புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் இனியும் காலம் தாமதிக்கக் கூடாது

Published By: Digital Desk 2

03 Aug, 2025 | 05:20 PM
image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உரிய அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் மேலெழுந்து வருகின்றது. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியானது வாக்குறுதி வழங்கியிருந்தது.

ஜனாதிபதி தேர்தலின் போதும், பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போதும் இதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும் என்று உறுதி வழங்கப்பட்டிருந்தது.

அதுவும் நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து, இந்தப் பணியை பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு, தேர்தல் முறை மாற்றம் என்பவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான தீவிர முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த வழிநடத்தல் குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த கட்சிகளது தலைவர்கள் அங்கம் வகித்திருந்தனர். இந்தக் குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கம் வகித்திருந்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பான சகல கலந்துரையாடல்களிலும் இவரும் பங்கேற்றிருந்தார்.

அன்று இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஒருமித்த நாட்டுக்குள் மாகாணங்களுக்கு மீளப் பெற முடியாத அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த இரா. சம்பந்தன் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் இந்த செயன்முறையிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி வந்தார். பல்வேறு விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்று அவர் பேரார்வம் கொண்டு செயற்பட்டிருந்தார்.

இவ்வாறு புதிய அரசியலமைப்பு தொடர்பில் இடைக்கால அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டும் இருந்தது. ஆனால், அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது. இதற்கு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தவறான அரசியல் தீர்மானங்களும் காரணமாக அமைந்திருந்தன.

தற்போது தேசிய மக்கள் சக்தியானது இந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடைநடுவில் கைவிடப்பட்ட செயல்முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவே வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று பத்து மாதங்கள் கடந்துவிட்டன. அரசாங்கம் பதவியேற்று எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. இருந்தபோதிலும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடர்பில் அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக தெரியவில்லை.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தற்போது முயற்சிக்கின்றது. அந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் கண்ட பின்னரே புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்று அரசாங்கத் தரப்பில் கருத்து கூறப்பட்டு வந்தது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, “புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பக்கட்ட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்” என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்குத் தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படைச் சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும் போது அது தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள் குழுக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில் அதனை மேற்கொள்ள முடியாது” என்றும் கூறியிருக்கின்றார்.

“அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும் போது அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அனைத்து தரப்பினரது கருத்துக்கும் செவிசாய்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக மக்கள் மயமான அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால், புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சமூக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துகளும் செவிசாய்க்கப்படும். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்னமும் ஒரு வருடம் கூட செல்லவில்லை. இன்னும் எங்களுக்கு நான்கு வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்பட தேவையில்லை. எமது ஆட்சிக்காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்” என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்தக் கருத்தானது புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் யாரும் அவசரப்படத் தேவையில்லை என்பதை குறிப்பதாகவே அமைந்திருக்கின்றது. அதுவும், அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அவர் கருத்துரைத்துள்ளாரே தவிர, புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்பதுவும் அவரது கருத்திலிருந்து நன்கு புலப்படுகின்றது.

அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருகின்றமையானது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியிருக்கின்றது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டுக்கு எதிராக எதிரணியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீதி, அரசியமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினூடாகவே நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை தெளிவுபடுத்த வேண்டும். இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் என்பது வெறும் கானல்நீராகும் என்று தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் கருத்தானது தமிழ்த் தேசிய கட்சிகளின் கருத்துகளை ஒத்ததாகவே அமைந்திருக்கின்றது. புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. அதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்த விடயத்தில் இழுத்தடிப்பு போக்கை மேற்கொண்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்போம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்றெல்லாம் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. ஆனால், செயற்பாட்டளவில் எந்தவொரு விடயமும் முன்னோக்கி நகரவில்லை என்பதே யதார்த்தமாக காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியலமைப்பை எடுத்து நோக்கினால் அது பல கட்டங்களை கடந்து வந்திருக்கின்றது. 1931இல் டொனமூர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. 1948இல் சோல்பரி அரசியல் யாப்பாக அது மாறியது. அதன் பின்னர் 1972 மற்றும் 1978இல் குடியரசு அரசியலமைப்பாக அது மாற்றப்பட்டது. 1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பானது இதுவரை 21க்கும் மேற்பட்ட திருத்தங்களை சந்தித்துள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயம் தொடர்பிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை இல்லாதொழிக்கும் விவகாரம் குறித்தும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்க காலங்களில் ஆராயப்பட்டிருந்தது, வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தன. ஆனால், எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சகல இன மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக செயற்பட வேண்டியுள்ளது. ஏனெனில், கடந்த தேர்தல்களில் நாட்டின் சகல இன மக்களும் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருந்தனர். இந்த அரசாங்கமானது தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று மக்கள் நம்பியிருந்தனர். எனவே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் இனியும் தாமதிக்காது துரிதப்படுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13
news-image

பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

2026-06-15 09:40:38
news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41
news-image

தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே...

2026-04-19 12:15:35