- அன்னலட்சுமி இராஜதுரை
தமிழ்ப் பேசும் மக்களது உரிமைக்குரலாக, இதயக் குரலாக, உத்தம வழிகாட்டியாக, அரியதோர் நண்பனாக விளங்கி, தனது மேலான சேவையில், ஈழத்தின் முன்னணித் தினசரியான வீரகேசரி, இன்றைய தினம், அதாவது 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி, தனது 95ஆம் அகவையைப் பூர்த்தி செய்து, 96ஆம் அகவையில் காலடி எடுத்து வைப்பதானது, தமிழ்ப் பேசும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாகும். இதில் உலகெங்கணும் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது சோதரர்கள் விதிவிலக்கல்ல. அத்துடன் வீரகேசரி தனது நூற்றாண்டுப் பயணத்தில், வேகமாக, கம்பீரமாக நகர்ந்துகொண்டிருப்பது எம் எல்லோருக்கும் மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த ஒன்பது தசாப்த காலத்தில், அவ்வப்போது சில தினசரிகள் வெளியாகி, சில காலம் செயற்பட்டு, பின்னர் சவால்களைச் சந்திக்க முடியாமல் தளர்ந்து, மறைந்துபோனமையும் தெரிந்ததே. இருப்பினும், வீரகேசரி, தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தில், மிக மோசமான இக்கட்டுகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், தனது பெயருக்கேற்ப, மிக்க துணிவோடும் சாதுரியத்தோடும், நிதானமாகவும் செயற்பட்டு, நிலைமைகளைச் சந்தித்து வெற்றிகொண்டது என்பதனை மறந்துவிட முடியாது. அத்தோடு, அது பெற்றுக்கொண்ட தமிழ்ப் பேசும் மக்களது பேரபிமானத்தையும் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும்.
1958இல் வெடித்த இனக்கலவரம், 1950களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம், 1983இல் ஏற்பட்ட இனக்கலவரம், குறிப்பாகவும், 1980களுக்குப் பின், சுமார் 30 வருடகாலம் நீடித்துச் சென்ற ஈழப்போர், சுனாமி உட்பட இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றின் தாக்கங்களை, வெற்றிகரமாக, மக்களின் ஆதரவுடன் சமாளித்து நின்ற வீரகேசரி, 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத சமூக, பொருளாதார, அரசியல் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகம் கொடுத்து நிலைத்த பாங்கும் நினைவில் கொள்ளத்தக்கது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் நாட்டில் உட்புகுந்த கொவிட் 19 தொற்று நோயின் கொடூரத் தாக்கமும், அதனால் ஏற்பட்ட பெரும் மக்கள் அழிவு, பாதுகாப்பு நடவடிக்கையாக நாட்டு முடக்கம், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி, மேலும் உணவுப் பற்றாக்குறை நிலைமை ஆகியவை மறக்கக்கூடியதல்ல.
கவலைக்குரியதான இத்தகையதோர் சூழ்நிலையின் பின்னணியில், அச்சுக்குரிய கடதாசிப் பற்றாக்குறை, மற்றும் கடுமையான போக்குவரத்துக் கஷ்டங்கள் ஆகியவற்றின் மத்தியில் தனது வழமையான சேவைகளை வழங்க முடியாது அவதியுற்ற வீரகேசரி, நிலைமைகளைப் புரிந்து, தான் முன்னர் பெற்றிருந்த அனுபவங்களையும் வைத்து சமாளித்த விதம் பாராட்டுக்குரியது. இந்த வகையில் வீரகேசரி தினப்பதிப்பு, ஞாயிறு பதிப்பு, விடிவெள்ளி ஆகியன மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளியிடப்பட்ட அதேவேளை, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் ஏனைய பத்திரிகைகளான மெட்ரோ நியூஸ், மித்திரன் வாரமலர் ஆகியன மின்னியல் இதழ்களாகவும் (E-Paper) இணையத்தளம் மூலமாகவும் வாசகர்களைச் சென்றடைந்துவருவதும் தெரிந்ததே. சுகவாழ்வு, சோதிடகேசரி, கலைக்கேசரி ஆகியன நிறுத்தப்பட்டதும் அறிந்ததே.
இத்தகையதோர் சிக்கன நடவடிக்கையை அடுத்து, வீரகேசரி, தனது தளராத பயணத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சில காலத்தின்பின், வீரகேசரி தனது பக்கங்களை அதிகரித்து, மேலும் செய்திகளையும் விடயதானங்களையும் தருவது, வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாகும். அத்துடன் தமிழகத்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான “தினத்தந்தி” பத்திரிகையும், வீரகேசரி நாளிதழுடன் விநியோகிக்கப்பட்டு வருவதும், வாசகர்களின் வரவேற்புக்குரிய ஒன்றாக அமைகிறது என்பதையும் குறிப்பிடலாம்.
ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைத்துறையில் வரலாற்றைப் படைத்து வரும் இப்பத்திரிகை குறித்து சிந்திக்கின்றபோது, அதன் தோற்றத்திற்குக் காரணமாக விளங்கிய முக்கியஸ்தர் குறித்தும், அதன் ஆரம்பகாலம் முதல் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்து, அரும்பணிபுரிந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களை நினைவில் கொள்ளாதிருக்க முடியாது.
காரணம் இல்லாமல் ஒரு காரியமும் இல்லை என்பார்கள். கொழும்பில், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு, ஆவணிப்பட்டியைச் சேர்ந்த பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் மனதில், ஒரு பெரும் விசனம் ஏற்பட்டது. 1927ஆம் ஆண்டு, காந்திஜி இலங்கைக்கு ஒரு விஜயம் மேற்கொண்டார்.
நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்ட காந்திஜி, அங்கெல்லாம் உரையாற்றிச் சென்றிருந்தார். ஆனால், அவரது உரைகள் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கவில்லை. இவ்விடயமே செட்டியாருக்கு பெரும் மனவருத்தத்தைக் கொடுத்திருந்தது.
இந்நிலையில்தான் அவர் ஒரு தேசியத் தமிழ்த் தினசரியின் அவசியத்தை உணரத் தலைப்பட்டார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டு தேயிலை, றப்பர் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்ட தமிழ் மக்களது பரிதாபகரமான வாழ்க்கை நிலையை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்தம் உரிமைகளை நிலைநிறுத்தத் தூண்டுவதற்கும் ஒரு தமிழ்த் தினசரியின் பங்கு அத்தியாவசியம் என்பதனையும் அவர் உணர்ந்தார்.

பத்திரிகை ஆரம்பம்
இத்தகைய நோக்கங்களின் பயனாக வீரகேசரிப் பத்திரிகை, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரியின் முதல் ஆசிரியராக விளங்கிய செட்டியார் அவர்கள் பத்திரிகையின் முதலாவது இதழில் எழுதிய ஆசிரியத் தலையங்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.
“தன்னால் இயன்ற அளவுக்குப் பொது ஜனங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவினால் தூண்டப்பட்டே “வீரகேசரி” தோன்றுகிறான். அசாத்தியமான காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் படைத்தவன் என்று வீறு பேசத் தயாரில்லை. நியாய வரம்பை மீறாமல், நடுநிலையில் இருந்து, உலகத்தின் முன்னேற்றத்துக்கான இயக்கங்களையும், பிரச்சினைகளையும், பரிவுடன் ஆராய்ந்து பொதுமக்கள் கருத்தை நல்ல முறையில் உருவாக்க வேண்டும் என்பதையே வீரகேசரி, தன் முதல் கடனாகக் கொள்கிறான்.
தாராள சிந்தையும், பரந்த நோக்கும் சமரச உணர்வும் பெற்ற வீரகேசரி, சாதி, சமய, சண்டைகளில் கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம். அவனது கருத்துக்கள், நியாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்குடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் நாடுகிறான்” என்றவாறாக அவர் எழுதிய தலையங்கம், அதன் துணிவான பயணத்தினை பணிவாக முன்வைப்பதை இங்கு நோக்கலாம்.
மேலும், செட்டியார் அன்று தெரிவித்த அந்த மேலான கொள்கைப் பிரகடனம், இற்றை வரை முற்றுமுழுதாக விசுவாசத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சிறப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
அறிவாற்றலும், உலக அனுபவமும், ஆளுமையும், எழுத்தாற்றலும் கொண்ட ஒருவர், பத்திரிகாசிரியராக விளங்கும்போது, அப்பத்திரிகை, மக்கள் மத்தியில் சிறப்பானதோர் இடத்தைப் பெற வாய்ப்பாக அமையும். அந்த வகையில், வீரகேசரி காலத்துக்குக் காலம், அத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்ட ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தது. தொடராகப் பதவியேற்றவர்களின் அயராத சேவை, வீரகேசரியைக் குன்றின் மேல் விளக்காக்கியது. இவ்விடத்தில் ஆரம்ப காலத்தில் முகாமையாளராகப் பணிபுரிந்த ஈஸ்வர ஐயர் அவர்களது பணியும் சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டும்.
பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியாரைத் தொடர்ந்து, அவர்தம் நண்பரும், பிரபல வங்கி ஒன்றில் கடமை புரிந்தவருமான திரு. எச். நெல்லையா, (தமிழ்நாடு) மணிக்கொடியில் முத்திரை பதித்த வ.ரா (வ.ராமசாமி)(சிறிதுகாலப் பணி) கே.பி.ஹரன், கே.வி.எஸ்.வாஸ், கே.சிவப்பிரகாசம், ஆ.சிவனேசச்செல்வன், எஸ்.நடராசா, ஆர்.பிரபாகன் எனப் பலரும் வீரகேசரியின் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து ஆற்றிய சேவை யாவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது எஸ்.ஸ்ரீகஜன் ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருப்பதும் தெரிந்ததே.
வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர்கள் சிலரது முன்மாதிரியான பணிகள் பற்றியும் அதனால், வீரகேசரி மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட செல்வாக்கினைப் பற்றியும் இங்கு சிறிது குறிப்பிடுவதனால், அன்று புதிதாகப் பயணம் தொடங்கிய இப்பத்திரிகையின் வளர்ச்சிப்பாதையின் ஒருசில கட்டங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஆரம்பகட்ட ஆசிரியர்கள்
இந்த வகையில், வீரகேசரியின் ஆரம்பகட்ட ஆசிரியராகப் பணிபுரிந்த திருவாளர்கள் எச்.நெல்லையா, ஆர்.பி.ஹரன், கே.வி.எஸ்.வாஸ் ஆகியோரின் எழுத்துப்பணி விசேடமாகக் குறிப்பிடக்கூடியது. திரு.எச்.நெல்லையா, தலையங்கம் எழுதுதல் உட்பட அன்றாடப் பணிகளோடு, வீரகேசரியின் வாசகர் தொகையை அதிகரிக்கும் ஒரு “யுக்தி”யாக, வாசகர்கள் வாசிக்கக்கூடிய வகையில், தொடர்கதைகளை, அவர் தினசரி எழுத்தாகப் படைத்து, வாசகர் தொகையை அதிகரிக்க வைத்தமை விதந்து கூறத்தக்கது. இது பத்திரிகைத்துறையில் ஒரு முதல் முயற்சியாகவும் இருந்திருக்கலாம்.
“காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி”, “இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி”, “சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு”, “சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி”, “பிரதாபன் அல்லது மகாராஷ்டிரா மங்கை” ஆகிய தொடர்கதைகளை அவர் எழுதினார்.
ஆசிரியத் தலையங்கம் உட்பட, “ஊர்க்குருவி” என்னும் பத்தி எழுத்தின் மூலம், வீரகேசரி வாசகர்களிடையே செல்வாக்குப் பெற அன்று எழுதியவர் கே.பி.ஹரன். இவர் வ.ராமசாமி (வ.ரா) அவர்களுக்குப் பின், இருபது வருடகாலம், ஆசிரியராகப் பணியாற்றியவர்.
இவரைத் தொடர்ந்து, செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து ஆசிரியராகப் பணியேற்ற கே.வி.எஸ்.வாஸ் அவர்களது அயராத எழுத்துப்பணி, வீரகேசரியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இவரும் திரு. எச்.நெல்லையாவைப் பின்பற்றி, தினசரி இடம்பெறும் வகையில் தொடர்கதைகள் பலவற்றினை எழுதி, வீரகேசரிக்குப் பெரும் புகழ் சேர்த்தார். இவர் “ரஜினி” என்ற பெயரில் நந்தினி, பத்மினி, தாரிணி, குந்தள பிரேமா, ஆஷா எனப் பல தொடர்கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி, வாசகர் தொகை அதிகரிக்க வழிசமைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களது இந்த எழுத்து முயற்சிகள் பின்னர் வந்த ஆசிரியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்ததோடல்லாமல், பொதுவாகப் பத்திரிகைத்துறைக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கியது என்று கூறினும் தவறில்லை.
திரு.வாஸ் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், அதாவது 1960களில் சுதந்திரன் ஆசிரியராகக் கடமைபுரிந்த திரு.எஸ்.டி.சிவநாயகம், வீரகேசரியில் இணை ஆசிரியராகச் சேர்ந்து, சில காலம் பணிபுரிந்து, வீரகேசரியின் வளர்ச்சிக்கு உதவினார்.
முதலில் மருதானை, அடுத்து கொட்டாஞ்சேனை, அடுத்து கிராண்ட்பாஸ் (தற்போதையது) எனப் பணியிட மாற்றம் பெற்ற வீரகேசரிப் பத்திரிகையின் ஆரம்பகாலம், பல்வேறு பற்றாக்குறைகளையும் கொண்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது என்பதனையும் மறப்பதற்கில்லை.
எனவே, அனைத்து ஊழியர்களும் (ஆசிரியர் குழு உட்பட) பத்திரிகையின் வளர்ச்சிக்காக கடும் உழைப்பை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருந்துள்ளார்கள். எல்லோரும் தமக்கு இயன்ற அளவில் அனைத்து வேலைகளையும் ஆற்றவேண்டிய சூழல் இருந்ததும், ஆசிரியர் பகுதி உட்பட ஊழியர்களும், எதுவித மேலதிக கொடுப்பனவுகளும் இல்லாமல், மிகவும் விசுவாசம் காட்டி பத்திரிகையின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இரவு பகல் பாராமல் தமது உழைப்பினை நல்கியதையும், இவ்விடத்தில் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதியில் இருந்து கடமையாற்றத் தொடங்கிய வீரகேசரி, தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அவர்தம் சுதந்திரக் குரலாகவும் ஒலித்து வழிகாட்டிப் பக்கபலமாக நின்றது. அவ்விதமே 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை மக்களிடையே வெளிப்படுத்தவும், வழிகாட்டவும், பாதுகாக்கவும், சவால்கள், அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு மத்தியிலும், வீரகேசரி, தன்னால் இயன்றளவு நடுநிலையாக நின்று, தொடர்ந்து, பத்திரிகா தர்மம் பேணி, சேவை புரிந்து வருகின்றது.
அத்தோடு தமிழ்ப் பேசும் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, கலாசார, அபிவிருத்திக்காகவும், அயராது குரல் கொடுத்தும், வழிநடத்தியும் ஆலோசனை வழங்கியும் பெரும் பணிபுரிந்து, தமிழ்ப் பேசும் மக்களது அரிய தொண்டனாகவும், தோழனாகவும், நிலைத்து நிற்பது வரலாறாகும்.
அவ்விதமே, மலையக மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களுக்கும், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கும், அவர்தம் பொருளாதார, கல்வி, கலாசார, அபிவிருத்திக்கும், வீரகேசரி காட்டி வரும் ஆதரவு சிறப்பானது.
பின்னர், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் என மாற்றம் பெற்ற வீரகேசரி ஸ்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர்களாக திரு.டி.பி.கேசவனை அடுத்து, திருவாளர்கள்: ஹரோல்ட் பீரிஸ், ஆர்.ஏ.நடேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.வை.எஸ்.ஞானம், எம்.ஜி.வென்சஸ்லாஸ் ஆகியோர் தொடர்ந்து பணிபுரிந்து, பத்திரிகையின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தனர். இவர்களையடுத்து, 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து முகாமைத்துவப் பணிப்பாளராக பாரிஸ்டரும், இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான திரு.குமார் நடேசன் சிறப்பாகப் பணியாற்றி வருவதும் தெரிந்ததே.
நாடு சுதந்திரமடைந்ததையடுத்து, ஆட்சியை மேற்கொண்ட அரசாங்கங்களின் இனப்பாரபட்ச நடவடிக்கைகளினால், படிப்படியாக தமது பல்வேறு உரிமைகளையும் இழந்து, சோதனைகளையும், கஷ்ட நஷ்டங்களையும், இழப்புகளையும், வேதனைகளையும் அனுபவித்துவரும் தமிழ் மக்களது உரிமைகளுக்காய் என்றும் ஓங்கிக்குரல் கொடுத்து, அவர்தம் உற்ற நண்பனாய் விளங்கும் வீரகேசரி, அவர்களது கல்வி, கலை, கலாசாரம், வாழ்வியல் போன்றவற்றிலும் பெரிதும் அக்கறை கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயம்.
பக்கச்சார்பற்ற, உண்மையான செய்திகளை வழங்குவது ஒருபுறமானால், மறுபுறம் அது சிறப்பான அரசியல், கலை, கலாசார கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எனப் பல்வேறு விதமான ஆக்கங்களையும் ஞாயிறு பதிப்பில் வழங்கி சேவையாற்றுவது சர்வதேசமும் அறிந்ததே. அத்துடன், இதுவுமன்றி, காலத்துக்குக் காலம், இளைஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள், பெண்கள் எனப் பல தரப்பட்டோரின் சிந்தனைச் செழிப்பின் பொருட்டு வெளியிட்டுவந்த விசேட பக்கங்கள், பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் நம் வாசகர்கள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்பவை.
குறிஞ்சி மலர்
இந்த வகையில், தோட்டத் தொழிலாள மக்களின் பிரச்சினைகளையும், கஷ்ட நஷ்டங்களையும் பிரதிபலித்து, அவர்தம் முன்னேற்றத்திற்கான உரிமைக்குரலாய் 1960களின் முற்பகுதியில் மலர்ந்த தோட்ட மஞ்சரி, குறிஞ்சி மலர் மகத்தானவை என்பதனைக் கூறவேண்டியதில்லை.
மேலும் 1960களின் நடுப்பகுதியில் தோற்றம் பெற்ற மாலைத் தினசரியான “மித்திரன்” ஏற்படுத்திய பரபரப்பு மறக்கமுடியாதது. மேலும் அந்த தசாப்தத்தில் “ஜோதி” என்னும் குடும்ப வார சஞ்சிகை, “மித்திரன் வாரமலர்” என்பன வெளியாகி, மித்திரன் வாரமலர் இன்று எண்ணும சஞ்சிகையாக வெளியாகிக்கொண்டிருக்கிறது.
வீரகேசரியின் படிப்படியான வளர்ச்சிக்கும், அது தமிழ்ப் பேசும் மக்களிடையே முக்கியமானதோர் இடத்தைப் பிடிக்கவும், ஆதாரசுருதியாக விளங்கிய ஆசிரியர் குழாத்தின் தளராத, அதிசிறப்பான பணிகளையும் மறந்துவிட முடியாது. ஞாயிறு பதிப்பு ஆசிரியர், பிரதி ஆசிரியர், சஞ்சிகை ஆசிரியர்கள், விசேட பக்கங்களின் பொறுப்பாசிரியர்கள், செய்தியாளர்கள் என அவர்கள் வகித்த பங்கும் பணிகளும் சிறப்பானவை. அவை தொடர்ந்தவண்ணமே உள்ளன. அதனை இவ்விடத்தில் விபரிப்பது சாத்தியமற்றதே.
அத்துடன் இவ்விடத்தில் மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிடுதல் வேண்டும். அதாவது 1950களின் இறுதிப் பகுதி வரை வீரகேசரியில் பெண் ஊழியர்களின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருக்கவில்லை என்றே கூறலாம். ஆயின் 1960ஆம் ஆண்டு தசாப்தத்தில் இந்நிலை மாறி, பெண்கள் ஆசிரியபீடத்துக்கும், மற்றும் பகுதிகளுக்கும் படிப்படியாக சேர்க்கப்பட்டு, அவர்களது பங்களிப்பு வரவேற்கப்பட்ட நிலையில், பெண் ஊழியர்கள் தற்போது கணிசமான அளவில் பணியாற்றுவதையும் கூறவேண்டும். அத்துடன் வீரகேசரி மூலம் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர்களும் தோன்றினர் என்பதும் தெரிந்ததே. மேலும் ஏனைய தமிழ் நாளேடுகளும் பெண் ஊழியர்களை அதிகம் சேர்த்துக்கொள்ள, வீரகேசரியின் செயற்பாடு ஒரு முன்மாதிரியாக விளங்கியது என்றும் கூறலாம்.
மாதம் ஒரு நாவல் வெளியீடு
மேலும் கூறுவதானால், இந்நாட்டு வாசகர்களின் வாசிப்பு ரசனைக்குத் தீனி போடும் வகையிலும், நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் முகமாகவும் வீரகேசரி 1970களில் நடத்திய மாதம் ஒரு நாவல் வெளியீடு, மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதையும் குறிப்பிடவேண்டும். திரு.எம்.ஜி.வென்சஸ்லாஸ் நிர்வாக பணிப்பாளராகப் பணிபுரிந்த அக்காலகட்டத்தில், அன்று நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த திரு.எஸ்.பாலச்சந்திரன், அன்றைய காலகட்ட ஆசிரியர்களான திரு.கே.வி.எஸ்.வாஸ், மற்றும் திரு. கே.சிவப்பிரகாசம், விளம்பர முகாமையாளர் ரி.சிவப்பிரகாசம் ஆகியோரின் அணுசரணையோடு, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை பதிப்பாளராக நின்று வெளியிட்டார். இது ஈழத்து பத்திரிகை உலகில் ஒரு தனித்துவச் செயற்பாடாக விளங்கியது என்றே கூறலாம்.
முன்னர் குறிப்பிட்டவாறு, 1983இல் ஏற்பட்ட இனக்கலவரம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியான அரசியல் சூழல்கள், இதனையடுத்து தலையெடுத்த ஈழப்போர் குறிப்பிட்டுக் கூறத்தக்கனவாகும். இவற்றிற்கு மத்தியில் தமிழ் மக்களது இடப்பெயர்வு, புலப்பெயர்வு, மற்றும் அவர்களது நெருக்கடியான வாழ்க்கை நிலை ஆகியன அவர்களைப் பிரதிபலித்து நின்ற வீரகேசரியையும், ஸ்தாபனப் பத்திரிகைகளையும் ஓரளவு பாதித்து நின்றன என்றே கூறலாம்.
டிஜிற்றல் தொழில்நுட்பம்
எனினும், வீரகேசரி ஸ்தாபனத்தின் தளராத பொதுப் பணிக்கு, எம்மிடையே 1990களில் அறிமுகமாகி, நடைமுறைக்கு வந்த டிஜிற்றல் தொழில்நுட்பம் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது. இப்புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட இளையோர் பலர், சேவையில் சேர்த்துக்கொள்ளப்படவேண்டியவர்கள் ஆயினர்.
இதனால், அதுகால வரை, கையால் அச்சுக் கோர்க்கும் பணியினை மேற்கொண்டுவந்த பழைய ஊழியர்கள் பலர், வேலையை விட்டு நீக்கப்படும் ஒரு சூழ்நிலை தோன்றியதும் பின்னர், அந்நெருக்கடி சுமுகமாகத் தீர்க்கப்பட்டதும் வரலாறாகும்.
எனினும், டிஜிற்றல் தொழில்நுட்ப வாய்ப்பினால் (Digital Technology) புதிய சகத்திரள் புலர்வுடன் (2000ஆம் ஆண்டு) பல புதிய பத்திரிகைகளைத் தோற்றுவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அவ்வேளை, நிர்வாக முகாமையாளராகப் பதவியேற்ற திரு.குமார் நடேசன் சில புதிய பத்திரிகைகளின் வருகைக்குப் பெரும் ஊக்கம் அளிப்பவராக இருந்தார்.
ஏற்கனவே வெளிவந்த Weekend Express பத்திரிகையுடன், விடிவெள்ளி, Metro News, சோதிடகேசரி, சுகவாழ்வு, கலைக்கேசரி, சூரியகாந்தி, ஜீனியஸ் எனப் பல்வேறு பத்திரிகைகளும் வெளிவந்தன. மக்களின் வாசிப்பு இரசனையையும் தகவல் அறியும் ஆர்வத்தினையும் அறிவுத் தேடலையும் இவை மேம்படச் செய்தன. தற்போதும் சில பத்திரிகைகள் தொடர்ந்தும் பணியாற்றுகின்றன.
மேலும், அச்சு ஊடகத்துறைக்கு டிஜிற்றல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பெரும் சவால் தோன்றியிருப்பதும் நாமறிந்ததே. இத்தாபனமும் இந்நிலையைக் கருத்தில் கொண்டு, இணையத் தொடர்புகளை விஸ்தரித்து வந்துள்ளதை வாசகர்கள் அறிவர். இத்தகையதோர் பின்னணியில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஸ்தாபனமும் இணையப் பத்திரிகை மூலமும் (www.virakesari.lk) செய்திகளையும் மற்றும் விடயங்களையும் சிறப்பாக வழங்குவதில் முன்னணியில் நிற்பதைக் காணலாம். இவ்விதமே ஏனைய பத்திரிகைகளும் இணையத் தொடர்பு உடையனவாக விளங்குகின்றன.
எவ்வித வேறுபாடுகளுமின்றி கடந்த 95 வருடங்களாக சேவைபுரிந்து, தமிழ்ப் பேசும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் வீரகேசரி, நூற்றாண்டைக் கொண்டாடவும், அவர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை என்னும் மூலதனத்தைக் கொண்டு எதிர்வரும் காலங்களிலும் செயற்பட்டு, பெருமை பெற்றுத் திகழவும் மனப்பூர்வமாக வாழ்த்துவோம்!
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM