தயாரிப்பு : சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபோர்ச்சூன் ஃபோர் சினிமாஸ் & ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்ய ஸ்ரீ போர்சே , வெங்கிடேஷ், ரோகிணி மற்றும் பலர்.
இயக்கம் : கௌதம் தின்னனூரி
மதிப்பீடு : 2.5/5
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்து பான் இந்திய நட்சத்திர நடிகராக முன்னேறுவதற்கு கடுமையாக உழைத்து வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கிங்டம்'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
1990களில் கதை நடைபெறுகிறது. காவல் நிலையம் ஒன்றில் காவலராக சூரி ( விஜய் தேவரகொண்டா) பணியாற்றுகிறார்.
இவர் சிறிய வயதில் தந்தையை கொன்றுவிட்டு ஓடிப்போன தனது மூத்த சகோதரர் சிவா( சத்யதேவ்) வை கண்டுபிடிக்க பதினெட்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நாள் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் சூரியிடம், 'உம்முடைய சகோதரர் சிவா இலங்கையில் உள்ள ஒரு தீவில் அகதிகளாக புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களின் உதவியுடன் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு, அந்த கும்பலின் தலைவராக செயல்பட்டு வருவதாகவும், அவரை இங்கு மீண்டும் அழைத்து வரவேண்டும் என்றால் உளவாளியாக அங்கு செல்ல வேண்டும் ' என்றும் கூறுகிறார்.
ஆபத்துகளும், சவால்களும் நிறைந்த இந்த பணியை சூரி ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு என்ன நடைபெறுகிறது? அவர் தனது சகோதரர் சிவாவை கண்டுபிடித்தாரா? இல்லையா? அவரை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வந்தாரா? இல்லையா? என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிப்பது தான் 'கிங்டம் 'படத்தின் கதை.
இப்படத்தின் கதைக்களம் இலங்கைக்கு அருகே உள்ள திவி எனும் தீவின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டு அடைக்கலமான ஆதிவாசிகள். இவர்கள் தங்களுக்கான மீட்பரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மனித வளத்தை இலங்கையை களமாக கொண்டு செயல்படும் தங்க கடத்தல் கும்பல் ஒன்று பாவித்துக் கொள்கிறது.
இந்நிலையில் சகோதரனை கண்டறிவதற்காக இலங்கைக்குள் சிறைவாசியாக பிரவேசிக்கும் சூரி உளவாளியாக மாறி, தன் சகோதரனை கண்டறிகிறார். அத்துடன் சகோதரனின் கும்பலுடன் இணைந்து அந்த வலை பின்னலை முழுவதுமாக தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு தான் திரைக்கதை தடம் மாறி எதில் பயணிப்பது என தெரியாமல் குழப்பம் அடைந்து, பார்வையாளர்களையும் குழப்புகிறது. இருப்பினும் சில திரையரங்க அனுபவங்களை வழங்க தவறவில்லை.
முதல் காட்சியிலேயே கதை தொடங்கி விடுவதால் பார்வையாளர்களால் கதையுடன் பயணிக்க முடிகிறது. முதல் பாதி வரை சுவராசியமாக சென்ற திரைக்கதை இடைவேளை வரை தொய்வின்றி செல்கிறது. ஓரளவு உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பையும் எகிற வைக்கிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் கதை முதல் பாதியைப் போல் நேர்க்கோட்டில் பயணிக்காமல் தடம் மாறுவதால் எரிச்சலும், சோர்வும் எட்டிப் பார்க்கிறது. அதிலும் இலங்கை கப்பற்படையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தங்கத்தை எளிதாக கடத்துகிறார்கள் என திரையில் விவரித்திருப்பது அப்பட்டமான அக்மார்க் சினிமாத்தனம்.
கதையின் நாயகனான சூரி எந்த நோக்கத்திற்காக உளவாளியாக மாறி இலங்கைக்குள் பிரவேசித்தாரோ...! அந்த நோக்கம் நிறைவேறியதா ?என்றால் இல்லை. அதே தருணத்தில் பழங்குடி மக்களின் மீட்பராக சூரியை காட்சிப்படுத்தி இருப்பதும், அதற்கான அழுத்தமான பின்னணி விவரிக்கப்படாததால் அல்லது குழப்பத்துடன் அதாவது ஏராளமான வினாக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதால் மனதை எந்த வகையிலும் சிறிதளவிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
பொதுவாக இது போன்ற நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் கதையின் நாயகன் தனது இலக்கை வெற்றிகரமாக அடைய வேண்டும் அல்லது அதைவிட மிகப்பெரிய தான ஒன்றை அவர் சாதித்து அடைய வேண்டும். ஆனால் இவற்றில் எதுவுமே நேர்த்தியாக காட்சிப்படுத்தப்படாததால் உச்சகட்ட காட்சியும், அதற்கு முன்னதாக நடைபெறும் மனித படுகொலைகளும் இதற்காக வில்லன் அளிக்கும் விளக்கமும் குழப்பத்தை தான் உண்டாக்குகிறது. படைப்பின் நோக்கமும் இதனால் வீணாகிறது.
சூரி எனும் காவலராக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா கதையை முழுவதுமாக தன் தோளில் சுமந்திருக்கிறார். அவருடைய நடிப்பில் குறை ஒன்றும் காண இயலாது. அந்த கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து நடித்திருக்கிறார்.
சூரியின் சகோதரர் சிவாவாக நடித்திருக்கும் நடிகர் சத்ய தேவ் ( இவர் 'ஜீப்ரா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது) தன் கதாபாத்திரத்திற்கு அற்புதமான உழைப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம்பெறுகிறார்.
வைத்தியர் அனு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் திரை பங்களிப்பு குறைவு என்றாலும் அவரின் தோற்றமும், நடிப்பும் ஓகே ரகம்.
முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் வெங்கிடேஷ் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் இந்த திரைப்படத்திற்கு பக்க பலம். இவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவே ரசிகர்கள் பட மாளிகையில் இறுதிவரை படத்தை அமர்ந்து ரசிக்க முடிகிறது.
கதைக்களம் இலங்கை என்றாலும் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் சம்பந்தப்பட்ட நிலவியல் - சிங்கள, தமிழ் மக்களின் உரையாடல் , சிங்கள, தமிழ் எழுத்துரு போன்றவற்றில் முழுமை இல்லாதது குறை தான்.
கிங்டம் - போர்டம்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM