மாத்தளை, மஹாவெல பல்தெனிய பகுதியில் உணவிற்காக கறி கேட்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குதில் முடிவடைந்ததில் மாமியார் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலை மேற்கொண்ட கணவன் தனது மனைவியிடம் இரவுணவின் போது கறி கேட்டுள்ளார். கறியை கொடுப்பதற்கு மனைவி மறுத்துள்ள நிலையில் அங்கிருந்த கத்தியால் மனைவியைத் தக்கியுள்ளார்.

இந்நிலையில் தனது தாயார் தாக்கப்படுவதை அவதானித்த மகள் தாக்குதலை தடுப்பதற்காக முயன்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் தனது மகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவத்தை அவதானித்த மாமியார், தனது மகள் மற்றும் பேத்தி ஆகியோரைக் காப்பாற்றுவதற்காக சென்ற நிலையில் மாமியார் மீது சரமாரியா கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளார். இச் சம்பவத்தை அறிந்த மனைவியின் சகோதரி சம்பவ இடத்திற்கு வந்தபோது அவரையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இரத்தப் பெருக்கால் 58 வயதுடைய மனைவியின் தாயாரான மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மனைவி மற்றும் மகள் ஆகியோரை மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

கத்திக்குத்தை மேற்கொண்ட 51 வயதுடைய நபரை மாத்தளை, மஹாவெல பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.