிக்கக்கூடியதாக இராண்டாவது தர தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் திரவ இயற்கைவாயு, முக்கியமான கனிமங்கள் மற்றும் அணு எரிபொருள் தேவைகள் உட்பட பல பொருட்களுக்காக ரஷ்யாவுடன் தொடர்ந்தும் வாணிபத்தில் ஈடுபட்டுவரும் நிலையில்,  இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் " அநீதியானவை, நியாயத்துக்கு ஒவ்வாதவை" என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார். உலக சந்தைகளை உறுதிப்பாடான நிலையில் வைத்திருப்பதற்காக ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து  வாங்குமாறு அமெரிக்கா தான் முன்னர் இந்தியாவை ஊக்குவித்தது என்றும் பைடன் நிருவாகம் அதை உறுதிசெய்தது என்றும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ரஷ்ய எண்ணெயக் கொள்வனவுகள் ( உக்ரெயினில் மோதல்களின் விளைவாக ) "  முக்கியான தேசிய நிர்ப்பந்தங்களைக் " கொண்டவை என்றும் இந்தியா அதன் தேசிய நலன்களையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் பாதுகாக்கும் என்றும் இந்திய அரசாங்கம் கூறியிருக்கிறது. உக்ரெயினில் மோதல்கள் மூண்டதற்கு பிறகு ரஷ்ய எண்ணெய் கொள்வனவு விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சு இத்தகைய தெளிவான பதிலை அளித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

ஆகஸ்ட் 7 ஆம் திகதியில் இருந்து இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியை விதிப்பதாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயால் கடந்த வாரம் விடுத்த அறிக்கையுடன் சேர்த்துப் பார்க்கும்போது  வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ( குடிவரவு, வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்,  சிந்தூர் இராணுவ நடவடிக்கையும் பாகிஸ்தானும் மற்றும் பிறக்ஸ் அமைப்பில்  இந்தியாவின் உறுப்புரிமை உட்பட ) இந்தியாவுக்கு எதிராக  அமெரிக்கா எடுத்துவரும் அட்டகாசமான நிலைப்பாடுகள் தொடர்பில் புதுடில்லி கொண்டிருக்கும் கடுமையான அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிக்காட்டுகிறது. 

ட்ரம்பின் இந்த மிரட்டும் தந்திரங்களை எவ்வாறு, எந்தளவுக்கு எதிர்த்து நிற்பதற்கு இந்திய அரசாங்கம் தயாராயிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தியா  ஒரு " நல்ல வாணிப பங்காளியாக " இருக்கவில்லை என்று  கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் கூறினார். வாணிப பேச்சுவார்த்தைகள், சிறிய உடன்படிக்கைகளை செய்வதற்கு தவறியமை, அமெரிக்காவின் விவசாய உற்பத்திகளுக்கு இந்தியாவில் சந்தை வாய்ப்புக்களை வழங்குவதற்கு புதுடில்லி மறுத்து வருவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ட்ரம்ப் அவ்வாறு கூறினார் போன்று தெரிகிறது.

வாணிப பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்வதற்கு அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் புதுடில்லி தொடர்ந்துமம ஊடாட்டக்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் அறிக்கை பெரியதொரு செய்தியைக் கூறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தியா எந்த நாட்டுடன் பங்காளியாக இருக்கவேண்டும், எந்த நாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட வேணடும் என்பதை அமெரிக்கவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ தீர்மானிப்பதற்கு அனுமதிக்க முடியாது.

இவ்வருட பிற்பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் மாஸ்கோவுக்கு மேற்கொண்ட அண்மைய விஜயங்கள் மேற்குறித்த செய்தியை அடிக்கோடிட்டுக  காட்டுகின்றன.

மற்றைய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் எந்தளவுதான் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும், இந்தியாவின் இறைமை பேச்சுவார்த்தைக்கு உரியதல்ல என்பதுடன் அதன் வெளியுறவுக் கொள்கைத் தெரிவுகள்   அந்த நாடுகளின்  விருப்புவெறுப்புக்களினால் தீர்மானிக்கப்படக்கூடியவையோ அல்லது  வழி நடத்தப்படக்கூடியவையோ அல்ல.

 ஆபத்தான திருப்பம் 

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்றி மெட்வெடேவ் " ஆத்திரமூட்டும் வகையில் " தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்வினையாக  " பொருத்தமான பிராந்தியங்களுக்கு " இரு அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவதற்கு உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருக்கும் அறிவிப்பு (அவர் கடந்த வருட பிற்குதியில் தேர்தல் பிரசாரங்களின்போது சீர்செய்யப்போவதாக உறுதியளித்த) அமெரிக்க -- ரஷ்ய உறவுகளில் ஆபத்தான ஒரு திருப்பத்தைக் குறித்து நிற்கிறது. 

ரஷ்யா மீது வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல் " போரை நோக்கிய ஒரு நடவடிக்கை " என்று தற்போது ரஷ்யாவின் பாதுகாப்புச்சபையின் பிரதி தலைவராக இருக்கும் மெட்வெடேட் கூறியிருந்தார். அணுகுண்டுகளைத் தாங்கிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவக்கூடிய ஆற்றலைக் கொண்ட நீர்மூழ்கிகளையோ  அல்லது பாரம்பரிய படைக்கலன்களுடன் கூடிய அணுசக்தி படகுகளையோ நகர்த்தியிருப்பதாக ட்ரம்ப் விசேடப்படுத்திக் கூறவில்லை.

உக்ரெயின் போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் அதிகரித்துவரும் அதிருப்தியை ட்ரம்ப் அண்மைய வாரங்களில்  வெளிப்படுத்தி வந்தார். போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அமெரிக்காவின் வரிவிதிப்புக்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் ஆரம்பத்தில் புட்டினுக்கு 50 நாள் காலக்கெடு விதித்தார். ஜூலை 29 ஆம் திகதி அந்த காலக்கெடுவை 10 -- 12 நாட்களாக அவர் குறைத்தார். இந்தியா, சீனா போன்று ரஷ்யாவுடன் வாணிபத்தில் ஈடுபடும் நாடுகள் மீது " அபராத வரிகளை "  விதிக்கப் போவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

ட்ரம்பின் விரக்தி விளங்கிக் கொள்ளக்கூடியதே. போர்நிறுத்த யோசனை ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு உக்ரெயினை அவர் நிர்ப்பந்தப்படுத்தினார் .வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்புக்குள் ( நேட்டோ )  உக்ரெயின் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது என்று ட்ரம்பின் பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். இருந்தாலும், கருங்கலில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தாக்குதல் நிறுத்தம்,  உக்ரெயினின் உட்கட்டமைப்புக்கள் மீது  தாக்குதல் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்துதல் தொடர்பான உறுதிமொழிகளையே புட்டினிடயிருந்து ட்ரம்பினால் பெறக்கூடியதாக இருந்தது.

போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் மேற்கு நாடுகளின் தலைநகரங்களிலும் மாஸ்கோவிலும் நிலவுகின்ற வேறுபட்ட கருத்துக்களே இந்த சிக்கல் நிலையின் மையமாக இருக்கிறது. உடனடிப் போர்நிறுத்தம் ஒன்றை மேற்கு நாடுகளின் தலைவர்கள் வரியுறுத்துகின்ற அதேவேளை, போர்நிறுத்தம் என்பது நேட்டோவின்  கிழக்கு நோக்கிய விரிவாக்கம் உட்பட  ரஷ்யாவின் முக்கியமான பாதுகாப்பு அக்கறைகளை கையாளக்கூடிய விரிவான பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றின் அங்கமாகவே இருக்க வேண்டும் என்று மாஸ்கோ நம்புகிறது. மூலோபாய முன்னேற்றத்தை அதன் படைகள் கண்டிருக்கும் ஒரு நேரத்தில் போரைத் தணிப்பதில் ரஷ்யாவுக்கு  அக்கறையும் இல்லை.

ரஷ்யாவின் பல நகரங்களில் படுமோசமான அழிவுகளை ஏற்படுத்தும் ட்ரோன் தாக்குதல்களை உக்ரெயின் நடத்தியிருக்கிறது. ஆனால், போர்க்களத்தில் முன்னரங்க நிலைகளை பாதுகாப்பதில் அது பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது.

இது தவிரவும்,  அமெரிக்காவுடன் தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் ,  இஸ்ரேலின் சார்பிர் ஈரான் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ட்ரம்ப் எடுத்த தீர்மானம் ரஷ்யாவின் நிலைப்பாட்டை கடுமையாக்கியிருக்கிறது போன்று தெரிகிறது. இருந்தாலும், அணுவாயுத பலத்தைக் காட்டி பயமுறுத்துவதற்கு  இராஜதந்திர பின்னடைவுகள் ஒரு சாட்டு அல்ல. 

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி மோதல் ஒன்றை உலகம் விரும்பவில்லை. பதிலாக, நெருக்கடியைத் தீவிரப்படுத்துவதற்கு பதிலாக, அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை (ரஷ்யாவுக்கு எதிரான தடைவிதிப்புகளும்  உக்ரெயினுக்கு வழங்கும் இராணுவ ஆதரவும்) புட்டினை தடுக்க ஏன் தவறியது என்பது குறித்து ட்ரம்ப் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ட்ரம்ப் ஆரம்பத்தில்  முன்னெடுத்த இராஜதந்திர முயற்சி  சரியான திசையிலான ஒரு நடவடிக்கை. அந்த முயற்சியையே தொடர்ந்து முன்னெடுத்து  உக்ரெயின் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் மேற்கு நாடுகளினதும் ரஷ்யாவினதும் நிலைப்பாடுகளுக்கு இடையில் உள்ள வெளியைக் குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

(தி இந்து ஆசிரிய தலையங்கம், 6 ஆகஸ்ட் 2025)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தட்டிக்கழிக்கும் அரசாங்கம்

2026-08-16 08:36:26
news-image

கடினமாகி வரும் ஜெனிவா களம்

2026-08-16 08:34:39
news-image

இரா­ணு­வத்­துக்கு வெள்­ளை­ய­டிக்கும் தீர்­மா­னமா?

2026-08-16 08:28:17
news-image

இந்­தி­யாவின் சந்­தேகம்

2026-08-16 08:27:59
news-image

விரி­வ­டையும் செம்­மணிப் புதை­குழி

2026-08-16 08:25:56
news-image

22ஆவது திருத்தமும் பின்னால் உள்ள பொறிகளும்

2026-08-16 08:23:54
news-image

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை...

2026-08-15 18:20:38
news-image

யாழ் ரோயல் பலஸ் : ஒரு...

2026-08-15 17:43:13
news-image

இலங்கையின் முதலீட்டு பொறிமுறையில் நிலவும் நடைமுறை...

2026-08-14 14:30:35
news-image

ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு...

2026-08-14 14:29:42
news-image

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெருந்தோட்ட சமூகம்

2026-08-14 14:29:13
news-image

நவீன கல்வி அமைப்பில் மாணவர்களின் பள்ளி...

2026-08-14 12:00:27