(எம்.சி.நஜிமுதீன்)

பாடசாலை கல்விக் கால எல்லையை ஒரு வருட காலத்தினால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை தரம் பத்திலும் உயர்தரப் பரீட்சையை தரம் பன்னிரெண்டிலும் நடத்துவதற்கு அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

மேலும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பப்பிரிவாகவும் தற்போது தரம் ஆறு முதல் தரம் ஒன்பது வரை வரையறுக்கப்பட்டுள்ள கனிஷ்ட பிரிவை தரம் ஆறு முதல் தரம் எட்டு வரை வரையறுப்பதற்கும் அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும் தரம் ஒன்பது முதல் தரம் பன்னிரெண்டு வரையிலான நான்காண்டு கல்வி நடடிக்கைகளை சிரேஷ்ட பிரிவுகளாகவும் வரையறுப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.  

அத்துடன் நான்கு வயது பூர்த்தியடைந்த பிள்ளைகளை அரசாங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் அனுமதிக்க வேண்டியுள்ளதுடன் அம்முன்பள்ளிகள் அனைத்திலும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

சாதாரண கல்வி தொடர்பில் தேசிய கல்வி ஆணைக்குழு முன்வைத்துள்ள கொள்ளைகைத்திட்டத்திலேயே மேற்குறிப்பிட்ட யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த யோசனைகள் அடங்கிய திட்ட வரைபு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.