வடமராட்சி கிழக்கில் மக்களின் 7.8 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  அனுர பிரியதர்சன ஜாப்பா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரால் இவ்வீதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களிற்கு அபாய நிலையின் போது வெளியேறுவதற்கு உரித்தான வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்தது.

குறித்த வீதியை புனரமைப்புச் செய்வதற்கு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவ்வீதி அமைப்புக்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

குறிப்பாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பல தடவை இவ்விடயம் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவினாலும், அப்பகுதி மக்களினாலும் சுட்டிக்காட்டப்பட்ட  போதும் அவ்வீதி அமைப்புக்கான நிதி மூலங்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அப்பிரதேச மக்கள் இணைந்து அப்பிரதேசத்தில் இருந்து புலம்பெயர் நாடுகளில் வசித்து வருபவர்களுடைய பங்களிப்புடன் குறித்த வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. சுமார் 78 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீதி அமைக்கப்பட்டுள்ளது.

மக்களுடைய பங்களிப்பில் அமைக்கப்பட்ட வீதியானது அனர்த்த முகாமைத்துவ பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்  மேலதிகமாக 12 மில்லியன் ரூபா செலவில் அவ்வீதி புனரமைக்கப்பட்டது.

இவ்வாறு புனரமைக்கப்பட்ட வீதியே இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவினால்  சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.