சரண்டர் - திரைப்பட விமர்சனம்

01 Aug, 2025 | 05:11 PM
image

சரண்டர் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : அப்பீட் பிக்சர்ஸ்

நடிகர்கள் : தர்ஷன் தியாகராஜா, லால், சுஜித் சங்கர், பாடினி குமார், மன்சூர் அலிகான், முனிஸ்காந்த் மற்றும் பலர்.

இயக்கம் : கௌதமன் கணபதி

மதிப்பீடு : 3/ 5

'பிக் பொஸ்' மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமாகி, 'கூகுள் குட்டப்பா' மற்றும் 'நாடு' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் தர்ஷன் தியாகராஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சரண்டர்'. லால் - சுஜித் சங்கர் போன்ற திறமையான கலைஞர்கள் நடித்திருப்பதாலும்... படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாலும், பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு  மன நிறைவை அளித்ததா? இல்லையா ?என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் செயல்பட்டு வரும் திருமழிசை காவல் நிலையத்தில் பயிற்சி பெறும் உதவி ஆய்வாளர் எனும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார் கதையின் நாயகனாக தர்ஷன். அந்த காவல் நிலையத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஓய்வு பெறும் நிலையில் மூத்த காவலராக லால் பணியாற்றுகிறார்‌. 

விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய அனுமதி பெற்ற துப்பாக்கியை சரண்டர் செய்ய வருகிறார்.‌ அந்த சரண்டர் செய்யப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களுடன் காணாமல் போகிறது. அதே தருணத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சுஜித் சங்கர்-  தேர்தல் நிதியாக அரசியல் கட்சி ஒன்றிற்கு இந்திய மதிப்பில் பத்து கோடி ரூபாயை நிதியாக வழங்குகிறார்.

இந்த நிதியும் சிலரின் சதி மற்றும் பேராசை காரணமாக உரியவர்களிடம் சென்று சேராமல்.. இடையில் காணாமல் போகிறது. அரசியல் கட்சியின் உள்ளூர் பிரதிநிதி ஒருவர் தன்னுடைய அரசியல் எதிரியை பழிவாங்குவதற்காக துப்பாக்கி ஒன்றினை சொந்தமாக வாங்க விரும்புகிறார். இதற்காக துப்பாக்கியை கள்ள சந்தையில் விற்கும் கும்பலை தொடர்பு கொள்கிறார். அவர்களை சந்திக்கவும் பயணிக்கிறார். இந்த மூன்று விடயங்களும் ஓரிடத்தில் சந்திக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? என்ன ஆனது? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

முதலில் இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை மனதாரப் பாராட்டலாம். அதிலும் பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் திரைக்கதையை அமைத்து உச்சகட்ட காட்சி வரை ரசிகர்களை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அழைத்துச் சென்றிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

அரசியல்வாதிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பு-  சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான தொடர்பு- சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயான தொடர்பு - காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள்  மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் இடையேயான வேலை சார்ந்த அரசியல் ஆகியவை நம்பக தன்மையுடன் விவரிக்கப்பட்டிருப்பதால் ரசிக்க முடிகிறது.

காவலராக பணியாற்றுபவர்கள் தங்கள் கண்முன் சட்டத்தை மீறிய செயல் நடைபெற்றாலும்... அதனை கண்டிக்க முடியாமலும், தண்டிக்க முடியாமலும் உயரதிகாரிகளின் நடவடிக்கையை கண்டு ஆத்திரப்படும் போதும்.. அதற்காக அவமானப்படும் போதும் ... காவலர்களின் மன உணர்வு எப்படி இருக்கும் என்பதை பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தப்படுவதால்.. படைப்பின் நோக்கம் நிறைவேறுகிறது. இந்த இடத்தில் அற்புதமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் இடம்பெற வைக்கிறார் நடிகர் லால்.

பயிற்சி பெறும் உதவி காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்ஷன் தியாகராஜா - பொலிஸ் சீருடையில் பொருத்தமாக தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். எம்மை தமிழ் சினிமா நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் நிரூபித்திருக்கிறார்.

லால், தர்ஷன் தியாகராஜா ஆகியோரைக் கடந்து வில்லனாக நடித்திருக்கும் சுஜித் சங்கரும், அவருடைய தம்பியாக நடித்திருக்கும் கௌஷிக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர் - படத்தொகுப்பாளர் - தங்களுடைய பங்களிப்பை நிறைவாக செய்து, ரசிகர்களுக்கு அற்புதமான படமாளிகை அனுபவத்தை வழங்குகிறார்கள்.

சரண்டர் -  கோல்ட் மெடலிஸ்ட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right