கலை வழியே கருணை – கதிரைவேற் பெருமாளுக்காக ஆன்மிக நாட்டிய நாடகம்!

31 Jul, 2025 | 05:03 PM
image

அபிலாஷனி லெட்சுமன்

படப்பிடிப்பு - சுஜீவகுமார்

இசை, நடனம் மற்றும் நாடகத்தன்மை ஆகியவற்றை ஒத்திசைந்த ஒரு முழுமையான கலை வடிவமாகவும், கதிரைவேற் பெருமாளின் கருணையை அழைக்கும் ஒரு ஆன்மிகப் பக்தி வெளிப்பாடாகவும், பாரம்பரியக் கலையின் பிரமாண்ட வடிவமாகவும், சமுதாய விழிப்புணர்வும் ஆன்மிகக் கருத்துகளும் உட்பொதிந்த வடிவமாகவும், ஸ்ரீமதி திவ்யா சுஜேனின் நெறிப்படுத்தலில் “கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே!” என்ற தலைப்பில் சிறப்பாக நாட்டிய நாடகம் மேடையிலே பிரம்மாண்டமாக நிகழ்த்தப்பட்டது.

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநரும் நிருவுனருமான ஸ்ரீமதி திவ்யா சுஜேனின் நெறியாள்கையில் “கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே!” நாட்டிய நாடகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை 20ஆம் திகதி கொழும்பு, பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ,மனித நேய அமைப்பாளர் அபிராமி கைலாசபிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி , எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் மற்றும் கெபிடல் மகா ராஜா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஸ் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியஸ்த்ரத்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனும், புகழ்பெற்ற இசை அமைப்பாளருமான ஸ்ரீ ராஜ்குமார் பாரதி, இந்த நாட்டிய நாடகத்திற்கு இசை வடிவாக்கத்தை வழங்கியதோடு, நாடகத்தின் ஆழத்தை இசையினூடாக பெருமைப்படுத்தினார்.

மேலும், ஸ்ரீ சாய் ஷ்ரவணம் கீபோர்ட் மற்றும் ஒலி வடிவமைப்பை சிறப்பாக வழங்கியதோடு, வாய்ப்பாட்டு - ஸ்ரீ ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ ஆர்.பி.ஷ்ரவன், ஸ்ரீமதி க்ருத்திகா அரவிந்த் ஆகியோரும்,(மிருதங்கம்) ஸ்ரீ கார்த்திகேயன் ராமநாதன் , (தாள வாத்தியங்கள்) ஸ்ரீ கணபதி வெங்கட சுப்ரமணியன் , (வயலின்) ஸ்ரீ எம்பார் கண்ணன் , (புல்லாங்குழல்) ஸ்ரீ நவின் சந்தர் , (வீணை, ஸ்வரமண்டல்) ஸ்ரீ வி.வி.சுப்ரஹ்மண்ய சர்மா , (சிதார்) ஸ்ரீ கிஷோர் குமார் , (நாதஸ்வரம்) ஸ்ரீ அடையார் D.பாலசுப்பிரமணி ஆகியோரினது  இசைப் பங்களிப்போடு இந்நாட்டிய நாடகம் நிகழ்த்தப்பட்டது. 

இந்தியா மற்றும் இலங்கை நடன இசைக்  கலைஞர்கள் சுமார் 130ற்கும் மேற்பட்டோர் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றியமை சிறப்பம்சமாகும்.

இசை மூலம் உயிர் பெற்று,நடனம் மூலம் உணர்வுகள் பேசி,நாடகத்தன்மை மூலம் ஒரு ஆன்மிகப் பயணத்தை வெளிப்படுத்திய நாட்டிய நாடகமாக கருதவேண்டும். 

பரதநாட்டியத்தின் பரிமளத்துடன் துவங்கிய இந்த நாடகம், தெய்வீக பக்தி உணர்வுகளை தழுவி, கதிரைவேற் பெருமாளின் கருணை சிறப்பை பிரதிபலிக்கும் வண்ணம்  புனித கதிர்காமக் கோவிலின் வனப்பகுதியை பின்னணியாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது.

சமுதாய விழிப்புணர்வையும், புனித வாழ்க்கை நெறிகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் இந்நாடகம் முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அடவுகள், முகபாவங்கள், முத்திரைகள் – அனைத்தும் முருகக் கடவுளின் பக்தியின் தனிமனித பயணத்தை நெஞ்சை நெகிழ வைக்கும் விதத்தில் கொண்டு சென்றது.

இந்நாட்டிய நாடகம், பார்வையாளர்களின் உள்ளங்களில் ஆழமான ஆனந்த அனுபவத்தை ஏற்படுத்தியது. அது ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்ல, ஒரு ஆன்மிக விழிப்புணர்வு நிகழ்வாகவும் பிம்பமாகியது. “கருணை தேவே” என்ற அழைப்பு வாக்கியம், ஒவ்வொரு உள்ளத்திலும் ஒரு பக்திப் படிகமாக பிரதிபலித்தது.

கதிரைவேற் பெருமாளே! கருணை தேவே!” என்ற நாட்டிய நாடகத்தில், முருகனும் வள்ளியும் இடையே மலரும் காதல் பாவனைகள், யாழிசை போல மென்மையான இயற்கைக் காட்சிகளோடு நெஞ்சைத் தொட்டன. வள்ளி முருகனை எதிர்பார்க்கும் உள்ளக உணர்வு எல்லாம் இயற்கையாக மேடையில் பிரதிபலிக்கும் படி அரங்கேற்றப்பட்டது.

மலைக் குருகுகள் இசைக்கும் ஒலியில், வள்ளியின் கூந்தலில் காற்றாடிய மலர் நுழையும் காட்சியில், முருகன் தனது குரும்புத்தனத்துடன் தோன்றும் விதம் பார்வையாளர்களை  மெய்சிலிர்க்க வைத்தது. 

முருகக் கடவுளுக்கும் வேடர் குல கண்ணிக்கும் இடையில் , இயற்கையின் இடையே நிகழும் பரிசுத்தமான காதலையும், அதைச் சுற்றியுள்ள சிரிப்பும், சந்தோஷமும் நன்கு வெளிப்படுத்திய நாட்டிய நாடமாக காணப்பட்டது.

ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காமக் கந்தன் காட்சி அளித்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கும் முகமாகவும் கதிர்காமக்கோயில் முருகன்  பெயரில் கட்டப்பட்டமையினை  நாட்டிய நாடகம் எடுத்தியம்பிய பெருமை ஸ்ரீமதி திவ்யா சுஜேனையும் இசை நடன கலைஞர்களையுமே சாரும் .

முருகனுக்கு வேடுவர்களின் வழிபாடு, சாதாரண பாசாங்கற்ற பக்தியின் பிரதியாக காட்சியளித்தது.

அரச மரத்தடியில் தீபம் ஏற்றி, பாடல்கள் மூலம் காடின் நடுவே வழிபாடு நடத்தும் காட்சிகள், ஆன்மிகத் தாக்கத்தை வழங்கின. மாணிக்கங்கை, கதிர்காமத்தில் பாயும் புனித நதி, திருமணப் புனிதத்தை வலியுறுத்தும் முக்கியக் கூறாக செயல்பட்டது. அந்த ஆற்றங்கரையில், வள்ளியுடன் முருகன் திருமண பந்தத்தில் இணையும் காட்சி, நாடகத்தின் உச்சக்கட்டமாக அமைந்தது.

நாடகத்தின் முக்கியமான அம்சமாக, வேடுவர் சமூகத்தின் இயற்கை அடித்தள வாழ்க்கை, பசுமை சார்ந்த கலாசாரம், மனிதம் மற்றும் மரபு கலந்த வாழ்க்கை வழி ஆகியவை வெளிப்படுத்தப்பட்ட நெறியாள்கையாக காணப்பட்டது.

வேடுவர் பெண்களின் நுட்பமான நடனங்கள், அவர்களது பக்தியும் பழங்கால தமிழ் நாகரிகம் பற்றிய விழிப்புணர்வும் நாடகத்தின் கலையுருப்பாக விளங்கின.

ஸ்ரீமதி திவ்யா சுஜேனின் நெறிப்படுத்தலில் அரங்கேறிய “கதிரைவேற் பெருமாளே! கருணை தேவே!” என்ற நாட்டிய நாடகத்தில் பாரம்பரியத்தையும் புராணங்களையும் புனிதமென இணைக்கும்  பல பரிமாணங்களை கொண்ட முழுமையான மேடை நிகழ்வாக காணப்பட்டது.

அதாவது, சீதையைத் தேடி காட்டில் புகுந்த அனுமான் வந்து சேரும் காட்சியை விசித்திரமான பாவங்களோடும் சீதையின் தனிமையின் வெளிப்பாடு என்னும் அம்சங்களை வலியுறுத்திய நாட்டிய நாடகமாக காணப்பட்டது.

பரதநாட்டியம் மற்றும் “களரி” நடனக் கலைஞரான மிருதுளா ராய் மற்றும் அவரது “நாட்டிய நிகேதன் நடனப்பள்ளி” மாணவிகளும் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தில் பங்குபற்றுவதோடு, இந்திய பரதநாட்டியக் கலைஞரான வித்யா அரசும் நடனமாடியமை குறிப்பிடத்தக்கது.

இளம் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்றமை ஒரு முக்கிய சிறப்பம்சமாகத் தோன்றியது. 

நாட்டிய நாடக வரலாற்றில் பெருமையாக போற்றப்படும் பேராசிரியர் சி. மௌனகுரு சின்னையா அவர்களின் பங்கேற்பு, நாடகத்திற்கு மேலும் ஓர் அழகு சேர்த்தது. அவருடைய பங்களிப்பு, நாட்டியத்தின் கலைநிலையை மெருகூட்டியது.

விஜயனின் வருகை முதல், கதிர்காமக் கோயிலுக்கு இலங்கை அரசர்களால் செய்யப்பட்ட பங்களிப்புகள் குறித்து மகாவம்சம் குறிப்பிடுகின்றது. 

இலங்கையின் முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கதிர்காமக் கோயிலுடன் பல அரசர்கள் ஆன்மிகத் தொடர்பு கொண்டிருந்தமை, மற்றும் அவர்கள் ஆற்றிய திருப்பணிகள் பற்றிய வரலாறு, இந்நாட்டிய நாடகத்தின் ஊடாக மிக அழகாகவும் வியப்பூட்டும் வகையிலும் வெளிப்படுத்தப்பட்டது.

பாரம்பரியமும் பக்தியும் ஒரு புனிதத் தலமாக விளங்கும் கதிர்காமக் கோயிலின் வரலாறு, மேடையில் நவீன ஒளி, ஒலி மற்றும் தொழிநுட்பங்கள் மூலம் உயிர்ப்பிக்கப்பட்டது. 

அதாவது, அழகிய மேடை அமைப்புகள், ஒளி மற்றும் ஒலி தொழில்நுட்பங்களின் சிறப்பான துணையுடன், இயற்கைச் காட்சிகள், பக்தி உணர்வுகள் மற்றும் மாட்சிமையைக் கலைநயத்துடன் உருவாக்கிய இந்த நாட்டிய நாடகம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

நெருப்பு விளக்குகளால் உருவாக்கப்பட்ட தேவதீப ஒளிக்கதிர்கள், திடுக்கிடும் ஒலி அதிர்வுகள், மெல்லிசை இசைக்கு ஏற்ப நடன கலைஞர்களின் நுட்பமான அசைவுகள், இதையெல்லாம் ஒருங்கிணைத்த நாடகம், கதிர்காமக் கந்தனின் ஆன்மிகம் மற்றும் மாந்தருக்கு அளிக்கும் அருள் என்பதை மனதிற்குள் ஊன்றியது.

மேடை அமைப்பில் கேடவுள் வழிபாடு , வன காட்சிகள் மற்றும்  பக்தர்கள் ஊர்வலமாக வருவது போன்ற காட்சிகள், ஒளியின் சாயல்கள், ஒலியின் லயங்கள் மற்றும் நடனத்தின் வெளிப்பாடுகளால் தெளிவாக எடுத்தியம்பப்பட்டன.

“கதிரைவேற் பெருமாளே! கருணை தேவே!” என்பது வெறும் கலை நிகழ்வு அல்ல,இது தமிழ் மரபை, முருக பக்தியை, இயற்கை நம்பிக்கையை, மற்றும் மனிதன்–இயற்கை உறவை வலியுறுத்தும் ஒரு புனிதமான பயணமாக இருந்ததோடு, இவ்வாறான நாட்டிய நாடகங்கள், இன்றைய தலைமுறையிடம் பாரம்பரியத்தையும் ஆன்மீகத்தையும் உறுதியாகப் பரப்பும் பணியை செய்கின்றன.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில், 

இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த  மத காலாசார நிகழ்வு. இலங்கையில் மத கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த வொன்று. மொழி, மக்கள், காலாசாரம், சமயம், நாகரீகம் உயர்ந்தளவில் காணப்படுவதை பார்த்துள்ளேன். 

இங்கு இடம்பெற்ற நடனங்கள் இலங்கை இந்தியா கலாசாரம் தொடர்பை விளக்குகிறது.இங்கு இடம்பெற்ற நடனங்கள் இலங்கை இந்தியா நாகரீகம் தொடர்பை விளக்குகிறது.

இந்த இந்தியா மற்றும் இலங்கை நடன கலைஞர்கள் பொதுவான நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர்.

நாட்டிய நாடகம் என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய கூறாகும். இது பாரம்பரியத்தையும், சமகாலத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. இசை, நடனம், நாடகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக, இது பார்வையாளர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவங்களை வழங்குகியது. என மேலும் தெரிவித்தார்.

இதன்போது ஸ்ரீ ராஜ்குமார் பாரதி கருத்து தெரிவிக்கையில், 

கலை என்பது வழிவழியாக வளர்ந்துக் கொண்டே தான் இருக்கும் என்பதற்கு சான்று நான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக திருக்கேதீஸ்வரத்தான் என்ற நாட்டிய நாடகம் நிகழ்த்தப்பட்டது. அதற்கு இசை அமைக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இன்று கதிர்காம கந்தனுக்கு அர்ப்பணிக்கப்படும் நாட்டிய நாடகத்துக்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஸ்ரீமதி திவ்யா சுஜேன் இலங்கைக்கு கிடைத்த சிறந்த கலைஞர். சிறந்த கலைஞராக தனது கலை தொண்டினை ஆற்றிவருகிறார்.இன்றைய மேடையில் நிகழ்த்தப்பட்ட நாட்டிய நாடகம் மிக சிறப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நா்டிய நாடகம் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றன. இவை பாரம்பரியத்தையும், சமகாலத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுவது மகிழ்ச்சியே.

 “கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே!” என்ற தலைப்பிலான நாட்டிய நாடகத்தில் ஒரு பகுதியாக நானும் கலந்துக்கொண்டமை எனக்கு பெருமையாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28